மோடி மீது கடுப்பாகிய கர்நாடகா முதல்வர்!

கர்நாடகாவை பற்றி பொய் தகவல்களை சொல்லி கன்னடர்களின் மரியாதையை மோடி களங்கப்படுத்தி உள்ளார் என கர்நாடகா முதல்வர் சித்தராமைய்யா தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட் குறித்து கர்நாடகாவில் முதல்வர் சித்தராமைய்யா தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

இந்தக் கூட்டத்தின் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

பிரதமராக இருக்கும் மோடியின் வார்த்தையில் அதிக நம்பகத்தன்மை இருக்க வேண்டும். எங்கள் மீது ஊழல் புகார் சொல்பவர்கள் நேர்மையான முறையில் இந்த தேர்தலை எதிர்கொள்ளட்டும்.

கோத்ரா கலவரத்தில் 2000 பேர் உயிரிழந்துள்ளனர். பா.ஜ., ஆளும் அரியானாவில் என்ன சட்ட ஒழுங்கு உள்ளது.

பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பில்லை. கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர் தான் பா.ஜ.,வின் தேசிய தலைவர். அவர் பொய் மட்டுமே பேசுகிறார்.

இங்கேயும் சிறைக்கு சென்று வந்தவரை முதல்வர் வேட்பாளராக தேர்வு செய்துள்ளனர். கர்நாடகாவை பற்றி பொய் தகவல்களை சொல்லி கன்னடர்களின் மரியாதையை பிரதமர் களங்கப்படுத்தி உள்ளார்.

மாநிலங்களின் வளர்ச்சிக்கு அதிக நிதி ஒதுக்கி உள்ளதாக பெருமையாக சொல்லிக் கொள்கிறார் மோடி. இந்த பணம் எங்கிருந்து வந்தது? மாநிலங்கள் மக்களிடம் வரியாக வசூலித்து மத்திய அரசுக்க அளிக்கிறது. இது எங்கள் பணம் எங்களிடமே திருப்பி வந்துள்ளது.

9 ஆண்டுகளாக முதல்வராக இருந்த போது லோக்ஆயுக்தாவை கொண்டு வராத மோடிக்கு லோக்பால் பற்றி பேசி எனன்ன தார்மீக உரிமை உள்ளது?

மோடி ஊழலுக்கு வழி அமைத்து கொடுத்துள்ளார். தார்மீக ரீதியாக நாட்டின் பிரதமராக இருக்க அவருக்கு எந்த உரிமையும் இல்லை.

நாங்கள் ஆட்சிக்கு வந்த போது முதலீட்டில் கர்நாடகா 11 வது இடத்தில் இருந்தது. கடந்த 2 ஆண்டுகளில் முதல் இடத்தை எட்டி உள்ளோம். இது மத்திய அரசு வெளியிட்டுள்ள புள்ளிவிபரத்திலேயே குறிப்பிடப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.