கன்னித் தன்மையை நிரூபிக்கத் தவறிய பெண்களுக்கு நடப்பது?

கன்னித்தன்மையை நிரூபிக்காத மணமகளை கண்மூடித்தனமாக தாக்கும் ஒரு சமூகம் இந்தியாவில் வசித்து வருகிறது. இந்த மூடநம்பிக்கையை ஒழிக்க ஒரு இயக்கம் முயற்சி செய்து வருகிறது. விஞ்ஞானம், கல்வி, தொழில்நுட்பம் ஆகிய அனைத்திலும் வளர்ச்சியடைந்தாலும் சில மூடநம்பிக்கைகளை ஒட்டுமொத்தமாக அழிக்க முடியவில்லை. அப்படி ஒரு மூடநம்பிக்கை, மகாராஷ்டிரா மாநிலத்தில் தலைவிரித்தாடுகிறது.

மகாராஷ்டிராவில் உள்ள கஞ்சர்பத் இன மக்களிடையே ஒரு மூடநம்பிக்கை நிலவிவருகிறது. அதன்படி, திருமணமான தம்பதிகளை முதலிரவு அறைக்கு அனுப்பும்போது, ஒரு வெள்ளை நிற துணியை கொடுத்து அனுப்புகின்றனர். அதன்படி, முதலிரவில் தம்பதி உடலுறவு கொள்ளும்போது பெண்ணுக்கு கன்னித்தன்மை கழிந்து இரத்தக்கறை அந்த துணியில் இருக்க வேண்டும். இரத்த கறை இல்லையென்றால், அந்த பெண் ஏற்கனவே கன்னி கழிந்துவிட்டாள் என்று அர்த்தம். இதுதான் அந்த இன மக்களிடையே நிலவும் மூடநம்பிக்கை.

முதலிரவு முடிந்து காலையில் வெளிவரும் மணமகனிடம் சில கேள்விகள் கேட்கப்படும். அந்த வெள்ளைத்துணியை சோதனை செய்வர். ஒருவேளை இரத்தக் கறை இல்லையென்றால், அந்த பெண் ஏற்கனவே கன்னி கழிந்துவிட்டார் என கருதி அந்த பெண்ணை குடும்பத்தினரும் கிராம மக்களும் மிகவும் இழிவாக நடத்துவதுடன் அவரை கண்மூடித்தனமாக தாக்குவதையும் வழக்கமாக கொண்டுள்ளனர். முதன்முறையாக பாலுறவு கொள்ளும்போது பெண்களுக்கு கட்டாயம் ரத்தக்கசிவு உண்டாக வேண்டும் என்று அவசியமில்லை என்று நிபுணர்களும் மருத்துவர்களும் கருத்து தெரிவிக்கின்றனர்.

அது ஒரு மூடநம்பிக்கை என்றும் அவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். தொழில்நுட்பமும் விஞ்ஞானமும் உச்சபட்ச வளர்ச்சி அடைந்துவிட்ட 21ம் நூற்றாண்டிலும் இதுபோன்ற மூடநம்பிக்கைகள் நிலவத்தான் செய்கின்றன. இதற்கு எதிராக வாட்ஸ் அப்பில் ஒரு இயக்கம் இயங்கிக்கொண்டிருக்கிறது. ஆனால் அவர்களால் இதை முற்றிலுமாக தடுக்க முடியவில்லை. போராடி வருகின்றனர். அனைத்திற்கும் சட்டம் இயற்றி கட்டுப்படுத்தும் அரசு, பெண்களின் வாழ்க்கையையும் ஒழுக்கத்தையும் கேள்விக்குறியாக்கும் இதுபோன்ற மூடநம்பிக்கைகளுக்கு எதிராகவும் சட்டம் இயற்றி பெண்களுக்கு பாதுகாப்பளிக்க வேண்டும்.