கோத்தாவைச் சந்திக்கச் சென்ற போது சிக்கினார் உதயங்க வீரதுங்க!

டுபாயில் நேற்று கைது செய்யப்பட்ட ரஷ்யாவுக்கான சிறிலங்காவின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவை சிறிலங்காவுக்கு நாடு கடத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகருக்குச் செல்லும் வழியில், மாற்று விமானத்துக்காக காத்திருந்த போது, டுபாய் விமான நிலையத்தில் உதயங்க வீரதுங்க நேற்றுக்காலை டுபாய் குடிவரவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

அவர் டுபாய் காவல்துறையினரிடம் கையளிக்கப்பட்டு,பின்னர் அவரை அனைத்துலக காவல்துறையினர் பொறுப்பேற்றிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

உக்ரேனிடம் இருந்து, நான்கு மிக் போர் விமானங்கள் கொள்வனவு செய்யப்பட்டதில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பாக, உதயங்க வீரதுங்க மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இவரைக் கைது செய்வதற்கு 2016 ஒக்ரோபர் மாதம், கொழும்பு கோட்டே நீதிவான் நீதிமன்றம், அனைத்துலக காவல்துறைக்கான பிடியாணையை பிறப்பித்துள்ளது.

டுபாயில் கைது செய்யப்பட்டுள்ள உதயங்க வீரதுங்கவை சிறிலங்காவுக்குக் கொண்டு வருவதற்கு, இராஜதந்திர மற்றும் சட்ட காரணங்களால் குறிப்பிட்ட காலம் தேவைப்படும் என்று ஒரு தகவல் கூறுகிறது.

அதேவேளை, டுபாயில் உதயங்க வீரதுங்கவை பொறுப்பேற்பதற்காக, நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவு காவல்துறையினர், டுபாய் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனிடையே, அமெரிக்காவின் லொஸ்ஏஞ்சல்ஸ் நகரில் தங்கியுள்ள தனது மைத்துனர் கோத்தாபய ராஜபக்சவைச் சந்திக்கச் சென்ற போதே, உதயங்க வீரதுங்க கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

மிக் போர் விமானக் கொள்வனவில் இடம்பெற்ற மோசடிகளுடன் கோத்தாபய ராஜபக்சவும், உதயங்க வீரதுங்கவும் தொடர்புபட்டுள்ளதாக குற்றம்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

நீதிமன்ற உத்தரவின் பேரில், முடக்கப்பட்ட சிறிலங்கா கடவுச்சீட்டைப் பயன்படுத்தியே உதயங்க வீரதுங்க அமெரிக்கா செல்ல முயன்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இவர் இந்த வாரத்துக்குள் சிறிலங்காவுக்கு கொண்டு வரப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது,

அதேவேளை, உள்ளூராட்சித் தேர்தலுக்கு முன்னதாக உதயங்க வீரதுங்கவை கொழும்புக்கு கொண்டு வரும் நடவடிக்கைகளில் அரசாங்கம் தீவிர முயற்சிகளை மேற்கொண்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.