மைத்திரி, ரணில் மோதல் தீவிரம்!

சமகால தென்னிலங்கை அரசியலில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலைகள் மற்றும் உள்ளக முரண்பாடுகள் காரணமாக நாட்டில் நிலவும் கூட்டரசாங்கம் தொடர்ந்தும் நீடிக்குமா என்ற கேள்வி அனைவரது மத்தியிலும் ஏற்பட்டுள்ளது.

அரசின் இரு தலைவர்களுக்கிடையில் பனிப்போர் வலுவடைந்துள்ளதாகவும், இதன் காரணமாக இந்த கூட்டரசாங்கத்தின் ஆயுள் நிறைவடையும் தருணம் நெருங்கிவிட்டதாகவும் அனைத்து தரப்பினராலும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.

அண்மைக்காலமாக அரசிற்குள் நிலவும் ஊழல் மோசடிகள் தொடர்பான குற்றச்சாட்டுக்களும், எதிர் எதிர் தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட மோதல் நிலைகளும், வாய்த்தர்க்கங்களும், வாக்குவாதங்களும் இந்த நிலையைத் தோற்றுவித்துள்ளன.

குறிப்பாக மத்திய வங்கியின் பிணை முறி மோசடி தொடர்பான விவகாரம்தான் கூட்டரசிற்குள் விரிசல்நிலை பூதாகரமாவதற்கு காரணம்.

எனினும், நாடு மீண்டும் ஒரு சர்வாதிகாரமிக்க, குடும்ப ஆட்சிக்குள் உட்சென்றுவிடக்கூடாது என்ற நோக்கில் செயற்படும் அரசியல் தலைமைகள் கூட்டரசாங்கம் முறிவடையும் நிலையை என்றும் உருவாக்க மாட்டார்கள் என தென்னிலங்கை அரசியல் அவதானிகள் குறிப்பிடுகின்றனர்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையிலே உள்ளக முரண்பாடுகள் தீவிரமடைந்தாலும் அதனை காரணமாக வைத்து இந்த கூட்டரசாங்கத்தை முடிவுக்கு கொண்டு வரமாட்டார்கள் என்ற நிலைப்பாடு காணப்படுகின்றது.

அவ்வாறானதொரு இக்கட்டான நிலை ஒன்று உருவாக தமிழ் மக்களின் ஏக பிரதிநிதியாக செயற்படக்கூடிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், அதன் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தனும் சரி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆஸ்த்தான ஆலோசகராக செயற்படும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவும் அனுமதிக்கமாட்டார்கள் என்பது நிதர்சனமான உண்மை.

அரச தலைவர்களுக்கிடையில் உள்ள முரண்பாடுகளை இயன்றளவில் ஒரு சுமூக நிலைக்குக் கொண்டு வந்து நல்லாட்சியின் ஆயுளை நீடிக்கத்தான் சம்பந்தனும், சந்திரிக்காவும் முயற்சிப்பார்கள்.

எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனைப் பொருத்த மட்டில் தான் இந்த அரசியல் பயணத்தை தொடரும் காலத்திற்குள் தமிழ் மக்களுக்கான ஒரு நிரந்தர தீர்வினை பெற்றுத்தரத்தான் எத்தணிப்பார்.

இவ்வாறு தமிழ் மக்களுக்கான நிரந்தர தீர்வினைப்பெற்றுக்கொள்ள வேண்டுமெனில் அதற்கு இந்த நல்லாட்சி அரசின் தேவைப்பாடு மிக அவசியமானது என்பதை உணர்ந்தவராகத்தான் இரா.சம்பந்தன் இதுவரையிலும் செயற்பட்டு வருகின்றார்.

அதேபோலத்தான், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவும், தான் ஜனாதிபதியாக இருந்து ஆட்சி செய்த காலத்தில் விட்ட தவறை மீண்டும் ஒரு முறை விட்டுவிடக்கூடாது என்ற நிலைப்பாட்டில் கண்ணும் கருத்துமாக இருக்கின்றார்.

தற்போது அரச தலைவர்களுக்கு இடையில் ஏற்பட்டுள்ள முரண்பாட்டின் தீவிரத்தால் கூட்டரசாங்கம் முடிவுக்கு வந்தால் மீண்டும் ஒரு முறை நாடும் சரி, அரசாங்கம் மற்றும் ஆட்சியும் சரி பழைய ஒரு சர்வாதிகார ஆட்சிக்கு சென்று விடும் என்ற காரணத்தினால் அரச தலைவர்களிடையே விரிசல் ஏற்பட சந்திரிக்கா அம்மையார் விட மாட்டார்.

அத்துடன், நாடு முழுவதிலும் உள்ள பாமர மக்கள் தொட்டு அனைவரிடத்திலும் அரச தலைவர்களுக்கு இடையில் ஒரு விரிசல் ஏற்பட்டுள்ளமை உணரப்பட்டுள்ள நிலையில் அரசில் முக்கிய பங்காளராக செயற்படக்கூடிய, எதிர்க்கட்சித் தலைவராக இருக்கக்கூடிய சம்பந்தன் இது குறித்து எந்த ஒரு நிலைப்பாட்டையும் வெளிப்படுத்தவில்லை.

மாறாக அரசிற்குள் எவ்வித குழப்ப நிலையிலும் இல்லாமல் ஒரு சுமூக நிலையில் செயற்படுவதுபோல அது தொடர்பில் தான் அலட்டிக்கொள்ளாமல் செயற்படுவதோடு, அவர் சார்ந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் அவ்வாறே செயற்படுகின்றனர்.

அதேபோல முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையாரும் அரச தலைவர்களிடையில் ஏற்பட்டுள்ள விரிசல் நிலை தொடர்பில் எவ்வித நிலைப்பாட்டையும் வெளிப்படுத்தவில்லை.

இதன்மூலமாக அவர்கள் கூட்டரசிற்குள் விரிசல் ஏற்படுவதை தடுப்பார்களேயன்றி, அதனை விரும்பமாட்டார்கள் என்பது புலனாகின்றது.

ஒரு அரசிற்குள் விரிசல்கள், குழப்ப நிலைகள், சலசலப்புக்கள் ஏற்படுவது இயல்பு ஆகையால் இதனைப் பெரிது படுத்தி பிரதமர் ரணிலுடனான தனது அரசியல் பயணத்தை முறித்துக்கொள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் விரும்ப மாட்டார்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நாட்டின் தலைவராக செயற்பட்டார், தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உலகுக்கு எடுத்துக்காட்டான தலைவராக செயற்படவே விரும்புகின்றார்.

எனவே கூட்டரசிற்குள் விரிசல் என்பது தற்போதைய சூழலில் சாத்தியப்படாத ஒன்றாக மாறிவிட்டது.

முடிந்தளவில் நாட்டின் நன்மை கருதி அரசிற்குள் ஏற்படக்கூடிய முரண்பாடுகளை தவிர்த்து நாட்டை ஆபத்தான கட்டத்தில் இருந்து மீளக்கொண்டு வரத்தான் மைத்திரி எத்தணிப்பார்.

மைத்திரியைப் பொருத்தமட்டில் தான் ஆட்சிக்கு வந்து சந்தித்த முதல் வெளிநாட்டு பிரதிநிதி என்றால் அது பரிசுத்த பாப்பரசர் புனித பிரான்சிஸ் அடிகளார்தான்.

அதன் தொடர்ச்சியாக, சமாதானத்தை வலுப்படுத்தும் நோக்கில் சர்வதேச ரீதியில் தனது அடுத்தடுத்த விஜயங்களை மேற்கொண்டிருந்தார்.

இது உள்நாட்டு அரசில் மாத்திரமல்ல, சர்வதேச நாடுகளின் தலைவர்களிடையேயும் மைத்திரிக்கு ஒரு தனி மரியாதையைப் பெற்றுத்தந்திருந்தது.

எனவே மைத்திரி தலைமையிலான இந்த கூட்டரசாங்கத்தை பாதுகாக்க எமது அயல் நாடுகளும் தீவிர முயற்சியில் ஈடுபடும் என்பது தென்னிலங்கை அரசியல் அவதானிகளின் கருத்து.

எது எவ்வாறாயினும், மைத்திரி, ரணில் உறவில் விரிசல் என்பது சகஜமெனினும் அது கூட்டரசாங்கத்தை பாதிக்காது என்பது உறுதி, அத்துடன் அவ்வாறான சூழலை தடுக்க சம்பந்தன் சார் தரப்பினரும் சந்திரிக்கா சார் தரப்பினரும் முழு மூச்சுடன் செயற்படுவார்கள் என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.