பசில் ராஜபக்ஷ மக்களுக்கு விடுக்கும் கோரிக்கை!

தற்போதைய ஆட்சி மீது நாட்டு மக்கள் கொண்டுள்ள வெறுப்பு எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் மூலம் வெளிப்படுத்தப்படும் என முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இன்று கொழும்பில் இடம்பெற்ற பொதுஜன பெரமுன கட்சியின் ஊடக சந்திப்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

மேலும், நாட்டின் வளங்களை சர்வதேசத்திற்கு விற்றும், அரச சொத்துகளை தனியார்களுக்கு கொடுத்தும் மக்களுக்கு பாரிய பொருளாதார நெருக்கடியினை ஏற்படுத்தும் வகையிலுமே தற்போது ஆட்சி நடைபெற்றுக் கொண்டு வருகின்றது எனக் கூறிய பசில், இவற்றுக்கு எதிராக பொதுமக்கள் அணி திரள வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

பண்டாரநாயக்க காலத்தில் உருவான சுதந்திரக்கட்சியின் உண்மையான கொள்கைகளை தற்போதும் காப்பாற்றி வருவது மஹிந்த ராஜபக்ஷவும், பொதுஜன பெரமுனவும் மட்டுமே எனச் சுட்டிக்காட்டிய பசில், உண்மையான சுதந்திரக்கட்சி ஆதரவாளர்கள் தமது வாக்குகளைச் சரியாக பயன்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

மத்திய வங்கியைக் கொள்ளையிட்டது போல கிராம மட்டங்களில் உள்ள வங்கிகளை கொள்ளையிடவும், தேசிய சொத்துக்களை விற்றது போல கிராமிய மட்டத்தில் உள்ள சொத்துக்களை விற்கவுமே தற்போது ஐக்கிய தேசிய கட்சி திட்டமிட்டு வருகின்றது எனவும் பசில் ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.