ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி சிங்களவர்களுக்கானது அல்ல, அது நாட்டில் அனைத்து மக்களுக்கும் பொதுவானது, நாட்டில் மக்களின் பணத்தினை கொள்ளையடித்தவர்கள் நண்பன் சொந்தக்காரன் என்று பாராமல் தண்டிக்கப்படுவர் என யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
தமிழ், சிங்கள, முஸ்லிம் என மூவின மக்களும் சேர்ந்து வாழ்வது எனது கனவு, எனது கனவினை நனவாக்க நீங்கள் எனக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,
3 வருடத்திற்கு முன்னர் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலுக்காக மக்களை நாடிய எனக்கு இந்த வடக்கு மக்கள் பெரிய ஆதரவினை தந்திருந்தார்கள்.
வடக்கு பிரதேசத்தின் அரசியல் தலைவர்களும் எனக்கு ஆதரவினை தெரிவித்திருந்தனர்.
சுதந்திரக் கட்சி என்பது சிங்கள மக்களுக்கான கட்சிய அல்ல, அது அனைவருக்கும் பொதுவானது, சுதந்திரக் கட்சி சிங்களவர்களின் கட்சி என்றால் இன்று வடக்கில் தமிழ் வேட்பாளர்களை சுதந்திரக்கட்சி முன்னிறுத்தியிருக்காது.
1960ஆம் ஆண்டு சிறிமாவோ பண்டாரநாயக்க சுதந்திரக் கட்சியின் தலைவராக செயற்பட்ட போது, இப்பகுதி பெண்கள் தங்களது தலைமுடியை நிலத்தில் படும்படி விரித்து அதில் நடந்து செல்லுமாறு சிறிமாவோ பண்டாரநாயக்கவை கோரியிருந்தனர்.
ஆனால் அதற்கு அவர் மறுப்புத் தெரிவித்தார், அந்தளவு இந்த மக்கள் சுதந்திரக் கட்சி மீது மரியாதை வைத்துள்ளனர்.
அதே போல 1982ஆம் ஆண்டு கொப்பேகடுவ அவர்கள் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும்போது அதற்கு வடக்கு மக்கள் தமது ஆதரவினை தெரிவித்திருந்தனர்.
அதனை தொடர்ந்து வந்த ஆட்சியாளர்களால் சுதந்திரக் கட்சியின் செயலாளர்களாக செயற்பட 3 தமிழர்களுக்கு வாய்ப்புக்கள் வழங்கப்பட்டன.
சுதந்திரக்கட்சி என்றும் இன, மத, பேதங்களை பார்த்து செயற்படும் கட்சியல்ல, இது மக்களின் கட்சி.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்திலும், யுத்தம் நிறைவடைந்த காலத்திலும் வடக்கில் காணாமல் போதல்கள், காணி சுவீகரிப்புக்கள், ஊடகவியலாளர்கள் கடத்தப்படுதல், பலர் நாட்டை விட்டுத் தப்பி ஓடுதல் என்பன பல இடம்பெற்றன.
இதன்காரணமாக உலகமே, இலங்கையின் மீது கடும் கோபம் கொண்டது.
ஆனால் கடந்த 3 வருடங்களில் யாரும் காணாமல் ஆக்கப்படவில்லை, ஊடகவியலாளர்கள் கொல்லப்படவில்லை, யாரும் நாட்டை விட்டு ஓடவும் இல்லை, அனைத்து மக்களுக்கும் சுதந்திரம் மற்றும் பாதுகாப்பை வழங்குவதில் நாம் கரிசனையாய் இருக்கின்றோம்.
வடக்கிற்கு ஒதுக்கப்படுகின்ற நிதியில் 100இற்கு 60 சதவீதம் திருப்பி அனுப்பப்படுகின்றது, ஆனால் இனி வரும் காலங்களில் இவ்வாறான நிலை ஏற்படாமல், தேர்தலுக்கு பின்னர் நீங்கள் தெரிவு செய்யும் சுதந்திர கட்சியின் உறுப்பினர்களைக் கொண்டு உங்களுக்கு சேவையாற்ற நாங்கள் தயாராக இருக்கின்றோம் என குறிப்பிட்டார்.