பாகிஸ்தானில் நடைபெற்ற விருந்து ஒன்றில் பாட மறுத்த பிரபல பாடகி சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானின் மர்டன் நகரில் வசித்து வருபவர் பாடகி சும்புல் கான். நடிப்புத் தொழிலிலும் ஈடுபட்டு வரும் 25 வயதான சும்புல் கானின் குரலுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சும்புல் கானின் வீட்டை உடைத்து உள்ளே புகுந்த நபர்கள் சிலர், பார்ட்டி ஒன்றில் பாட வருமாறு சும்புல் கானை வற்புறுத்தியுள்ளனர்.
அதற்கு சும்புல் கான் தொடர்ந்து மறுப்பு தெரிவித்ததால் ஆத்திரம் அடைந்த அந்த மர்ம நபர்கள், சும்புல் கானை சுட்டுக் கொன்றுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இது குறித்து பொலிசார் கூறுகையில், சும்புல் கானை சுட்டுக் கொன்றது 3 நபர்கள் அடங்கிய குழுவாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளனர்.
மேலும் லாகூரில் நடிகை கிஸ்மத் பெய்க் என்னும் பெண் கொலை செய்யப்பட்டு ஓராண்டே ஆகியுள்ள நிலையில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.