இயற்கை உணவைப் பயன்படுத்தும்படி எவ்வளவு அறிவுறுத்தினாலும் பிரித்தானிய மக்கள் பதப்படுத்தப்பட்ட உணவுகளையே அதிகம் விரும்பி சாப்பிடுவது தெரியவந்துள்ளது.
ஆரோக்கியமான வீட்டு உணவுகளைத் தயாரிப்பதற்கு உதவும், தோட்டத்திலிருந்து பெறப்பட்ட புத்தம் புதிய காய்கறிகள், பழங்கள், மாமிசம் மற்றும் மீன் ஆகியவற்றை வாங்குவதில் ஐரோப்பாவிலேயே பிரித்தானியாதான் மிகவும் பின்தங்கி உள்ளது.
அதற்குப் பதிலாக reconstituted meat என்று அழைக்கப்படும், அரைக்கப்பட்டு கொழுப்பும் நிறமிகளும் நீக்கப்பட்ட, அதிக உப்பும் சர்க்கரையும் சேர்க்கப்பட்ட, ஆனால் ஆரோக்கியமான வைட்டமின்களும் நார்ச்சத்தும் இல்லாத தொழிற்சாலைகளில் தயாரிக்கப்பட்ட உணவு வகைகளையே பிரித்தானியர்கள் அதிக அளவில் பயன்படுத்துகின்றனர்.
இத்தகைய உணவுகள் உடல் பருமனை அதிகரிப்பதால், தேசமே எடை அதிகரிப்பால் பாதிக்கப்படும் என உணவியல் நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள்.
ஆனால் லாப நோக்குள்ள வியாபாரிகளோ, மோசமான உணவு என்று எதுவும் இல்லை, அதிக உணவுதான் பிரச்சினை என்று பிரச்சாரம் செய்கிறார்கள், அது தவறானது என்கிறார்கள் உணவியல் நிபுணர்கள்.
19 ஐரோப்பிய நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில், பிரித்தானியர்கள் வாங்கும் உணவில் Ultra-processed products என்று அழைக்கப்படும் பலமுறை பதப்படுத்தப்பட்ட பல செயல்முறைகளுக்குட்படுத்தப்பட்ட உணவுகள் 50.7 சதவிகிதத்தைப் பிடிக்கின்றன.
ஜேர்மானியர்கள் 46.2 சதவிகிதமும், அயர்லாந்து நாட்டினர் 45.9 சதவிகிதமும் இத்தகைய உணவுகளைப் பயன்படுத்துகிறார்கள்.
போர்ச்சுகலில் இது மிகவும் குறைவு, அவர்கள் 10.2 சதவிகிதம் மட்டுமே பதப்படுத்தப்பட்ட உணவுகளைப் பயன்படுத்துகிறார்கள்.
தற்போது இந்த விகிதாச்சாரம் இன்னும் அதிகரித்திருக்கலாம், காரணம் இந்த ஆய்வு 2008ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்டதாகும்.
மக்களைக் கவர்ந்திழுக்கும் வகையில் உடனடி நூடுல்ஸ், chicken nuggets, Kellogg’s cereals போன்றவற்றில் முறையே அதிக உப்பும், அதிக சர்க்கரையும் சேர்க்கப்படுகின்றன. இவை சத்துக்களைவிட சுவையையே அதிகம் கொண்டுள்ளன. இதனால் ஒரு முறை இவற்றை சுவைப்பவர்கள் மீண்டும் மீண்டும் இவற்றை வாங்கும்படித் தூண்டப்படுகின்றனர்.
இதனால் உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைப்பதைவிடவும் உடலுக்கு கேடுண்டாக்கும் விடயங்களே அதிகம் எடுத்துக்கொள்ளப்படுகின்றன.
சுவைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பிரித்தானியர்கள் ஆரோக்கியத்தை இழந்து உடல் பருமனை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறார்கள் என்பது அதிர்ச்சிக்குரிய ஒரு உண்மையாகும்.