மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்து நமக்கு ஒரு படிப்பினையாக அமைந்துள்ளது என துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை இரவு மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வளாகத்தில் திடீரென தீப் பற்றியது. கிழக்கு வாசலில் உள்ள கடைகள் முற்றாக எரிந்து சாம்பலாகின.
இந்த விபத்து ஏற்பட்டதையடுத்து, தீயணைப்புப் படையினர் விரைந்து வந்து தீயைக் கட்டுப்படுத்தினர். ஆனாலும், பக்தர்கள் பெரும் கொந்தளிப்பில் இருந்தனர்.
ஏற்கனவே கடைகளை அங்கே போட அனுமதிக்கக் கூடாது என்று பலமுறை சொல்லியும் யாரும், அதனைப் பொருட்படுத்தவில்லை. இனியாவது கடைகளைப் போட்டு பணம் சம்பாதித்துக் கொள்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.
கோவிலின் புனிதத் தன்மையை பாதுகாப்பதற்கு ஆலய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொண்டனர்.
இதனையடுத்து ஆய்வுப் பணி தொடங்கியது. இதன் ஒரு கட்டமாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்றைய தினம் கோவிலுக்குச் சென்றிருந்தார்.
இதன் போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த அசம்பாதவிதத்திற்கு கடைகள் தான் காரணம் என்றால் கடைகள் அகற்றப்படும்.
கோயில் உள்ளே வரும் பொருட்கள் தீவிரமாக சோதனை நடத்தப்படும். தீ விபத்தால் ஏற்பட்டுள்ள சேதம் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
கோயிலில் பாதிக்கப்பட்ட இடங்கள், ஆகம விதிப்படி சீரமைக்கப்படும். இந்தத் தீ விபத்து நமக்கு ஒரு படிப்பினையாக அமைந்துள்ளது என்றார்.
இன்றைய தினம் துணை முதல்வருடன் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, உதயகுமார் ஆகியோரும் ஆய்வுப் பணியில் உடனிருந்தனர்.