எதனால் மைத்திரி இதைச் செய்தார்?

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவையடுத்து இராப்போசன விருந்து ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையின் சுதந்திர நாளன்று பாரம்பரிய முறைப்படி, இலங்கை ஜனாதிபதியினால் இராப்போசன வரவேற்பு விருந்து ஆண்டு தோறும் நடத்தப்பட்டு வருகிறது. இதில், உள்நாட்டு, வெளிநாட்டு பிரமுகர்கள், இராஜதந்திரிகள் பங்கேற்பது வழக்கம்.

இம்முறையும், இந்த விருந்துக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு அழைப்பிதழ்கள் அனுப்பப்பட்டன. எனினும், அழைப்பிதழ் அனுப்பப்பட்ட வெளிநாட்டு தூதுவர்கள், மற்றும் இராஜதந்திரிகள், பிரமுகர்களுக்கு இந்த விருந்துபசார நிகழ்வு ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

தவிர்க்க முடியாத சூழ்நிலைகளால் நிகழ்வு ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக கடந்த வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உள்ளூராட்சித் தேர்தலுக்கு இன்னமும் நான்கு நாட்களே இருப்பதால், பரப்புரைகள் தீவிரமடைந்துள்ளன. இதனைக் கருத்தில் கொண்டே, சுதந்திர நாள் இராப்போசன வரவேற்பு ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே அழைப்பிதழ் கிடைத்த பலர், தமக்கு நிகழ்வு ரத்துச் செய்யப்பட்டமை தொடர்பான அறிவித்தல் கிடைக்கவில்லை என்றும் கூறியுள்ளனர்.

இந்த இராப்போசன விருந்திற்காக சுமார் 600 விருந்தினர்கள் பங்கேற்பர் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் ஜனாதிபதியின் உத்தரவையடுத்து இது ரத்துச் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.