எனக்கு முதல்வர் பதவி மீது ஆசையில்லை; தகுதிநீக்கத்துக்கு ஆளான 18 எம்.எல்.ஏக்களில் ஒருவருக்கு முதல்வர் பதவி தரப்படும்’ என டி.டி.வி.தினகரன் பேசியிருப்பது அ.தி.மு.க வட்டாரத்தில் உன்னிப்பாகக் கவனிக்கப்படுகிறது. ‘ தகுதிநீக்கத்துக்கு ஆளான எம்.எல்.ஏக்களை வளைப்பதற்கு ஆளும்கட்சி தரப்பில் முயற்சி நடந்து கொண்டிருக்கிறது. அதை முறியடிப்பதற்காகவே தினகரன் இவ்வாறு பேசுகிறார்’ என்கின்றனர் அமைச்சர்கள் தரப்பில்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வெற்றிக்குப் பிறகு, மாநிலம் முழுவதும் உள்ள தனது ஆதரவாளர்களை சந்திப்பதற்காக சுற்றுப்பயணம் செல்ல முடிவெடுத்தார் டி.டி.வி.தினகரன். ஒவ்வொரு மாவட்டத்திலும் தனக்கான செல்வாக்கு என்ன என்பதை அடையாளப்படுத்திக் கொள்ளும்விதமாகவும் சுற்றுப்பயணத்தை வடிவமைக்க விரும்பினார். அதற்கேற்க, கடந்த சில நாட்களாக மக்கள் சந்திப்பு புரட்சிப் பயணத்தை நடத்தி வருகிறார். நேற்றுடன் முதற்கட்ட பயணத்தை முடித்த தினகரன், இன்று கதிராமங்கலம் பகுதி மக்களைச் சந்தித்துப் பேசினார்.
கூட்டத்தில் பேசிய தினகரன், ‘ கதிராமங்கலம் மண்ணில் சிறப்பான முறையில் விவசாயம் நடந்து கொண்டிருந்தது. ஓ.என்.ஜி.சி. மீத்தேன் பணிகளால் மண்வளம் பாதிக்கப்படும். விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்படும். எனவே, கதிராமங்கலத்தையும் காவிரியையும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும். இதற்காகப் போராடிவரும் மக்களுக்கு நாங்கள் துணை நிற்போம். இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்மீது பொய் வழக்குப் போடப்பட்டுள்ளது. எங்கள் தலைமையில் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு அவர்கள்மீது போடப்பட்ட வழக்குகள் வாபஸ் பெறப்படும். இப்போது ஆட்சியில் உள்ளவர்களில், ஆறு பேரைத் தவிர எங்கள் அணிக்கு யார் வந்தாலும் ஏற்றுக்கொள்வோம். அப்படி வந்தால், தேர்தல் வராமலேயே தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும். அதில், நான் முதல்வர் பொறுப்பை ஏற்க மாட்டேன். என்னோடு வந்த 18 எம்.எல்.ஏ-க்களும் தியாகிகள்; அவர்களில் ஒருவருக்கு முதல்வர் பதவி தரப்படும்’ என்றார்.
தினகரனின் பேச்சு குறித்து நம்மிடம் பேசிய ஆளும்கட்சி நிர்வாகி ஒருவர், ” எம்.எல்.ஏ பதவி இல்லாமல் நீதிமன்றத்தை சந்தித்துக் கொண்டிருப்பதில் 18 பேரில் பலருக்கு உடன்பாடில்லை. செந்தில் பாலாஜி, பழனியப்பன் உள்பட சிலர்தான் கொதித்துக் கொண்டிருக்கிறார்கள். தகுதிநீக்க வழக்கில் சசிகலா தரப்புக்கு சாதகமாக தீர்ப்பு வரலாம் என்ற பேச்சு பரவலாக எழுந்துள்ளது. ‘ எங்கள் பக்கம்தான் வெற்றி’ என தினகரன் ஆட்களில் சிலர் இப்போதே கொண்டாட்டத்தைத் தொடங்கிவிட்டார்கள். ஒருவேளை, எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராக தீர்ப்பு வந்தால் என்ன செய்வது என்ற விவாதத்தில் அமைச்சர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து, 18 எம்.எல்.ஏக்களிடமும் ஆட்சியில் இருப்பவர்களின் தூதுவர்கள் பேசத் தொடங்கியுள்ளனர்.
‘ உங்கள் கோரிக்கைகள் என்னவாக இருந்தாலும் நிறைவேற்றித் தரப்படும்’ என்ற வாக்குறுதியை அளித்துள்ளனர். இதனை சிலர் மறுத்து வருகின்றனர். அவர்களிடம் மீண்டும் பேசிய தூதுவர்கள், ‘ எங்களுடைய கோரிக்கையை ஏற்பதும் ஏற்காமல் இருப்பதும் உங்கள் விருப்பம். எங்களுக்கு எதிராக தீர்ப்பு வந்தாலும், உடனே நாங்கள் மேல்முறையீட்டுக்குச் செல்வோம். எம்.பி தேர்தல் வரையில் இந்த வழக்கை இழுத்தடித்துக் கொண்டே இருப்போம். பதவி இல்லாமல் எத்தனை நாட்கள் இருப்பீர்கள்? எடப்பாடி பழனிசாமி பக்கம் வந்துவிடுங்கள்’ என வலியுறுத்தத் தொடங்கியிருக்கிறார்கள். இன்னும் பத்து நாட்களுக்குள் தீர்ப்பு வர இருக்கிறது. அதற்குள் 18 எம்.எல்.ஏக்களில் பலரை எடப்பாடி பழனிசாமி பக்கம் இழுக்கும் வேலைகள் நிறைவடைந்துவிடும்” என்றார் உறுதியாக.
ஆளும்கட்சி தரப்பின் தூது குறித்து, தினகரன் ஆதரவாளரான தங்க.தமிழ்ச்செல்வனிடம் பேசினோம். ” நாங்கள் 18 பேரும் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறோம். அந்த அடிப்படையில்தான் எங்களில் ஒருவரை முதல்வராக்குவதாக அவர்(தினகரன்) பேசியிருக்கலாம். எடப்பாடி பழனிசாமி தரப்பில் இருந்து எங்களிடம் எந்தவிதமான பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை. தகுதிநீக்க வழக்கில் எங்களுக்கு சாதகமாகவே தீர்ப்பு வரும். ‘நாங்கள் இல்லாமல் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக் கூடாது’ என்பதையும் வழக்கில் குறிப்பிட்டிருக்கிறோம். நம்பிக்கை வாக்கெடுப்பு என்ற உத்தரவோடுதான் சட்டசபைக்குள் நுழைவோம்.
‘இந்த அரசுக்குப் பலம் இருக்கிறதா…இல்லையா?’ என்பதை நிரூபிப்பதுதான் எங்களது நோக்கம். ஆட்சியில் யார் வேண்டுமானாலும் இருக்கலாம். நாங்கள் சொல்லும் ஆறு பேர் அமைச்சர்களாக நீடிக்கக் கூடாது என்பதுதான் எங்களது ஒரே கோரிக்கை. அந்த ஆறு அமைச்சர்கள் யார் என்பதை நேரம் வரும்போது சொல்வோம். ஆட்சியில் இருக்கும் அமைச்சர்களில் பத்து பேரைத் தவிர, மற்ற அனைவரும் எங்களுக்கு ஆதரவாக உள்ளனர். எம்.எல்.ஏக்களில் பெரும்பகுதியினர் எங்கள் பக்கம் உள்ளனர். ஆர்.கே.நகர் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, அவர்கள் எங்கள் பக்கம் வந்துவிட்டனர். ஆட்சி கவிழ்ந்துவிடும் என்ற அச்சத்தில்தான் அவர்கள் அமைதியாக இருக்கின்றனர். நம்பிக்கை வாக்கெடுப்பில் நாங்கள் உறுதியாக வெற்றி பெறுவோம்” என்றார் நிதானமாக.