திருச்செந்தூரில் வரும் 11-ம் தேதி முருகனுக்கு விழா எடுக்க இருக்கிறார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். ‘இப்படியொரு விழா நடத்தக் கூடாது’ என இந்துத்துவ அமைப்புகள் போர்க்கொடி உயர்த்தியுள்ளன. ‘ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்து நாங்கள் வாழ்கிறோம். தெற்காசியா முழுவதும் பரவியிருந்த கூட்டம் இது. எங்கள் விழாவை யாராலும் தடுக்க முடியாது’ எனக் கொதிக்கிறார் சீமான்.
ஒவ்வோர் ஆண்டும் திருமுருகப் பெருவிழா என்ற பெயரில், முருகனுக்கு விழா எடுத்து வருகிறார் சீமான். இந்த ஆண்டு திருச்செந்தூரில் நடக்க இருக்கும் விழாவுக்குத் தயாராகி வருகிறார்கள் நாம் தமிழர் கட்சியின் தொண்டர்கள். நாகர்கோவிலிலிருந்து திருச்செந்தூர் வரையில் வேல் பேரணி நடக்க இருக்கிறது. முருகப் பெருவிழாவை நடத்தக் கூடாது என நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகளுக்கு மிரட்டல்கள் வருவதாகத் தகவல் வெளியாகி வருகிறது. ‘திருச்செந்தூரில் கால் வைத்தால் வெட்டுவோம்’ என்ற ரீதியில் அழைப்புகள் வருவதால், கொதிப்பில் இருக்கிறார் சீமான்.
சீமானிடம் பேசினோம். “திருமுருகப் பெருவிழா நடத்தக் கூடாது எனச் சிலர் கிளம்பியிருக்கிறார்கள். ‘கறுப்புக் கொடி காட்டுவோம்; சிவப்புக் கொடி காட்டுவோம்’ என வேலையற்ற சிலர் மிரட்டுவதையெல்லாம் நாங்கள் பொருட்படுத்தவில்லை. என்னை வெட்டுவதாகச் சொல்கிறவர்கள் செய்து காட்டட்டுமே. எங்கள் விழாவை அடக்க நினைக்கிறார்கள். வீழ்ந்த இனம் எழும்போது வரலாற்றிலிருந்துதான் எழ வேண்டும். வேரிலிருந்துதான் துளிர்க்க வேண்டும். அப்படித்தான் இந்தத் தேசிய இனம் துளிர்க்க நினைக்கிறது. நாங்கள் வீர சைவர்கள். பட்டை அடித்து மாயோனை வழிபடும் கூட்டம். ஐந்து நிலங்களில் ஐந்து தெய்வங்களை வழிபட்ட கூட்டம் இது. சைவராக இருந்தால் மதுரை ஆதீனமும் பொன்னம்பல அடிகளாரும்தான் தலைவர்களாக இருப்பார்கள். முருகனால் உங்களுக்கு என்ன பிரச்னை? முருகன் தோலில் பூணூல் இல்லை. அவர் என்ன பிராமணரா? குறிஞ்சி நிலத்தின் காடுகளில் இருந்தவன், எப்படி வெள்ளை நிறத்தில் இருந்திருக்க முடியும்?
காடுகளில் சித்தர்போல முடியைவிட்டுக்கொண்டு இருந்திருப்பானா? மழுங்கச் சிரைத்துவிட்டுக் கொழு கொழுவெனக் கொழுக்கட்டை போல இருந்திருப்பானா? நாங்கள் முன்வைக்கும் உருவம்தான் இவர்களுக்குப் பிரச்னை. உடல் முறுக்கேறி அழகாக இருந்ததால்தான் முருகன் என மாறியது. பழனி கோயிலில் முருகன் வெள்ளையாகவா இருக்கிறான்? ‘நீல வண்ணக் கண்ணா வாடா’ எனப் பாடுகிறீர்கள். கண்ணன் கறுப்பா? நீலமா? முல்லை நிலத்தில் வழிபட்ட தெய்வம் மாயோன். குறிஞ்சிக்கும் முல்லைக்கும் இடையில் வாழ்ந்த மக்கள் இடையர் என அழைக்கப்பட்டார்கள். வேளாண்மையை நம்பி வாழ்ந்தவர்கள். மழைதான் அவர்களுக்கு வாழ்வாதாரம். மா என்றால் கறுப்பு. அதை வழிபடுகிற தெய்வத்தை மரியாதையாக அழைக்க மாயோன் என உருமாறியது. என் காரைத் திருடிக்கொண்டுபோய் வேறு வண்ணத்தை அடித்துக்கொண்டதுபோல, நீங்கள் மாற்றிவிட்டீர்கள். தமிழர்களின் வழிபாடு, பண்பாடு என அனைத்து அடையாளங்களையும் அழித்துவிட்டார்கள்” என ஆதங்கப்பட்டவர்,
“முருகப் பெருவிழாவின்போது, நாகர்கோவிலிலிருந்து திருச்செந்தூரில் வரை வேல் பேரணி நடத்துகிறோம். இந்தக் கூட்டத்தில் தமிழர் மெய்யியல் குறித்து நெல்லைக் கண்ணன் பேச இருக்கிறார். இது கிறிஸ்துவர், இஸ்லாமியர்களுக்கு எதிரானது அல்ல. ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்து நாங்கள் வாழ்கிறோம். தெற்காசியா முழுவதும் பரவியிருந்த கூட்டம் இது. எங்கள் கூட்டத்துக்கு எதிர்ப்பு வந்தால், நாங்களும் எதிர்ப்பு காட்டுவோம். அரசுக்கு எதிராகத் தொடர்ந்து போராட்டம் நடத்திக்கொண்டிருக்கிறோம். அதற்காக இந்த அரசாங்கம் பதவி விலகிவிட்டதா என்ன? தடை போட்டால், தடையை மீறி நடத்துவோம். முருகனுக்குக் கறுப்பு நிறம் எனக் கொதிப்பவர்கள், தைப்பூசத்துக்கு ஏன் விடுமுறை அளிக்கவில்லை என ஆட்சியாளர்களைப் பார்த்துக் கேட்கவில்லை? திருத்தணியைத் தாண்டி அரை அடிகூட இவர்கள் முருகனை நகர்த்தவில்லை. விநாயகர் சதுர்த்தி அளவுக்கு முருகனை ஏன் இவர்கள் கொண்டாடவில்லை? தமிழர்களின் அடையாளம் முருகப் பெருவிழாதான். விநாயகர் சதுர்த்தியை வீழ்த்தும் அளவுக்கு முருகப் பெருவிழா பரவும் என்பதை உறுதியாகவே கூறிக்கொள்கிறோம்” என்றார்.