“நடிக்கணும்னு கனவெல்லாம் இல்லாமல் யதேச்சையா சினிமா மற்றும் சின்னத்திரைக்கு வந்தேன்!” – ‘மெட்டி ஒலி’ காயத்ரி

“நடிக்கணும்னு கனவெல்லாம் இல்லாமல் யதேச்சையா சினிமா மற்றும் சின்னத்திரைக்கு வந்தேன். சீரியல் களத்தில் எனக்குன்னு ஒரு  அடையாளத்தை ஏற்படுத்திக்கிட்டதுல மகிழ்ச்சி” – அன்பும் மென்மையுமாகப் பேசுகிறார், நடிகை காயத்ரி. ‘மெட்டி ஒலி’ சரோவாக மக்கள் மனதில் இடம்பிடித்தவர்.

“ஆக்டிங் வாய்ப்பு எப்படி கிடைச்சுது?” 

“எனக்கு பூர்வீகம் கர்நாடகம். பிறந்து வளர்ந்தது மும்பை. அங்கேயும், பெங்களூரிலும் ஸ்கூல் படிப்பை முடிச்சேன். என் அண்ணன் சஞ்சயும் ஒரு நடிகர். அப்போ, ‘சினிமா எக்ஸ்பிரஸ்’ பத்திரிகையில் ஒவ்வொரு வருஷமும் புதுமுக நடிகர்களை, ஒரு சீனியர் ஆர்ட்டிஸ்ட் பேட்டி எடுப்பாங்க. அப்படி என் அண்ணனை நடிகை ரேவதி மேம் பேட்டி எடுத்தாங்க. பிளஸ் ஒன் முடிச்சு சம்மர் லீவில் இருந்த நானும் அந்தப் பேட்டியைப் பார்க்கிறதுக்காக சென்னைக்கு வந்திருந்தேன். அங்கே சுரேஷ் மேனன் சார் என்னைப் பார்த்தார். அப்பாகிட்ட பேசி என்னை நடிக்கக் கேட்டார். அவர் இயக்கிய ‘பாசமலர்கள்’ படத்தில் நடிச்சேன். அப்புறம், ‘ராஜாவின் பார்வையில்’ உள்பட அஞ்சு மொழிப் படங்களில் பிஸியா நடிச்சுக்கிட்டே கரஸ்ல காலேஜ் படிச்சேன்.”

காயத்ரி

“சீரியல் என்ட்ரி எப்படி நிகழ்ந்தது?” 

“படங்களில் ஹீரோயினா நடிச்சுகிட்டிருந்தப்போ, குட்டி பத்மினி மேடத்தின் ஒரு இந்தி சீரியல் வாய்ப்பு வந்துச்சு. அடுத்து, தூர்தர்ஷனில் என் முதல் தமிழ் சீரியல், ‘கொலையுதிர் காலம்’. தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பான ‘குடும்பம்’, ‘சாவித்ரி’, ‘லட்சியம்’ உள்ளிட்ட பல சீரியல்களும் ஹிட்டாச்சு. சினிமாவில் கிடைக்காத புகழ், சின்னத்திரையில் கிடைச்சுது. ‘ஓ… இவங்க படங்களிலும் நடிச்சிருக்காங்க’னு சொல்ற அளவுக்கு மக்களிடம் என்னை அடையாளம் காட்டினது சீரியல்கள்.”

காயத்ரி

” ‘மெட்டி ஒலி’ சீரியல் உங்க கரியரில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது பற்றி…” 

“நிச்சயமாக. என் லைஃப்பில் பல விஷயங்கள் மாதிரி ‘மெட்டி ஒலி’ வாய்ப்பும் யதார்த்தமாக நடந்துச்சு. திருமுருகன் சார் டைரக்‌ஷனில் ரெண்டு சீரியல்களில் நடிச்சிருந்தேன். ‘மெட்டி ஒலி’ மூணாவது சீரியல். ‘இதுவும் ஒரு சீரியல்’னுதான் அப்போ நினைச்சேன். ஆனா, என் சரோஜா கேரக்டருக்கு மக்கள் கொடுத்த அங்கீகாரம் ரொம்ப பெருசு. கதையில் வரும் சகோதரிகளான அஞ்சு பேரும் நிஜமாகவே ரொம்பப் பாசத்தோடு சேர்ந்து நடிச்சோம். அதெல்லாம் மறக்கமுடியாத காலம்.”

” ‘திருமதி செல்வம்’ தெலுங்கு வெர்ஷன் ‘தேவதா’வில் நடிச்ச அனுபவம்…” 

“தமிழில் ‘மேகலா’ முடிச்ச சமயம். அப்போ தெலுங்கு ‘தேவதா’ சீரியலில் ஹீரோயினா நடிச்சவங்க இடையில் விலகவே, அந்த அர்ச்சனா கேரக்டர் வாய்ப்பு எனக்கு வந்துச்சு. ஆரம்பத்தில் தயங்கினாலும், ‘மெட்டி ஒலி’ மாதிரி யதார்த்தமான ரோல். பெரிய ரீச் கிடைச்சது. அதில் நடிச்சுட்டிருக்கும்போதே எனக்குக் கல்யாணமும் நடந்துச்சு.”

காயத்ரி

“இப்போ நடிப்புக்கு பிரேக் எடுத்திருப்பதன் காரணம் என்ன?” 

“ஜீ தமிழில் ‘நெஞ்சத்தைக் கிள்ளாதே’ என் கடைசி சீரியல். எனக்குப் பெண் குழந்தை பிறந்துச்சு. குழந்தையிடம் என் முழு அரவணைப்பும் செலுத்த நடிப்புக்கு இடைவெளி எடுத்தேன். ரெண்டு வருஷமா நடிக்கலை. வாய்ப்புகள் வந்துட்டேதான் இருக்கு. குழந்தை ஓரளவுக்கு வளர்ந்ததும் நடிக்கலாம்னு இருக்கேன். கணவர் ரவியும் சின்னத்திரை இயக்குநர். அவர் இயக்கத்துல நடிக்க ஆசையிருக்கு. இதுவரை பாசிட்டிவ் ரோல்களிலேயே நடிச்சிருக்கேன். பவர்ஃபுல் நெகட்டிவ் ரோலில் மிரட்டணும்னு ஆசை.”

“சீரியல்ல நடிக்க ஆரம்பிச்சதும் சினிமாவில் நடிக்கிறதை நிறுத்திட்டீங்களா?” 

“அப்படி சொல்லிட முடியாது. ஒரு கட்டத்துக்கு மேலே சினிமாவைவிட சீரியல் ரொம்பவே கம்போர்ட்டபிளா தோணிச்சு. நான் ஒரு சமயத்தில் ஒரு சீரியலில் மட்டும்தான் நடிப்பேன். ஒரு மொழியில் சீரியல் முடிஞ்சதும், இன்னொரு மொழி சீரியல் பண்ணுவேன். அதனால்தான் பல மொழி மக்கள் மனதிலும் சரியா இடம்பிடிக்க முடிஞ்சது. என் வொர்க்கை யாருக்கும் பாதிப்பில்லாத வகையில் சரியா செஞ்சேன். இருபதுக்கும் அதிகமான சீரியல்களில் நடிச்சுட்டேன். யார்கிட்டேயும் ஒரு நடிகையா நடந்துகிட்டதில்லை. ஒரு ஃபேமிலி நபர் மாதிரிதான் பேசுவேன். நல்ல கேரக்டர் கிடைச்சா சினிமாவில் நிச்சயம் நடிப்பேன்.”

” ‘ராஜாவின் பார்வையிலே’ படத்துக்குப் பிறகு விஜய், அஜித்தை மீட் பண்ணியிருக்கீங்களா?”

” ‘பாசமலர்கள்’ படத்தில் அஜித்தும் நடிச்சிருந்தார். பிறகு, ‘ராஜாவின் பார்வையிலே’ படத்தில் அவருக்கு ஜோடியா நடிச்சேன். அப்போ, அவர் வளர்ந்துட்டிருந்த ஹீரோ. ரொம்பவே கான்ஃபிடன்டா இருப்பார். ‘சில வருஷத்துக்குள்ளே பெரிய ஹீரோவா ஆகிடுவேன்’னு சொல்வார். அது நடந்துச்சு. ஒருமுறை அவரை ஏர்போர்ட்ல மீட் பண்ணினேன். பழைய நினைவுகளோடு நல்லா பேசினார். விஜய் எப்பவும் அமைதியான டைப். ‘ராஜாவின் பார்வையிலே’ படத்தின்போதும் அமைதியாவே இருப்பார். கேமரா முன்னாடி வந்ததும் சட்டுனு மாறி அசத்துவார். ரெண்டு பேரும் ஆரம்பத்திலிருந்த மாதிரியே இப்பவும் எல்லோரிடமும் அன்பா பழகுறாங்க. அது நல்ல விஷயம். இவங்களோடு மீண்டும் சேர்ந்து நடிக்க வாய்ப்பு கிடைச்சா சந்தோஷப்படுவேன்.”