75 ரவுடிகள் சிக்கியதன் பின்னணி!

சென்னையில் சினிமா பட பாணியில் பிறந்தநாள் விழா கொண்டாடிய 60-க்கும் மேற்பட்ட ரவுடிகளைச் சென்னை போலீஸ் துப்பாக்கி முனையில் கைது செய்து அதிரடி காட்டியுள்ளது.

rowdies

காவல் ஆய்வாளர் சிவக்குமார்  உள்ளிட்ட காவல்துறையினர் நேற்றிரவு பள்ளிக்கரணை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக அதிவேகமாகப் பைக்கில் வந்தவர்களைக் காவல்துறையினர் நிறுத்தி விசாரணை நடத்தினர். அவர்கள் அனைவரும் பூந்தமல்லி அருகே மலையம்பாக்கத்தில் ஒரு பண்ணை வீட்டில் நடக்கும் பிறந்த நாள் விழாவுக்குச் செல்வதாக போலீஸார் விசாரணையில் தெரிவித்தனர். யாருக்கு பிறந்தநாள் என்று போலீஸார் கேட்டதற்கு `எங்கள் நண்பர் பினுவின் பிறந்தநாள் விழா’ என்று கூறியுள்ளனர்.

binu
பினு

சூளைமேடு பகுதியைச் சேர்ந்த ’பினு’ தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவர். இதையடுத்து காவல் ஆய்வாளர் சிவக்குமார் அம்பத்தூர் துணை ஆணையாளரிடம் விவரத்தைக் கூறியுள்ளார். பிறந்தநாள் விழா என்பதால் எப்படியும் நிறைய பேர் அங்கு இருப்பார்கள் என்று யூகித்த காவல்துறை, பூந்தமல்லி, மாங்காடு, குன்றத்தூர் உள்ளிட்ட இடங்களில் உள்ள காவல் நிலையங்களுக்குத் தகவல் கொடுத்து காவலர்களை அலர்ட் செய்தனர். இதையடுத்து சினிமா பாணியில் செயல்பட்டுள்ளது காவல்துறை. வாடகைக்கு வாகனங்களை புக் செய்து, 60-க்கும் மேற்பட்ட போலீஸார் மலையம்பாக்கம் பகுதியையே சுற்றி வளைத்தனர். அரிவாளால் கேக் வெட்டி பண்ணை வீட்டில் சக ரவுடிகளுடன் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த பினுவுக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது.

ரவுடி

சுமார் 120-க்கும் மேற்பட்ட ரவுடிகள் ஒரே இடத்தில் கூடி ஆட்டம்பாட்டம் நடத்திக்கொண்டிருந்த வேளையில், போலீஸார் அதிரடியாக வீட்டுக்குள் நுழைந்தனர். போலீஸைக் கண்டதும் 30-க்கும் மேற்பட்ட ரவுடிகள் தலைதெறிக்க தப்பி ஓடினர். 75 ரவுடிகளைப் போலீஸார் துப்பாக்கி முனையில் பிடித்து, காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். அவர்களிடமிருந்து அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களைக் கைப்பற்றினர். அங்கிருந்த கார்கள், இருசக்கர வாகனங்களையும் போலீஸார் பறிமுதல் செய்தனர். தப்பி சென்ற ரவுடிகளை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.