உள்ளூராட்சித் தேர்தலுக்கு இன்னமும், ஆறு நாட்களே இருக்கின்ற நிலையில் அரசியல் கட்சிகளும், சுயேட்சைக் குழுக்களும் உச்சக்கட்டப் பிரசாரங்களில் இறங்கியுள்ளன.
இந்தத் தேர்தலில் ஒருவரை ஒருவர் தாக்குவதற்கும், பழிபோடுவதற்கும் தான் பிரசாரங்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டு வருகிறது.
நாளை மறுநாள் பாராளுமன்றத்தின் சிறப்பு அமர்வில், ஜனாதிபதி ஆணைக்குழுக்களின் அறிக்கைகள் குறித்த விவாதம் நடக்கவுள்ள நிலையில், தனிப்பட்ட முறையிலான குற்றச்சாட்டுகள், சேறு பூசல்களுக்கான வாய்ப்பு இன்னும் அதிகமாக இருக்கப் போகிறது.
வரும் 8ஆம் திகதி பிரசாரங்கள் ஓய்ந்த பின்னர், தேர்தலுக்காக செய்யப்பட்ட பிரசாரங்களை ஒருமுறை மீளாய்வு செய்யும் வாய்ப்பு வாக்காளருக்குக் கிடைக்கும்.
பெப்ரவரி 10ஆம் திகதி உள்ளூராட்சித் தேர்தலுக்குப் பின்னர், என்ன நடக்கப் போகிறது- அதனால் தங்களுக்கு என்ன நடக்கப் போகிறது- பிரதேசங்களின் அபிவிருத்தி எப்படி சாத்தியமாக்கப்படும் என்றெல்லாம் அவர்களின் முன்பாக எண்ணங்கள் ஓட வேண்டும்.
ஏனென்றால், இது உள்ளூர் அரசியலையும், அபிவிருத்தியையும் மாத்திரம் மையப்படுத்தி நடக்கின்ற தேர்தல். ஆட்சிமுறை பற்றியோ, அரசியல் வழிமுறைகள் பற்றியோ தீர்மானங்களை எடுக்கக்கூடிய தேர்தல் அல்ல.
ஆனால், வாக்காளர்களுக்கு பிரதேச அபிவிருத்தி பற்றிய எந்த நம்பிக்கையையும் கொடுக்காத- தேர்தல் பிரசாரங்கள் தான் இம்முறை பொதுவாக எல்லாக் கட்சிகளாலும் முன்னெடுக்கப்பட்ட நிலையில், யார் சிறந்த திட்டத்தை முன்வைத்தவர் என்று சிந்திக்க வேண்டிய தேவையொன்றும் வாக்காளர்களுக்கு இருப்பதாகக் கூற முடியாது.
உள்ளூராட்சித் தேர்தலை முன்வைத்து ஒவ்வொரு அரசியல் கட்சியும் முன்வைத்த அரசியல் விமர்சனங்களும், எச்சரிக்கைகளும், வாக்குறுதிகளும், தேர்தலுக்கு பின்னர் அரசியலில் என்ன நடக்கப் போகிறது என்ற கேள்வியைத் தான் வாக்காளர்கள் மத்தியில் எழுப்பியிருக்கிறது.
தேர்தல் பிரசாரங்களின் போது, ஒவ்வொரு கட்சிகளும் கூறிய குற்றச்சாட்டுகளையும், வாக்குறுதிகளையும் எடுத்துப் பார்த்தால், தேர்தலுக்குப் பிந்திய அரசியல் சூழல் கொதிநிலை கொண்டதாகத் தான் இருக்க வேண்டும்.
அந்த வகையில், தெற்கின் அரசியலை மையப்படுத்தியுள்ள இரண்டு விடயங்கள், யார் யாரெல்லாம் சிறைக்குப் போகப் போகிறார்கள் என்பது முதன்மையான விடயம். யார் ஆட்சியில் இருக்கப் போகிறார் என்பது இரண்டாவது விடயம்.
தேர்தலுக்குப் பின்னர் நடைபெறக் கூடிய மாற்றங்கள் என இந்த இரண்டையும் சுற்றித் தான் பெரும்பாலும், வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன.
மோசடியாளர்களை சிறைக்குள் தள்ளாமல் விடமாட்டேன் என்பது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின வாக்குறுதி. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் வாக்குறுதி, மோசடியாளர்களைக் காப்பாற்றமாட்டேன் என்ற வகையில் இருக்கிறது.
இங்கு மோசடியாளர்கள் என்பது யார்? முன்னைய ஆட்சிக்காலத்தில் கொள்ளையிட்டவர்களா – இப்போதைய ஆட்சிக்காலத்தில் கொள்ளையிட்டவர்களா அல்லது இரண்டு பேருமா? என்பது தான் கேள்வி.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவோ, முன்னைய தற்போதைய ஆட்சிக்காலத்தில் கொள்ளையடித்தவர்களைப் பற்றித் தான் பேசுகிறார்.
ஆனால் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தற்போதைய ஆட்சிக்கால மோசடியாளர்களையும் சேர்த்தே கூறுகிறாரா என்று தெரியவில்லை.
ஏனென்றால் இப்போதைய ஆட்சியில் நடந்த மோசடிகளுக்கு காரணமானவர்கள் அவருக்கு நெருக்கமானவர்களாகவும், அவரது கட்சியைச் சேர்ந்தவர்களாகவும் இருக்கிறார்கள்.
மஹிந்த ராஜபக் ஷவைத் தாம் காப்பாற்றப் போவதில்லை என்று வெளிப்படையாகக் கூறும் ரணில் விக்கிரமசிங்க, ரவி கருணாநாயக்கவைக் காப்பாற்றப் போவதில்லை என்று அடித்துக் கூறும் நிலையில் இல்லை.
மஹிந்த ராஜபக் ஷவின் மீதுள்ள குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், அவரது குடியுரிமை பறிக்கப்படும் என்ற பிரசாரங்களும், முடிந்தால் அதைச் செய்யட்டும் பார்க்கலாம் என்ற பிரசாரங்களும் தேர்தல் களத்தில் மேலோங்கியிருந்தன.
அதைவிட சிறை செல்வதில் இருந்து மஹிந்த ராஜபக் ஷவைக் காப்பாற்றப் போவதில்லை என்று ரணில் விக்கிரமசிங்க கூறியிருக்கிறார்.
மஹிந்த ராஜபக் ஷவின் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு, அவரைக் காப்பாற்ற ஜனாதிபதியோ பிரதமரோ, நடவடிக்கை எடுக்காது போனால், தேர்தலுக்குப் பின்னர் அவர் சிறைக்குச் செல்ல வேண்டியிருக்கும்.
அவ்வாறு நடந்தால் இலங்கையின் வரலாற்றில் சிறைக்குச் சென்ற முதலாவது முன்னாள் ஜனாதிபதி என்ற நிலையை பெறுவார்.
அதுபோலவே, பிணை முறி மோசடியில் தொடர்புடையவர்கள் என்று குற்றம்சாட்டப்பட்டவர்கள் குற்றவாளிகளாக உறுதிப்படுத்தப்பட்டால், ரவி கருணாநாயக்க போன்றவர்கள் சிறைக்குச் செல்ல நேரிடும்.
இது ஐ.தே.க.வுக்கு பின்னடைவை ஏற்படுத்தும், குறிப்பாக ரணில் விக்கிரமசிங்கவின் தரப்பை பலவீனப்படுத்தும்.
ரணில் விக்கிரமசிங்க தனது வலது கையாக ரவி கருணாநாயக்கவை வளர்த்து வந்தார்.
நிதியமைச்சர் பதவியில் இருந்து, வெளிவிவகார அமைச்சர் பதவிக்கு மாற மறுத்த போது கூட, எல்லாத் துறைகளிலும் தலைமைத்துவ அனுபவத்தைப் பெற வேண்டும் என்று கூறியே அவரைச் சமாதானப்படுத்தியிருந்தார்.
அத்தகைய ரவி கருணாநாயக்க கட்சியின் உப தலைவர் பதவியில் இருந்து கீழ் இறக்கப்பட்டு, சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்படும் போது, ஐ.தே.க.வுக்குள் ஏற்கனவே இருந்த புகைச்சல்கள் மேலெழும்.
தலைமைப் பதவியைக் குறிவைத்திருக்கும் சஜித் பிரேமதாச அண்மைக்காலமாக அமைதியாக இருக்கிறார். ரவி கருணாநாயக்கவின் வெளியேற்றம், சஜித் பிரேமதாசவின் கையைப் பலப்படுத்தும்.
உபதலைவர் பதவியில் இருந்து, ரவி கருணாநாயக்க நீக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ள திலக் மாரப்பன குழு, உள்ளக மோதல்களை தடுக்க, சஜித் பிரேமதாச வகிக்கும் பிரதி தலைவர் பதவியையும் இல்லாமல் செய்ய வேண்டும் என்று பரிந்துரைத்திருக்கிறது.
இது சஜித்தை சீண்டி விடும் செயலாகவும் அமையலாம். அவரது அண்மைய அமைதியை அது கலைத்து விடவும் கூடும். எனவே தேர்தலுக்குப் பின்னர் ஐ.தே.க.வுக்குள் குழப்பங்கள் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் ஏற்படலாம்.
அதேவேளை, தேர்தலுக்குப் பின்னர் கோத்தாபய ராஜபக் ஷவைக் கைது செய்வதற்கான ஏற்பாடுகள் நிறைவடைந்திருப்பதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறியிருக்கிறார்.
அமெரிக்காவில் இருந்து 12 ஆம் திகதி நாடு திரும்பியதும் அவர் கைது செய்யப்படக் கூடும். அவரது கைது, சிங்களக் கடும் போக்காளர்களை உசுப்பி விடுவதாக இருக்கும்.
அதேவேளை, உள்ளூராட்சித் தேர்தலில் மஹிந்த அணி வெற்றி பெற்று விட்டால், அதனை வைத்துக் கொண்டு அரசுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரப்படுத்தப்படலாம்.
மக்களின் ஆதரவை இழந்து விட்ட அரசாங்கமாக அடையாளப்படுத்தி, அதனை செயலற்ற நிலைக்குக் கொண்டு செல்லவும் மஹிந்த ராஜபக் ஷ தயங்கமாட்டார்.
ஏற்கனவே ஒருமுறை அவர், கொழும்பில் வீதியில் இறங்கிப் போராட்டம் நடத்தி, நகரின் பல பகுதிகளை செயலற்ற நிலைக்கு கொண்டு சென்றிருந்தார்.
அடுத்தமுறை இதுபோல சும்மா விட்டுப் போகமாட்டோம், கொழும்பு வீதி முழுவதையும் ஆதரவாளர்களால் நிரப்புவோம் என்றும் அவர் எச்சரித்திருந்தார்.
உள்ளூராட்சித் தேர்தலில் தனக்கு மக்களின் ஆதரவு இருக்கிறது என்பதை மஹிந்த உறுதிப்படுத்திக் கொண்டால், அத்தகையதொரு உத்தியைக் கையாளவே முனைவார்.
ஏனென்றால் தனக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளில் இருந்து விரைவாகத் தற்காத்துக் கொள்ள வேண்டிய அவசியம் அவருக்கு இருக்கிறது.
எனவே, அரசாங்கத்துக்குள் இருந்து ஆட்களை தன்பக்கம் இழுத்து, அரசைப் பலவீனப்படுத்துவதுடன், அதனை செயற்பட முடியாமலும் சூழலை அவர் ஏற்படுத்தக் கூடும்.
அதேவேளை, மைத்திரிபால சிறிசேனவின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வென்று விட்டால், மஹிந்த ராஜபக் ஷ மீதான நடவடிக்கைகள் இறுக்கமடையலாம். ஆனால் அது அரசாங்கத்தைப் பலப்படுத்துமா என்ற கேள்வி இருக்கிறது.
தேர்தலுக்குப் பின்னர் பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்கிரமசிங்கவை நீக்க வேண்டும். அதற்கு ஐ.தே.க. தோல்விடைய வேண்டும் என்று அமைச்சர் டிலான் பெரேரா கூறியிருக்கிறார்.
அவ்வாறு ஐ.தே.க.வின் தோல்வியும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வெற்றியும் சாத்தியமாகுமேயானால், தனித்து ஆட்சியமைக்க மைத்திரிபால சிறிசேன முயற்சிக்கக் கூடும். அதற்காக ஐ.தே.க.வினர் பலரை விலைக்கு வாங்கக் கூடும். அதன் கூட்டணியினரை விலைபேசக் கூடும்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தனித்து ஆட்சியமைத்தால், நிச்சயமாக மஹிந்த ராஜபக் ஷவோ, கோத்தாபய ராஜபக் ஷவோ தண்டிக்கப்படுவதில் இருந்து தப்பி விடுவார்கள்.
ஏனென்றால் அவர்களின் அனுதாபிகள் இன்னமும் அந்தக் கட்சிக்குள் பலமாக இருக்கிறார்கள். அவர்கள், மைத்திரிபால சிறிசேனவை சுதந்திரமாகச் செயற்பட விடமாட்டார்கள்.
அதுமாத்திரமன்றி, மஹிந்தவை பிரதமர் ஆக்க வேண்டும் என்று போர்க்கொடி உயர்த்தினாலும் ஆச்சரியப்பட முடியாது.
அதற்காக மஹிந்த ராஜபக் ஷவை ஐ.தே.க. தண்டிப்பதற்கு உறுதி பூண்டிருக்கிறது என்றெல்லாம் கூற முடியாது, தேர்தல் காலம் வரை அவர்கள் அதனைக் கூறுவார்களே தவிர, தேர்தலுக்குப் பின்னர் அதனைச் செய்வார்கள் என்று எதிர்பார்க்க முடியாது,
எனவே, உள்ளூராட்சித் தேர்தலுக்குப் பின்னர் அரசியலில் பெரும் கேள்விக் குறியொன்று ஏற்படலாம்.
கூட்டு அரசாங்கம் நிலைத்திருக்குமா என்ற பிரச்சினை ஏற்படலாம் என்பதையே தேர்தல் கால பிரசாரங்களில் இருந்து உணர்ந்து கொள்ள முடிகிறது.
அதேவேளை, அமைச்சர் ராஜித சேனாரத்ன ‘ஜனாதிபதி – பிரதமர்’ இடையிலான மோதல்கள் எல்லாம், தேர்தலுக்குப் பின் ஓய்ந்து விடும், இந்த ஆட்சி 2020 வரை தொடரும் என்று கூறியிருக்கிறார்.
அப்படியாயின், இந்த பிரசாரப் போர் வெறும் தேர்தல் மாயையாகத் தான் முடிந்து போகப் போகிறதா? வாக்காளர்களை ஏமாற்றும் தந்திரம் தானா?
பிரசாரங்களின் போது கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் உண்மையானால், உள்ளூராட்சித் தேர்தலுக்குப் பின்னர் நிறையவே அரசியல் மாற்றங்கள் நிகழ வேண்டும்.
அவ்வாறு நிகழாது போனால், அதன் அர்த்தம், என்னவென்பது அனைவருக்கும் தெரிந்த விடயம் தான்.
-என். கண்ணன்-