கல்வித் துறை சீர்கெட்டிருக்கிறது என்பதற்கு, லஞ்ச ஒழிப்புத் துறையால் அண்மையில் கையும் களவுமாகக் கைதுசெய்யப்பட்ட பாரதியார் பல்கலைக்கழகத் துணைவேந்தரே சாட்சி. உயர்கல்வித் துறையில் அலுவலக உதவியாளர் பணி முதல் உதவிப் பேராசிரியர், பேராசிரியர் என அனைத்துப் பணிகளுக்குமே பணம் இருந்தால் மட்டுமே வேலை.
மத்திய அரசின் பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிறகு ஊழல் குறையும் என எதிர்பார்த்திருந்த நிலையில், பல்கலைக்கழகப் பணிகளுக்கான லஞ்சமாக, 29 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை நேரடியாகவே பெற்றிருக்கிறார் பாரதியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கணபதி. இவற்றை வாங்கிக் கொடுக்க, உதவி புரிந்திருக்கிறார் வேதியியல் துறைத் தலைவர் தர்மராஜ். இவர்களுக்கு உடந்தையாக இருந்த தொலைதூர இயக்குநர் மீதும் தற்போது வழக்குப் பதிவாகியுள்ளது.
துணைவேந்தர் கணபதியின் வீடுகளில் சோதனை செய்தபோது, பணி நியமனங்களுக்காக ஏற்கெனவே பெற்ற விவரங்கள்கொண்ட ஆவணங்களும் டைரியும் சிக்கியுள்ளன. துணைவேந்தர் மற்றும் பேராசிரியர் மீது ஊழல் தடுப்புச் சட்டப் பிரிவுகளில் வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
கணபதி, துணைவேந்தராகப் பதவியேற்றவுடன் 82 காலிப் பணியிடங்களை நிரப்ப விளம்பரம் செய்தார். விண்ணப்பம் செய்தவர்களிடம் பேரம் பேசப்பட்டு, யார் அதிகளவில் பணம் கொடுக்கத் தயாராக இருந்தார்களோ, அவர்கள் மட்டுமே நேர்காணலுக்கு அழைக்கப்பட்டனர். நேர்காணலுக்குப் பிறகு, உடனடியாக சிண்டிகேட் கூட்டம் நடத்தப்பட்டு பணியில் உடனடியாகச் சேரவும் ஆணை வழங்கப்பட்டு, ஒரே நாளில் பணியிலும் சேர்க்கப்பட்டனர். இந்த விஷயத்தை உயர்கல்வித் துறையின் கவனத்துக்கு எடுத்துச் சென்றபோது, பணி நியமனங்களை நிறுத்த உத்தரவிடப்பட்டது. ஆனால், `முன்கூட்டியே சிண்டிகேட் கூட்டம் நடத்தப்பட்டு, பணி ஆணையும் வழங்கப்பட்டதால், பணி நியமனத்தை நிறுத்த முடியாது!’ என்று துணைவேந்தர் கணபதி மறுத்துவிட்டதாகச் சொல்கின்றனர் உயர் கல்வித் துறை அதிகாரிகள். துணைவேந்தராக கணபதி பதவியேற்ற பிறகு, 2016-17 ம் ஆண்டில் நியமிக்கப்பட்டவர்களிடம் 20 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாகவும், அதுகுறித்து தற்போது விசாரணை நடந்துவருவதாகவும் தெரிகிறது. இந்த விசாரணையில், மேலும் பல பேராசிரியர்கள் சிக்க வாய்ப்புள்ளது.
இதேபோன்று கோவை அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தராக இருந்த ராதாகிருஷ்ணன் மீது, மேஜை, நாற்காலி போன்ற உபகரணங்கள் வாங்கிய ஊழல் வழக்கும் குறிப்பிடத்தக்கதே! இந்த வழக்கில், ஒப்பந்தத்தாரர் கொடுத்த புகார் விசாரிக்கப்பட்டு, லஞ்சம் பெற்றது நிரூபிக்கப்பட்டு, ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது. தற்போது கோவை சிறையில் இருக்கிறார் முன்னாள் துணைவேந்தர் ராதாகிருஷ்ணன். இவருடைய அறைக்குப் பக்கத்து அறையில்தான் அடைக்கப்பட்டிருக்கிறார் கணபதி.
துணைவேந்தர்களின் ஊழல்கள் குறித்து பேராசிரியர்கள் சிலரிடம் பேசினோம்… “துணைவேந்தர் பணிக்கு லஞ்சம் கொடுத்துச் சேர்பவர்கள், தாங்கள் கொடுத்த பணத்தைவிட பல மடங்கு பணத்தை எப்படியாவது சேர்த்துவிட வேண்டும் என்பதில் குறியாக இருக்கின்றனர். தாங்கள் கொடுத்த பணத்தைத் திரும்பப் பெற, ஒவ்வொரு நாளும் எவ்வளவு தொகையைப் பெற வேண்டும் என நிர்ணயித்துச் செயல்படுகின்றனர். பழைய தேர்வுத்தாளை எடைக்குப் போடுவதிலிருந்து, பல்கலைக்கழகக் கட்டடங்களுக்கு வெள்ளை அடிப்பது, கட்டுமானப் பணிகளை ஒதுக்கீடு செய்வது, உபகரணங்கள் வாங்குவது என அனைத்திலும் கமிஷன் பெறுகின்றனர்” என்றார்.
பல்கலைக்கழகத்தில் பணியாற்றிவரும் பேராசிரியர் ஒருவர், “பல்கலைக்கழக வளாகத்தில் பிச்சைக்காரர்கள் இருந்தால், அவர்களிடம்கூட கமிஷன் பெறும் அளவுக்கு மாறியிருக்கிறது. `எங்களுடைய வளாகத்தில்தானே பிச்சையெடுத்தாய்!’ என்பதோடு, `இவ்வளவு தொகை கமிஷனாகக் கொடுக்க வேண்டும்’ என்ற நிலையில்தான் துணைவேந்தர்கள் இருக்கின்றனர். இவர்கள், பல்கலைக்கழக வளாகத்தில் கடை வைத்திருப்பவர்களிடமும் கேன்டீன் நடத்துபவர்களிடமும் கணிசமான அளவிலான பணத்தை வசூல்செய்கின்றனர். கட்டடங்கள் கட்ட ஒப்பந்ததாரர்களிடமும், மாணவர்களின் எண்ணிக்கையை உயர்த்த இணைப்புக் கல்லூரி முதலாளிகளிடமும் பெரிய தொகையைப் பெறுகின்றனர்.
பணி நியமனங்களில் அதிகளவில் பணம் பெறுகின்றனர். துறைகளில் காலியிடங்கள் இருந்தால், பணி உயர்வு எனும் போர்வையில் ஏற்கெனவே பணியில் இருப்பவர்களிடம் லஞ்சம் பெறுவது உண்டு. துறையில் இருப்பவர்கள் பணம் கொடுக்காதபோது, விளம்பரம் செய்து வெளிநபர்களின் விண்ணப்பத்தைப் பெற்று பணி நியமனம் செய்கின்றனர். துறைகளில் ஒதுக்கப்படும் நிதியில், `வெளிநாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களைப் பார்வையிடுகிறேன்’ என்ற போர்வையில் குடும்பத்துடன் சுற்றுலா செல்கின்றனர். பாரதியார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ஜேம்ஸ் பிச்சை, மொபைல்போன் கட்டணமாக 1.5 லட்சம் ரூபாயை பல்கலைக்கழக நிதியிலிருந்து செலுத்தியிருக்கிறார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்! இதுபோன்ற ஏராளமான முறைகேடுகள் நடக்கின்றன.
கடந்த பத்து பதினைந்து ஆண்டுகளில் சேர்ந்த துணைவேந்தர்கள் குறித்தும், அவர்களின் பணிக்குப் பிறகு சேர்த்த சொத்துமதிப்பையும் கணக்கீட்டால் இன்னும் பல விவரங்கள் வெளியாகும். கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு துணைவேந்தராக இருந்தவர், 120 கோடி ரூபாய் வரை பணம் சேர்த்திருக்கிறார்” என்றார்.
பாரதியார் பல்கலைக்கழக செனட் உறுப்பினரும், அரசு அறிவியல் மற்றும் கலைக்கல்லூரி ஆசிரியர் சங்கத்தின் தலைவருமான வீரமணி, “துணைவேந்தராகச் சேர்பவர்கள், அமைச்சருக்கும் ஆளும் கட்சியினருக்கும் பெரிய அளவில் பணம் கொடுத்துச் சேர்கின்றனர். இதனால், துணைவேந்தராகச் சேர்ந்தவுடன் முடிந்தளவுக்குப் பணம் பார்க்க ஆரம்பிக்கின்றனர். பணம் கொடுத்து பதவி பெறும் பேராசிரியர்கள், மாணவர்களிடம் வசூலிக்கத் தயங்குவதில்லை. இதனால், கல்வித்தரம் கெட்டுவிட்டது. உயர்கல்வித் துறையில் லஞ்சம், எம்.எல்.எம் போல் மேலிடத்திலிருந்து சாதாரணப் பணி வரை பரவிவிட்டது.
தற்போது வேலையில் சேர்பவர்கள் அனைவரும் பணம் கொடுத்தே சேர்கின்றனர். பணம் கொடுத்துச் சேர்பவர்களின் வேலையையும் பறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தகுதி அடிப்படையிலேயே பணி என்பதில் உறுதியாக இருந்தால் போதும். அரசு சரியாக இருந்தால் அரசு அதிகாரிகளும் சரியாக இருப்பார்கள்” என்றார்.
தமிழ்நாடு பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் அமைப்பின் தலைவர் அருள் அறம், செயலாளர் சதாசிவத்திடமும் பேசியபோது, “பல்கலைக்கழகங்களுக்கு இனியாவது தகுதியானவர்களை மட்டுமே துணைவேந்தர்களாக நியமிக்க வேண்டும். ஆசிரியர்கள் நியமனத்திலும் பல்கலைக்கழக நிதிப் பயன்பாட்டிலும் வெளிப்படைத்தன்மையும் சட்டத்திட்டங்களுக்கு உட்பட்டுச் செயல்படுதலும் வேண்டும். இவ்வாறு செய்தால் மட்டும் உயர்கல்வித் துறையின் தரம் உயரும்” என்றனர்.
பட்டைத் தீட்டப்படவேண்டிய கல்வித் துறை பாழ்பட்டுப்போனால், மாணவர்களின் கதி?