சொப்பு சாமானில் சமைத்து அசத்தும் தம்பதி!

அழகான வயல்வெளி… சுற்றிலும் மலைகள்… சில்லென வீசும் காற்று நாற்றுகளைத் தாலாட்டுகிறது. ஓடிவந்த கன்றுக்குட்டியை வரப்பில் நின்றிருக்கும் பசு ஒன்று குழாவுகிறது. இந்தக் காட்சியைப் பார்த்துக்கொண்டிருக்கும்போதே, வயல்வெளிக்கு நடுவே கூரையால் வேயப்பட்ட சிறிய வீட்டை உருவாக்குகிறார் ராம்குமார். அதன் முகப்பில் சொப்பு சாமான்கள் அலங்கரிக்கப்படுகின்றன. மண்பாண்டங்கள், சில்வர் பாத்திரங்கள், அடுப்பு, காய்கறிகள் நறுக்கும் கத்தி என எல்லாமே மினியேச்சராக இருக்கின்றன. ராம்குமாரின் மனைவி வளர்மதி அடுப்பு மூட்டுகிறார், காய்கறிகளை நறுக்குகிறார், அரிசி களைகிறார், சிக்கனைத் தயார்செய்கிறார். பத்து நிமிடங்களில் சொப்பு சாமான்களில் தயாரித்த சிக்கன் பிரியாணி ரெடி. நேரில் பார்த்துக்கொண்டிருந்த எங்களுக்கு மட்டுமல்ல, யூடியூப்பில் பார்ப்பவர்களுக்கும் நாவில் நீர் ஊறியிருக்கும்.

குழந்தைப் பருவத்தில் சொப்பு சாமான்களில் உணவு சமைத்து விளையாடுவோம். அதையே கையிலெடுத்து, யூடியூப்பில் பதிவிட்டு வைரலாக்குகிறார்கள், திருவண்ணாமலையைச் சேர்ந்த ராம்குமார் – வளர்மதி தம்பதி.

சொப்பு சாமான்களில் சமைக்கும் வளர்மதி

“என் மனைவி எனக்குக் குழந்தை மாதிரி. எப்பவுமே விளையாட்டா பேசிக்கிட்டே இருப்பாங்க. நான் ஏதாவது ஒரு தொழில் தொடங்கலாம்னு முடிவுபண்ணி அவங்ககிட்ட ஐடியா கேட்டேன். ‘சரி யோசிச்சு சொல்லுறேன்’னு சொன்னாங்க. ‘இப்போ உள்ள ட்ரெண்ட்டுக்குத் தகுந்த மாதிரி யூடியூப்ல ஏதாவது பண்ணலாமே’னு சொன்னேன். ‘அப்படின்னா சொப்பு சாமானில் சமையல் பண்ணுவோம்’னு சொன்னாங்க. எனக்கு கன்ஃபியூஷனா இருந்துச்சு. எப்பவும் விளையாட்டா பேசற மாதிரி சொல்றாங்களோ. லைஃப் மேட்டரிலுமா விளையாடறதுனு நினைச்சேன். ஆனா, அவங்க சீரியஸாதான் சொல்றாங்கன்னு புரிஞ்சது. அப்புறம், ஜப்பான் மினியேச்சர் குக்கிங்னு மினியேச்சர்களில் சமையல் செய்யறதை யூடியூப்பில் பார்த்தோம். இங்கே யாரும் இதைச் செய்யலை. நாம ஆரம்பிப்போம்னு முடிவுபண்ணினோம்” என்று முன்கதை சுருக்கம் சொல்கிறார் ராம்குமார்.

சொப்பு சாமான் சமையல்

“சொப்பு சாமானில் சமையல் பண்ணலாம்னு சொன்னதும் வீட்டில் இருந்தவங்க சிரிச்சாங்க. இவர் மட்டும் என் மேலே முழு நம்பிக்கை வெச்சார். ரெண்டு நாளைக்குள்ளே சொப்பு சாமான்களில் என்னவெல்லாம் கிடைக்குமோ அத்தனையையும் வாங்கிட்டு வந்துட்டார். வீட்டுல இருந்த எல்லாருக்குமே ஆச்சரியமாயிடுச்சு. அப்பவே என் நம்பிக்கைக்கு இவர் உயிர் கொடுக்க ஆரம்பிச்சுட்டார்” – கண்கள் பூரிக்க ராம்குமாரின் கைகளை இறுகப் பற்றுகிறார் வளர்மதி.

சொப்பு சாமான்களில் சமையல் செய்ய முடிவுசெய்ததும் அதற்கான ஏற்பாடுகள் அடுத்தடுத்து தயாராகின. ஆனால், ஒரு கிராமம் சார்ந்த சூழலில் சமைக்க ஆரம்பிக்கும்போது இருவருக்குமே தயக்கமாக இருந்திருக்கிறது. முதல் ஷூட் திருவண்ணாமலை அருகேயுள்ள ஒரு கிராமத்தில் நடக்க அங்கிருந்த மக்கள் வேடிக்கையாகப் பார்த்து சிரித்திருக்கிறார்கள்.

“அந்த நாளை வாழ்க்கையில் எப்பவுமே மறக்க முடியாது. காரில் சொப்பு சாமான்களை எடுத்துட்டுப் போய் ஒரு வயல்வெளியில் அடுக்கினோம். இவர் வீடியோ எடுக்க, நான் சமைக்க ஆரம்பிச்சேன். நாங்க சமைக்கிறதை முதலில் பார்த்தது ஒரு சின்னப் பையன். எனக்கு ரொம்ப கூச்சமா இருந்துச்சு. ‘பரவாயில்லே பையன்தானே’னு நினைச்சுக்கிட்டே செய்துட்டு இருந்தேன். கொஞ்ச நேரத்தில் திரும்பிப் பார்த்தால், ஒரு கூட்டமே நின்னுட்டிருக்கு. களை பறிக்க வந்திருந்த அவங்க ஒண்ணுகூடி சிரிக்க ஆரம்பிச்சுட்டாங்க. ‘இதை சமைச்சு காக்காவுக்கு பறிமாறுவீங்களா?’னு கிண்டலா கேட்டாங்க. சிரிச்சு சமாளிச்சுட்டு வீடியோ எடுத்து முடிச்சோம். அந்த முதல் ரெசிப்பியை யூடியூப்ல அப்ளோடு பண்ணினோம். நாங்க எதிர்பார்த்ததைவிட அதிகமான ரெஸ்பான்ஸ் கிடைச்சது. அந்த ஊக்கம்தான் அடுத்தடுத்து சமைக்க வெச்சது. இப்போ, அந்தக் கிராமத்துக்காரங்களும் எங்களுக்கு சப்போர்ட் பண்றாங்க” எனக் குழந்தையாகச் சிரிக்கிறார் வளர்மதி.

ராம்குமார் வளர்மதி தம்பதி

“சிட்டியில இருக்கும் பலரும் கிராமத்தை மிஸ் பண்ணுவாங்க. அதோடு, இப்போ உள்ள தலைமுறை சொப்பு சாமானை வெச்சு விளையாடுறதையே மறந்துட்டாங்க. நம்ம பாரம்பரிய உணவு முறைகளும் மாறிட்டே வருது. இது எல்லாத்தையும் மீட்கும் வகையில் இதைச் செய்யறோம். யூடியூப்ல எங்களின் ‘தி டைனி ஃபுட்ஸ்’ சேனல் செம வைரல். இட்லி – மீன் குழம்பு, ரொட்டி – இறால், சிக்கன் ஆம்லெட், மட்டன் பிரியாணி என எல்லா ரெசிப்பியுமே ஹிட். தமிழ்நாட்டின் உணவுப் பிரியர்கள் எல்லாரிடமும் நாங்க போய் சேர்ந்திருக்கோம். ஆரம்பத்தில் என் மனைவி சொன்னதை விளையாட்டா நினைச்சு விட்டிருந்தால், இந்தப் பேரும் புகழும் கிடைச்சிருக்காது. ஸோ, எல்லாப் புகழும் மனைவிக்கே” எனப் பெருமிதப் புன்னகையை வீசுகிறார் ராம்குமார்.

எதைச் செய்வதாக இருந்தாலும், அதில் ஒரு புதுமையைப் புகுத்தினால் நிச்சயம் வெற்றி அடையலாம் என்பதற்கு, முன்னுதாரணமாக மிளிரும் ராம்குமார் மற்றும் வளர்மதிக்கு மணக்க மணக்க வாழ்த்துச் சொல்வோம்.