உத்தரப்பிரதேச மாநிலத்தில் உன்னோ என்னும் பகுதியில் திடீரென ஹெச்.ஐ.வி கிருமியால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது அம்மாநிலத்தையே அதிரவைத்திருக்கிறது.
உத்தரப்பிரதேசத்தின் உன்னோ மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் கடந்த 2017-ம் ஆண்டு நவம்பர் மாதம் தொண்டு நிறுவனம் ஒன்று இலவச மருத்துவ முகாம் நடத்தியது. அப்போது 400 பேருக்கு நடந்த பரிசோதனையில் சுமார் 40 பேருக்கு ஹெச்.ஐ.வி பாதிப்புக்கான அறிகுறி இருந்தது தெரியவந்தது. அவர்களில் குழந்தைகள் உட்பட 21 பேருக்கு ஹெச்.ஐ.வி பாசிட்டிவ் இருந்தது உறுதியானது. இந்தச் சம்பவம் அப்பகுதியையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் அபாயம் இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவத்தை தொடர்ந்து மாநில சுகாதாரத் துறை, நோய் தொற்றுக்கான காரணத்தை ஆராயத் தொடங்கியது.
இதனையடுத்து ஹெச்.ஐ.வி நோய் தொற்றுக்கான திடுக்கிடும் காரணம் தற்போது வெளியாகியுள்ளது. ராஜேந்திர குமார் என்பவர் உன்னோவில் மிகவும் மலிவான கட்டணத்தில் மருத்துவம் பார்த்து வந்தார். இதனால் அவரிடம் பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த மக்கள் சிகிச்சை பெற்று வந்தனர். அவரிடம் மருத்துவம் பார்த்த யாரோ ஒருவருக்கு ஹெச்.ஐ.வி பாசிட்டிவ் இருந்துள்ளது. ராஜேந்திர குமார், ஒரு நோயாளிக்குப் பயன்படுத்திய ஊசி சிரிஞ்சை நீரில் அலசிவிட்டுப் பலருக்கும் பயன்படுத்தும் வழக்கத்தைக் கொண்டுள்ளார். எனவே, ஹெச்.ஐ.வி பாதிக்கப்பட்டவருக்கு ஊசி போட்டுவிட்டு அதே ஊசியை பலருக்குப் பயன்படுத்தியுள்ளார். இதனால் குழந்தைகள் உட்பட பலருக்கு ஹெச்.ஐ.வி நோய் தொற்று பரவியுள்ளது.
உ.பி சுகாதாரத் துறையின் மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் பிரமோத் குமார், பலரின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கிய போலி மருத்துவர்மீது காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அவர் கொடுத்த புகாரின் பேரில் ராஜேந்திர குமார் மீது போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு உ.பி அரசு முகாம் அமைத்து சிகிச்சை அளித்து வருகிறது. இந்த சம்பவம் உ.பியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் இதுபோன்று மருத்துவ தவறுகள் நடப்பது புதிதல்ல. கடந்தாண்டு கோரக்பூரில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் மருத்துவமனை ஒன்றில் 290-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்நிலையில் மருத்துவ துறையில் பல்வேறு புதிய திட்டங்களை செயல்படுத்தி வரும் உத்தரப்பிரதேச அரசு அண்மையில் கோமியத்தில் இருந்து மருந்துகள் தயாரித்து அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.