இயக்குநர் பார்த்திபன்-சீதா தம்பதியரின் மகளும் இயக்குநர் மணிரத்னத்தின் உதவி இயக்குநருமான கீர்த்தனாவுக்கும் பிரபல படத்தொகுப்பாளர் ஸ்ரீகர் பிரசாத்தின் மகன் அக்ஷய்க்கும் வரும் மார்ச் 8- ம் தேதி திருமணம் நடைபெறுகிறது.
கடந்த சில தினங்களாக இயக்குநர் பார்த்திபன் கமல்ஹாசன், ரஜினிகாந்த், விஜய் உள்ளிட்ட பல திரைப் பிரபலங்களைத் தொடர்ந்து சந்தித்து வந்தார். எதற்காக இந்தச் சந்திப்பு என்று மீடியா ஆர்வத்துடன் விசாரிக்க ஆரம்பித்தது. ஆனால், அந்தச் சந்திப்புகளுக்கான காரணம் குறித்து பார்த்திபன் எதுவும் தகவல் தெரிவிக்கவில்லை. அவரின் மகள் கீர்த்தனாவுக்கும் படத்தொகுப்பாளர் ஸ்ரீகர் பிரசாத்தின் மகன் அக்ஷய்க்கும் திருமணம் நடக்க இருப்பதும், அதற்கான அழைப்பிதழைக் கொடுக்கவே இந்தச் சந்திப்புகள் நடந்ததாகவும் பிறகு தெரியவந்தது.
இயக்குநர் பார்த்திபன், ‘புதிய பாதை’ திரைப்படம் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானவர். அதில் ஹீரோயினாக நடித்த சீதாவையே விரும்பித் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு அபிநயா, கீர்த்தனா என்ற இரு மகள்கள், ராக்கி என்ற மகன் என மொத்தம் மூன்று பிள்ளைகள். இவர்களில் கீர்த்தனா, மணிரத்னம் இயக்கிய ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானார். இயல்பான, சிறப்பான நடிப்பால் ‘சிறந்த குழந்தை நட்சத்திரம்’ என்று அந்த ஆண்டுக்கான தேசிய விருதையும் கீர்த்தனா பெற்றார்.
லயோலா கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன் படித்த கீர்த்தனா, தன்னை சினிமாவுக்கு அறிமுகப்படுத்திய மணிரத்னத்திடமே பிறகு உதவி இயக்குநராகச் சேர்ந்தார். தற்போதுவரை அவரிடம்தான் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில்தான், கீர்த்தனாவுக்குத் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்துப் பார்த்திபனிடம் பேசினோம். ‘ஒரு தகப்பனா சந்தோஷமா இருக்கு. கீர்த்தனா நம்மளை மாதிரி கிடையாது. ஏதாவது சாதிச்சுட்டு பிறகு பேசலாம்னு நினைக்கிறாங்க. ஆமாம் சார், சினிமா டைரக்ட் பண்ணும்போது நிச்சயம் பேசுவாங்க!” – ஒரு தகப்பனாக மகளை உயர்த்திப் பிடிக்கிறார் பார்த்திபன்.
கீர்த்தனாவின் அம்மாவும் பிரபல நடிகையுமான சீதாவிடம் மகளின் திருமணம் குறித்துப் பேசினோம். “என் சின்னமகள் கீர்த்தனாவுக்கு வரப்போற மாப்பிள்ளையை அவரின் ஏழுவயதிலிருந்தே எங்களுக்கு நல்லாத் தெரியும். எங்க வீட்டுக்கு அடிக்கடி வருவார். கீர்த்தனாவுடன் விளையாடுவார். பிறகு இருவரும் லயோலா காலேஜில் ஒன்றாகவே விஷூவல் கம்யூனிகேஷன் கோர்ஸ் படிச்சாங்க. ஜாதகப் பொருத்தம் பார்த்து, தேடிப்பிடிச்சாலும், கோயில்கோயிலா போய் சாமி கும்பிட்டாலும் அக்ஷய் மாதிரி ஒரு மாப்பிள்ளை எங்களுக்குக் கிடைக்கமாட்டார். அக்ஷய் அப்படிப்பட்ட குணமுள்ளவர்.
என் மகள் மாமியார் விஷயத்திலும் ரொம்ப ரொம்பக் கொடுத்து வைத்தவள். எங்கள் சம்பந்தி, அதாவது அக்ஷய்யின் அம்மாவைப்போல் ஒரு நல்ல பெண்மணியைப் பார்ப்பது கடினம். எறும்புக்கும் தீங்கு நினைக்காத வெள்ளந்தி மனசு கொண்டவங்க. அக்ஷய்யின் அப்பா ஶ்ரீகர்பிரசாத் சார் பிரபலமான எடிட்டர். இயக்குநர் மணிரத்னத்தின் பெரும்பாலான படங்களுக்கு அவர்தான் எடிட்டர். இந்தியில் ஷாருக்கானின் பல படங்களுக்கு ஸ்ரீகர் சார்தான் எடிட்டர். அக்ஷய் இப்போ தன் அப்பாவுடன் சேர்ந்து எடிட்டரா வொர்க் பண்ணிட்டு இருக்கார். தவிர, தமிழ்ல வந்த ‘பீட்சா’ படத்தை, அக்ஷய் இந்தியில் ரீமேக் பண்ணி டைரக்ட் பண்ணினார்.
அந்தக் காலத்தில் எம்.ஜி.ஆர், சிவாஜி சார்லாம் எல்.வி.பிரசாத் அவர்களை எங்கே பார்த்தாலும் காலில் விழுந்து வணங்கி ஆசீர்வாதம் வாங்குவார்களாம். அந்தளவுக்கு எல்.வி.பிரசாத் அவர்கள், தென்னிந்திய சினிமா உலகில் ஜாம்பவானாகத் திகழ்ந்தவர். அவருடை சொந்தத் தம்பியின் பேரன்தான் எங்கள் மாப்பிள்ளை அக்ஷய். சினிமா உலகில் பெரும் சாதனை புரிந்த எல்.வி.பிரசாத் அவர்களின் குடும்பத்தில் நாங்கள் சம்பந்தம் செய்துகொள்ள கொடுத்து வைத்திருக்கவேண்டும்னுதான் சொல்லணும்.
என் மகள் கீர்த்தனா மிகுந்த புத்திசாலியான பெண். ஏதோ நேற்று காதலித்து இன்னைக்குக் கல்யாணம் செய்துக்கணும்னு கேட்டு அடம்பிடிக்கலை. கடந்த எட்டு வருடங்களா ஒருத்தரை ஒருத்தர் விரும்பி வந்தாங்க. ஒருநாள், ‘அக்ஷய்யை விரும்புறேன்’னு கீர்த்தனா வந்து சொன்னப்போ, நாங்க யாரும் அதிர்ச்சியடையலை. எல்லாரும் சந்தோஷப்பட்டோம். ஏன்னா, எங்களுக்கு அக்ஷயை நல்லா தெரியும். அதேபோல கீர்த்தனாவையும் நல்லாப் புரிஞ்சு வெச்சிருக்கோம். இதைவிட முக்கியம், அவங்க இருவரும் ஒருவரை ஒருவர் புரிஞ்சவங்க. அதனால இருவரின் விருப்பத்தை நாங்க ஏத்துக்கிட்டோம்.
கடந்த எட்டு வருடமா தன் காதல்ல உறுதியா இருந்து, இன்னைக்குக் கல்யாணம்வரை வந்துள்ளார், கீர்த்தனா. ‘அய்யோ என் மகள் காதல் கல்யாணம் செய்துகொள்கிறாளே’ என்ற வருத்தம் எனக்குக் கிடையாது கீர்த்தனாவின் காதலை நான் ஆதரிக்கிறேன், மதிக்கிறேன். அக்ஷய் மாதிரியான குணம் கொண்ட பையனுக்குத்தான் என் பொண்ணை கொடுக்கணும்னு ஆசைப்பட்டேன். அதுதான் நடந்திருக்கு.
என் முதல்மகள் அபிநயாவுக்குக் கல்யாணத்தைச் செய்யாமல் இரண்டாவது மகளுக்குத் திருமணம் செய்வது சரியல்ல என்கிற எண்ணத்தில் அபிநயாவுக்கு மாப்பிள்ளை பார்த்து வந்தோம். நிறைய ஜாதகங்கள் வந்தன. ஆனால், பொருத்தமான ஜாதகம் அமையலை. கீர்த்தனாவுக்கு உடனே கல்யாணம் செய்துவைக்கணும் என்பதுக்காக அபிக்கு அவசர அவசரமா கல்யாணம் செய்துவைக்க எங்களுக்கு விருப்பமில்லை. அதனால, கீர்த்தனாவுக்குக் கல்யாணம் முடிஞ்சதும் அபிக்கு மாப்பிள்ளை பார்க்கலாம்னு முடிவெடுத்தோம்.
போன வருடம் ஜூன் மாசம் ஒரு நல்ல நாளில் இருவீட்டாரின் உறவினர்களையும் அழைச்சு அக்ஷய்க்குக் கீர்த்தனாவை நிச்சயம் செய்தோம். அப்போதே 2018- ம் ஆண்டு மார்ச் மாதம் 8- ம் தேதி கல்யாணம் செய்வதாக முடிவுசெய்தோம். கீர்த்தனாவுக்குக் காதல் கல்யாணம் என்பதால், நாங்கள் அவங்களோட ஜாதகப் பொருத்தம் பார்க்காமலே திருமணத்தை நிச்சயம் செய்துட்டோம். பிறகு இப்போ அக்ஷய், கீர்த்தனாவின் ஜாதகத்தைப் பார்த்தோம். நாங்கள் எதிர்பார்த்ததைவிட ஜாதகம் பிரமாதமா பொருந்தியிருக்கு. இது எங்களுக்கு இரட்டை மகிழ்ச்சி. இரண்டுபேரும் அவங்களோட குணம் மாதிரியே நல்லா இருப்பாங்க!” என்றார், பூரிப்புடன்.