திருநெல்வேலி மாவட்டம், ரெட்டியார்பட்டியைச் சேர்ந்தவர் சந்திரா. இவர் கோவை மாவட்டம், கருமத்தம்பட்டியில் சாலையைக் கடக்கும்போது லாரி மோதி ஏற்பட்ட விபத்தில், சம்பவ இடத்திலேயே பலியானார். இந்தக் காட்சி, அங்கு பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. அந்தப் பெண் சாலையை கடக்க நிற்பதும், ஒரு வழிப் பாதையில் வரும் டிப்பர் லாரி அவர்மீது மோதிச் செல்வதும் பதிவாகியுள்ளது.
ஏற்கெனவே, கருமத்தம்பட்டி நான்கு முனை சந்திப்பில், சாலை குறுகியதே விபத்துக்குக் காரணம் என்றும், இதனால் காலை மாலையில் பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாகவும் அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். மேலும், சாலை குறுகியதன் காரணமாகக் கடந்த மாதம் ஏற்பட்ட விபத்தில், இரண்டு குழந்தைகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும், உடனடியாக சாலையை விரிவாக்கம் செய்யாவிட்டால், போராட்டம் நடத்தப்படும் எனவும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த சந்திராவுக்கு, 3 வயதில் குழந்தை உள்ளது. தனது குழந்தையை, சென்னியாண்டவர் கோயில் பால்வாடியில் சேர்த்து விட்டு வரும்போதுதான் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது என்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து, லாரி டிரைவர் மற்றும் உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்து, கருமத்தம்பட்டி போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.