இது தமிழன் ஆண்ட பரம்பரை!

தமிழன் ஆண்ட பரம்பரை இது மீண்டும் ஆள வேண்டும். எமது பிரதேசத்தில் எமது ஆட்சியே நிலவ வேண்டும் அப்போதுதான் நாம் எமது சுய கௌரவத்துடன் தலை நிமிர்ந்து வாழ முடியும், எதிர்காலத்தில் எமது சந்ததி அமைதியாக வாழ முடியும் என கரைச்சிப் பிரதேச சபைக்கான கிளிநொச்சி வேட்பாளர் சு.லோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி கரைச்சிப் பிரதேச சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பாகப் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து சாந்தபுரம் விளையாட்டு மைதானத்தில் சாந்தபுரம் வாழ் மக்களால் ஏற்பாடு செய்யப்பட்ட தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நேற்றைய தினம் இடம்பெற்றது.

குறித்த பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்பாதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

இந்த சாந்தபுரம் மண்ணுக்கென்றொரு தனி வரலாறுண்டு. இந்தக் கிராமம் தமிழ் மக்களின் விடுதலைக்காகப் போராடிய மாவீரன் சாந்தனின் பெயரால் உருவாக்கப்பட்டது.

இக்கிராமத்தின் பெயரை இல்லாதொழிப்பதற்காகவும் இக்கிராமத்தை இல்லாமல் செய்வதற்காகவும் கடந்த காலத்தில் அடாவடி ஆட்சி புரிந்த மகிந்த இனவாத அரசாங்கம் முயன்ற வேளையில் மகிந்த ராஜபக்சவின் கூட்டாளியான எமது பிரதேசத்தில் காட்டாட்சி நடத்திய மகிந்த ஆட்சியின் பங்காளி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் அதற்கு ஆதரவு தெரிவித்து மக்களை வெளியேற்றுவதற்குரிய நடவடிக்கையில் இறங்கியிருந்தார்.

இந்நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினராகிய நாம் எமது நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் மூலம் இதனை எதிர்த்து வெளிக்கொண்டு வந்ததன் விளைவாக அந்த முயற்சி அப்போது கைவிடப்பட்டது.

இனவாதி மகிந்தவின் ஆட்சிக் காலத்தில் மகிந்தவோடு சேர்ந்து கிளிநொச்சியில் காட்டாட்சி புரிந்த ஈ.பி.டி.பி சந்திரகுமார் இப்போதுதான் ஈ.பி.டி.பி இல்லை நான் மக்களின் மீட்பர் என்று கதைவிட்டுக்கொண்டு வாக்குக் கேட்டு மக்களிடம் வருகின்றார்.

அவர்கள் செய்ததை மறப்பதற்கு எமது மக்கள் என்ன முட்டாள்களா? தமிழ் மக்கள் தன்மானத்துடன் வாழ்பவர்கள் தமிழ் மக்கள் மாற்றார்க்கு துணைபோனவர்களல்ல. தமிழ் மக்கள் தமிழ் தேசியத்தின்பால் நிற்பவர்கள்.

கடந்த மகிந்த ஆட்சிக் காலத்தில் எமது பிரதேசங்களை அபிவிருத்தி செய்வதற்காக பெருமளவான நிதி ஒதுக்கப்பட்டது. அபிவிருத்திகள் நடைபெற்றனவா? எமது சாந்தபுரம் கிராமத்திற்கான இந்தப் பிரதான வீதியைப் பாருங்கள் புளுதி குடித்தபடிதான் தினமும் பயணிக்க வேண்டியுள்ளது.

இவ்வீதி காப்பெட் இடப்பட்ட வீதியாக எதிர்காலத்தில் மாறவுள்ளது. அதற்கான முயற்சியில் நாம் ஈடுபட்டுள்ளோம் என்பதையும் இந்த இடத்தில் குறிப்பிட்டே ஆகவேண்டும். இந்த அவல நிலை மாறவேண்டும்.

எமது பிரதேசங்களின் அபிவிருத்தியை நாமே திட்டமிட்டு முன்னெடுத்துச் செல்ல எமது பிரதேசங்களின் ஆட்சி அதிகாரம் எமக்கு வேண்டும்.

நாம் ஆண்ட தமிழ் பரம்பரை மாற்றாரின் காலில் மண்டியிட்டு வீழ்ந்து கிடப்பதா? நாம் இந்த நாட்டிலே எமது உரிமைகளைப் பெற்று சுயகௌரவத்துடன் வாழ்வதற்காக விடுதலை வேண்டிப் போராடுகின்ற ஒரு இனம் எமக்கு விடுதலை கிடைக்கும் வரை நாம் ஓயப்போவதில்லை.

எமது பிரதேசத்தின் ஆட்சி எமக்கே கிடைக்கும் என்பதே திண்ணம். எதிர்வரும் பத்தாம் திகதி எமது தமிழர்களின் சின்னமான வீட்டுச் சின்னத்திற்குப் புள்ளடியிட்டு எமது பலத்தை நாமே வெளிப்படுத்துவோம். எமது பிரதேசத்தின் ஆட்சி அதிகாரங்களை நாமே கைப்பற்றுவோம் எமது பகுதிகளை நாமே அபிவிருத்தி செய்வோம் வெற்றி நமதே என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், குறித்த கூட்டத்தின்போது, நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், வடமாகாணசபை உறுப்பினர்களான சு.பசுபதிப்பிள்ளை, த.குருகுலராசா, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கொள்கை முன்னெடுப்புப் பிரிவுச் செயலாளர் அ.வேழமாலிகிதன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

அத்துடன், கரைச்சிப் பிரதேச சபையின் முன்னாள் உபதவிசாளர் வ.நகுலேஸ்வரன், கனகாம்பிகைக்குளம் வட்டார வேட்பாளர் ப.குமாரசிங்கம் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் பலரும் மற்றும் அப்பகுதி வாழ் மக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.