தேர்தல் களம்: மீண்டும் முருங்கையில் வேதாளம்!! : தமிழரசுக் கட்சியினரின் அவதூறு, அதிகாரம், ஆதிக்கம், அழிவு அரசியல்!! – கருணாகரன்

யாழ்ப்பாணம் – மல்லாகத்தில் கடையொன்றின் முன்னால் நின்று, சமகால அரசியல் நிலைவரத்தைப் பற்றி நண்பர்களோடு கதைத்துக் கொண்டிருந்தபோது, அந்தக் கடைக்காரார் சொன்னார், “தயவு செய்து இதில (கடைக்கு முன்னால்) நிண்டு அரசியல் கதைக்க வேண்டாம்.

இந்தக் கடையில நிண்டுதான் தங்களை விமர்சித்ததெண்டு பிரச்சினைக்கு வருவாங்கள். வெளிப்படையாக எதைப்பற்றியும் கதைக்கேலாது. அந்தளவுக்கு நிலைமை மோசமாகிக் கொண்டிருக்கு” என்று.

அங்கே நின்ற நண்பர் கடைக்காரரிடம் கேட்டார், “அரசியல் எண்டால் விமர்சனமும் இருக்கும். அதுவும் தேர்தல் காலத்தில இது இன்னும் கூடுதலாக இருக்கும்.

பொதுப் பணி எண்டு வாறவைக்கு இதையெல்லாம் விளங்கிக் கொள்ளக்கூடிய பக்குவமும் அறிவும் வேணும். அதில்லாமல் ஏன் அரசியலுக்கு வருகினம்?” என.

”நீங்கள் சொல்றது எனக்கும் விளங்கும். ஆனால், விளங்க வேண்டிய ஆட்களுக்கு இது விளங்குதில்லையே.

சரிபிழையைப் பற்றி இப்ப ஆரோட கதைக்கேலும்? நியாயத்தைச் சொல்றதுக்கோ ஒண்டைப்பற்றிக் கேள்வி கேட்கிறதுக்கோ முடியாது.

தாங்கள் சொல்றதை அப்படியே நாங்கள் கேட்க வேணும். மறு பேச்சுப் பேசக்கூடாது. பேசினால் தங்களுக்கு எதிரான ஆள். எதிரி. துரோகி இப்பிடியே சொல்லிக் கொண்டுபோய் தேவையில்லாத பிரச்சினைகளையெல்லாம் உருவாக்குவான்கள்.

நீ அவற்றை ஆள். இவர் இவற்றை ஆள். அவர் அப்பிடி. இவர் இப்பிடி எண்டு எந்தப் பொறுப்புமில்லாமல் அங்கயுமிங்கயுமாகக் கோர்த்து விடுவான்கள்.

இதெல்லாம் பிறகு தேவையில்லாத பிரச்சினையாகீடும்…. என்ர இந்தத் தொழிலுக்கும் ஆபத்து. அதுதான் சொன்னன், இந்தக் கதைகளும் வேண்டாம்.

கரைச்சலும் வேண்டாம் எண்டு. ஏன், உங்களுக்கும்கூட இதைப்பற்றித் தெரியுந்தானே” என்று சொன்னார் கடைக்காரர்.

அதற்கு மேல் நண்பர், கடைக்காரருடன் பேச விரும்பவில்லை. இவ்வளவுக்கும் கடைக்காரரும் நண்பரும் நீண்ட கால நண்பர்கள். ஆளையாள் நன்றாகப் புரிந்து கொண்டவர்கள்.

ஆனால், சூழல் மாறியிருப்பதால் நண்பர் அதற்குமேல் கடைக்காரரோடு பேச விரும்பவில்லை.

”இருந்தாலும் கடைக்காரரிடம் ஒரு கேள்வியைக் கேட்க விரும்பினார். “இப்பதான் ஆமி, துவக்கு, இயக்கம், அரசாங்கம், அதோட நிக்கிற ஆட்கள், குழுக்கள் எண்ட பிரச்சினையெல்லாம் இல்லையே! இப்ப நீங்கள் ஆருக்குப் பயப்பிட வேணும்?”

கடைக்காரர் நிமிர்ந்து நண்பரைப் பார்த்தார். நல்லவேளையாக அந்தப் பார்வையில் நண்பர் எரிந்து விடாமல் தப்பித்தார்.

 

625.0.560.320.160.600.053.800.700.160.90  தேர்தல் களம்: மீண்டும் முருங்கையில் வேதாளம்!! : தமிழரசுக் கட்சியினரின்  அவதூறு, அதிகாரம், ஆதிக்கம், அழிவு அரசியல்!!   -   கருணாகரன் 625

“ஆமி, துவக்கு, ஆயுதக்குழு எண்டிருந்தால்தான் பிரச்சினையா? இப்ப ஆர் அதிகாரத்தில இருக்கிறதெண்டு தெரியுந்தானே…!” கடைக்காரர் குறிப்பிட்டது, தமிழரசுக் கட்சியினரையே.

அந்தப் பகுதியில் நடந்த கூட்டங்களில் தமிழரசுக் கட்சியினர் பேசிய பேச்சுகள் எல்லாமே மற்றத்தரப்பினரை மதிப்பிறக்கும் செய்யும் விதமாகவே இருக்கின்றன.”

“ஏன் இப்பிடி மற்றவையைப் பற்றித் தூத்திக் கட்டவேணும்? தாங்கள் என்ன செய்தனாங்கள், இனி என்ன செய்யப்போறம் எண்டதைப் பற்றிச் சொல்ல வேண்டியதுதானே..!” என்று அந்தப் பகுதியைச் சேர்ந்த ஒருத்தர் பக்கத்திலே நின்ற ஒருவரிடம் கேட்டிருக்கிறார்.

அந்தக் கதை எப்படியோ தமிழரசுக் கட்சி வட்டாரங்களுக்கு எட்டி விட்டது. அடுத்தநாள் அவரை நான்கைந்துபேர் வழியில் மறித்து, “நீ எவ்வளவு காசு வாங்கிக் கொண்டு அவங்களுக்காக வாயடிக்கிறாய்?” என்று கேட்டுத் தாக்கியிருக்கிறார்கள்.

தாக்குதலுக்குள்ளானவருக்கு தான் யாரிடம் பணம் வாங்கினேன் என்பதோ யாருடைய கதையைக் கேட்டுத் தான் கதைத்தேன் என்பதோ புரியவேயில்லை. ஏனென்றால், அப்படியொன்று நடக்கவேயில்லை.

கேள்வி கேட்பது, விமர்சனம் செய்வது போன்றவை எல்லாம் ஒருவருடைய சொந்தப் புத்தியிலிருந்து வருவதில்லை என்பதே சிலருடைய எண்ணம்.

இதெல்லாம் பின்னணியிலிருந்து யாரோ தூண்டுவதால்தான் நடக்கின்றன என்றே அவர்கள் நம்புகிறார்கள். இதனால்தான் அபிப்பிராயங்களைச் சொல்வோரையும் விமர்சிப்போரையும் கேள்வி கேட்கின்றவர்களையும் பிற சக்திகளோடு தொடுத்துச் சோடிக்க முற்படுகிறார்கள்.

உண்மையில் இதுவொரு ஆபத்தான போக்கு. இத்தகைய போக்கின் பிதாமகராகப் பலரும் அமிர்தலிங்கத்தையும் அவருடைய காலத்துத் தமிழரசுக்கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணியையும் சொல்வதுண்டு.

தமது அரசியல் எதிராளர்களை அல்லது மாற்று அரசியலாளர்களை எதிரிகளாகச் சித்திரித்து, இனத்துரோகிகளாகக் கட்டமைக்கும் உத்தியை உருவாக்கியது அமிர்தலிங்கம் அன்ட் கொம்பனியே.

pirabakaran1  தேர்தல் களம்: மீண்டும் முருங்கையில் வேதாளம்!! : தமிழரசுக் கட்சியினரின்  அவதூறு, அதிகாரம், ஆதிக்கம், அழிவு அரசியல்!!   -   கருணாகரன் pirabakaran1யாழ் மாநகரசபை மேயராக இருந்த அல்பிரட் துரையப்பாவைச் சுட்டுக் கொன்றது பிரபாகரனாக இருந்தாலும் அதற்கான தூண்டுவிசையாக இருந்தது அமிர்தலிங்கம் என்பது ஏற்றுக்கொள்ளப்பட்ட பொது அபிப்பிராயம்.

இதே அணுகுமுறையே – உத்தியே – இன்றைய தமிழரசுக் கட்சியிடத்திலும் வளர்ந்து கொண்டிருக்கிறது. குறிப்பாகத் தமிழரசுக் கட்சியின் இளைய தலைமுறையினரிடத்தில்.

அதாவது தமிழரசுக் கட்சியின் வருங்காலத் தலைவர்களிடத்தில். தற்போது உள்ளுராட்சித் தேர்தலில் போட்டியிடும் இளைய தலைமுறையைச் சேர்ந்த பல வேட்பாளர்கள் மிக மோசமான முறையில் எதிர்த்தரப்பினரைச் சாடுகிறார்கள்.

இதில் ஏனைய கட்சிகளைச் சேர்ந்தவர்களும் உள்ளடக்கம். இவர்கள், கண்ணியமற்ற முறையில், நாகரிகமற்ற விதமாக எதிர்த்தரப்பின் மீது வசைகளை அள்ளி வீசுகிறார்கள்.

தமது கொள்கை என்ன? அதை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது? அதன் சாத்தியப்பாடுகள் என்ன? கடந்த காலச் சாதனைகள் என்ன? சமகால நெருக்கடிகள் என்ன? அதைத் தீர்ப்பதற்கான தமது திட்டங்களும் பொறிமுறைகளும் என்ன என்பதைப் பற்றியெல்லாம் பேசுவதை விட்டு விட்டு, மற்றவர்களைப் பற்றிய வசைகளையே அள்ளி வீசுகிறார்கள்.

அப்படிப் பேசினால்தான் கூட்டம் சேரும். கவனத்தைப் பெறலாம். அதோடு எதிர்த்தரப்புகளையும் அடக்கிப் பலவீனப்படுத்திவிட முடியும். இதுவே தமது பலமாகும் என எண்ணுகிறார்கள்.

பொதுக்கூட்டங்களில் பலருக்கு முன்னிலையில் இவ்வாறு தரக்குறைவாக எந்தக் கூச்சமும் இல்லாமல் பேசுவதற்கும் முகநூல் போன்ற சமூக வலைத்தளங்களில் அவதூறுகளை எழுதுவதற்கும் எவ்வளவு திராணி வேணும்?

தம்மைப் பற்றிய சமூகத்தின் கணிப்பு எப்படி அமையும் என்றெல்லாம் இவர்கள் ஒரு கணமேனும் யோசிப்பதாகத் தெரியவில்லை.

இதை ஊடகங்களோ, கட்சியின் மூத்த தலைவர்களோ, மக்கள் தரப்பிலிருந்து எவருமோ சுட்டிக் காட்டுவதையும் காணவில்லை. யாரும் தட்டிக் கேட்பதாகவும் தெரியவில்லை. அப்படியென்றால், இது எங்கே போய் முடியப்போகிறது?

அண்மையில் பரந்தனில் ஒரு தேர்தல் பரப்புரைக் கூட்டம் நடைபெற்றது. அதனுடைய வீடியோக் காணொளியைப் பார்த்தேன்.

அதிலே இளைய தலைமுறையைச் சேர்ந்த ஒரு வேட்பாளர், தமக்கு எதிரான அரசியல் தரப்பினரை மிகக் கீழான சொற்களால் வசைபாடிக் கொண்டிருந்தார்.

எதிர்த்தரப்பினரின் அரசியல் குறைபாடுகளையும் அந்தத் தரப்பின் நடைமுறைத் தவறுகளையும் மக்களுக்குச் சுட்டிக்காட்டலாம். அப்படிச் செய்வதே நியாயம்.

ஆனால், அதற்குப் பதிலாக பிறரை மதிப்பிறக்கம் செய்யும் நோக்கில் கேவலமான சொற்களைப் பயன்படுத்தி, கேலிப்படுத்திக் கிண்டலடித்துப் பேசுவது இழிவு.

தவறு. பிழை. ஆனால், இதை அந்தக் கூட்டத்திலே கலந்து கொண்ட மூத்த தலைவர்கள் பலரும் பார்த்துக் கொண்டேயிருந்தனர்.

ஏன் தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவரும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான சம்மந்தனும் அதே மேடையில் அந்தப் பேச்சைக் கேட்டுக் கொண்டேயிருந்தார். (ரசித்துக் கொண்டேயிருந்தார்).

பரந்தனில் மட்டுமல்ல, இந்த மாதிரியான ஒரு போக்கை நாம் பல இடங்களிலும் அவதானிக்கலாம்.

மூத்த தலைவர்களான மாவை சேனாதிராஜா, சம்மந்தன் போன்றவர்கள் நேரடியாக எந்தத் தரப்பையும் விமர்சிக்கமாட்டார்கள்.

வெளிப்படையாக யாரையும் அவர்கள் குற்றம் சாட்டவும் மாட்டார்கள். இதன் மூலம் தாம் கண்ணியமான அரசியல் நெறிமுறையொன்றைப் பின்பற்றுகின்றவர்கள் என்ற தோற்றப்பாட்டை உருவாக்குவார்கள். முன்னர் அரசாங்கத்தை விமர்சித்தனர். இப்பொழுது அதுவும் இல்லை.

ஆனால், ஏனையவர்கள் – குறிப்பாக இளைய தலைமுறையினர் இதற்கு மாறாக, வேண்டிய அளவுக்குத் திகட்டத் திகட்ட பிற தரப்புகளை இழிவு படுத்துவார்கள்.

sumanthiran-STF  தேர்தல் களம்: மீண்டும் முருங்கையில் வேதாளம்!! : தமிழரசுக் கட்சியினரின்  அவதூறு, அதிகாரம், ஆதிக்கம், அழிவு அரசியல்!!   -   கருணாகரன் sumanthiran STF

இது ஒரு திட்டமிட்டுச் செயற்படுத்தப்படும் ஒரு உபாயமே. கண்ணியமான முறையில் அரசியல் முன்னெடுக்கப்படவேண்டும் என விரும்புவோருக்குத் தலைவர்களும் எதிராளிகளைத் தாக்கி அவர்களைப் பலவீனப்படுத்த வேண்டும் எனக் கருதுவோருக்கு இளைய தலைமுறையினரும் ஒரே களத்தில் செயற்படுகின்றனர்.

இரண்டுமே ஆயுதங்கள்தான். இதன் உண்மையான நோக்கமே பிறரைக் கீழிறக்கித் தோற்கடிப்பதேயாகும். சனங்களுக்கும் இது கிளுகிளுப்பூட்டும் ஒரு செயலாகும்.

பிறரைப் பற்றிக் கீழ் விமர்சனம் செய்வதை ரசிப்பது தமிழ்ச்சூழலில் அதிக ஈர்ப்புள்ள விசயம். வேலியால் புதினம் பார்ப்பது தொடக்கம் இவ்வாறான அவதூறுகளை ரசிப்பது, விரும்பிப்படிப்பது எல்லாம் பலருக்கும் ருசியான ஒன்று.

முகநூல் தொடக்கம் இத்தகைய இணையத்தள வாசிப்புகள் வரையிலும் இதை நாம் காண முடியும். இவ்வாறான கூட்டங்களுக்குச் சேருகிற கூட்டம், அங்கே கைதட்டி, விசிலடித்து ஆரவாரிப்பது வரையில் இதை நாம் அவதானிக்கலாம்.

ஆகவே இதுவொரு சமூக உளவியல் நோயாகப் பரவியுள்ளது. இதையே இவர்கள் தமக்கு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்ள முற்படுகின்றனர்.

இதன் பின்னே ஒரு அதிகாரத்துவம் நிலைகொள்கிறது. இத்தகைய இழிநிலை வெளிப்பாடுகளைக் கண்டித்தாலோ மறுத்துரைத்தாலோ உடனே இவர்கள் அணியாகச் சேர்ந்து கொண்டு கீழ்த்தாக்குதலைத் தொடுக்கிறார்கள்.

வசைபாடுவார்கள். அப்படிச் செய்து எதிர்த்தரப்பினரையும் – நியாயத்தைப் பேச முனைவோரையும் நெருக்கடிக்குள்ளாக்குகின்றனர்.

அல்லது தனிமைப்படுத்தி ஓரங்கட்டி விடுகின்றனர். ஆகவே இங்கே ஒருவிதமான அதிகாரம், ஆதிக்கம் நிலைப்படுத்தப்படுகிறது. இவர்களுடைய நோக்கமும் அதுதான்.

எனவே இத்தகைய ஒரு அணுகுமுறையின் மூலமாக வடக்கிலே அரசியல் அச்சுறுத்தல் மிகப் பயங்கரமாக விதைக்கப்பட்டுள்ளது.

ஆயுதம், படைகள், அரசு, அதனுடைய அனுசரணையாளர்கள் என்பதற்கு அப்பால், அவதூறு, மிரட்டல், அதிகாரப் பிரயோகம், ஆதிக்கம் போன்றவற்றினால் மக்கள் அச்சுறுத்தப்பட்டுள்ளனர்.

இதெல்லாம் அநேகமாகத் தமிழ்த்தேசியத்தை முன்னிறுத்தும் சில தரப்பினரால்தான் நடக்கின்றன. இதற்கு முதல் இந்த மாதிரியான காரணங்களைக் குற்றச்சாட்டாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு பிற தரப்புகளின் மீது அடுக்கியது.

குறிப்பாக, அரசு, ஈ.பி.டி.பி போன்ற சக்திகளின் மீது. இப்பொழுது அதே குற்றச்சாட்டுகளுக்குத் தானே காரணமாகியுள்ளது.

இதனால்தான் கூட்டமைப்பின் தேர்தல் கூட்டங்கள் பாதுகாப்புப் படைகளின் பிரசன்னத்தோடு (இராணுவப் பாதுகாப்போடு) நடத்தப்பட வேண்டியதாகியது.

கூட்டங்களுக்கு வருகின்றவர்களையே சோதனையிடும் நிலையும் வந்தது. சனங்களிடமிருந்து அந்நியப்படுவதும் வரலாற்றிலிருந்து விலகிச் செல்வதும் அதிகாரமனோ நிலையின் விளைவேயாகும்.

மக்களுக்கு விசுவாசமில்லாத அரசியல் என்பது மக்களுக்கு மட்டும் விரோதமாக இருப்பதில்லை. அத்தகைய அரசியலை முன்னெடுக்கும் அரசியல் சக்திக்கும் விரோதமாகவே அமைவதுண்டு. இதுவே வரலாற்றனுபவமாகும்.

– கருணாகரன்

செய்தி மூலம்: http://www.thenee.com/