சென்னையில் நேற்றிரவு ஒரே நேரத்தில் 75 ரவுடிகளைக் கூண்டோடு பிடித்து சாதனை புரிந்துள்ளனர் போலீஸார். கடந்த 2000ம் ஆண்டில் சென்னையைக் கலக்கிய பிரபல ரவுடி பினுவின் பிறந்தநாள் கொண்டாட்டத்துக்கு வந்த ரவுடி கும்பலை மூன்று மணி நேரம் போராடி போலீஸார் பிடித்துள்ளனர்.
சென்னைப் பள்ளிக்கரணை இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீஸார் நேற்றிரவு 8 மணியளவில் தாம்பரம் வண்டலூர் பைபாஸ் சாலையில் வாகனச் சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது, அந்தவழியாக அதிவேகத்தில் பைக், காரில் சென்றவர்களைப் போலீஸார் மடக்கிப்பிடித்தனர். அவர்களை விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. ‘ எங்கள் கேங் லீடர் பினு, பிறந்தநாள் அங்கு செல்கிறோம்’ என்று போதையில் ரவுடி ஒருவர் உளற… இன்ஸ்பெக்டர் சிவக்குமாருக்கு உடனடியாக பொறிதட்டியது. சென்னை போலீஸாரால் தேடப்பட்டுவரும் குற்றவாளியான பினுவின் பிறந்தநாளா என்று மனசுக்குள்ளேயே திட்டமிட்டார். அடுத்து, போலீஸிடம் சிக்கி போதையில் உளறிய ரவுடியை அலேக்காகத் தூக்கி போலீஸார் கவனித்தனர். அந்த ரவுடியின் செல்போனிலிருந்தே பினுவுக்கு போனில் பேசிய போலீஸ் டீம், பினு பிறந்தநாள் கொண்டாடும் இடத்தைக் கண்டறிந்தனர். அங்கு 100 க்கும் மேற்பட்ட ரவுடிகள் இருப்பதும் போலீஸாருக்குத் தெரியவந்தது. ஒட்டுமொத்த ரவுடிக் கும்பலைப் பிடிக்கத் திட்டம் வகுத்தனர்.
இதற்கிடையில் இந்தத் தகவலை போலீஸ் உயரதிகாரிகளுக்கு போனில் தெரிவித்தார் இன்ஸ்பெக்டர் சிவக்குமார். உடனே அம்பத்தூர் சரக போலீஸ் டீம் உஷாரானது. போலீஸாரின் வாக்கி டாக்கிகள் அலறின. அலர்ட்… லொகேஷன் பூந்தமல்லி.. மாங்காடு என்று போலீஸார் தகவலை வாக்கிடாக்கியில் பகிர்ந்தனர். அடுத்து, ஒவ்வொருவரும் கால்டாக்ஸியில் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். சரியாக இரவு 9 மணியளவில் போலீஸ் டீம் மாங்காடு அருகே உள்ள மலையம்பாக்கத்தில் உள்ள திறந்தவெளி லாரி செட்டுக்குள் அதிரடியாக நுழைந்தது.
அங்கு, கேக்கை பினு ‘அரிவாளால் வெட்ட… ஒட்டுமொத்த ரவுடிக் கும்பலும் ஹேப்பி பர்த்டே’ என்று மதுமகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டிருந்தனர். அதைச் சிலர் தங்களுடைய செல்போனில் வீடியோவாகவும், படமாகவும் எடுத்துக்கொண்டிருந்தனர். அந்தக் கூட்டத்தின் நடுவில் கேங் லீடர் பினு, கம்பீரமாக நின்றுகொண்டிருந்தார். போலீஸ் டீம் உள்ளே நுழைந்ததும் ரவுடிக் கும்பல் நாலாப்புறமும் சிதறின. அவர்களை போலீஸார் மடக்கிப்பிடித்தனர். லாரி செட் அருகே இருந்த குளத்தில் குதித்த சில ரவுடிகளை போலீஸார் நீச்சலடித்துப் பிடித்தனர். சேறும் சகதியுமான அந்தக் குளத்தில் ரவுடிகள் சிலர் தப்பியோடினர். இருப்பினும் போலீஸ் டீம் 75 பேரை மடக்கிப்பிடிக்க மூன்று மணி நேரம் தேவைப்பட்டது.
ரவுடிகளைப் பிடிக்கும் ஆபரேசன் முடிந்ததும் உயரதிகாரிகளுக்கு வாக்கிடாக்கியில் ஓவர்… ஓவர் என்று தகவல் தெரிவிக்கப்பட்டது. அடுத்து, அனைவரையும் அங்கிருந்து அழைத்து வந்த போலீஸார், ஒவ்வொருவரின் கேஸ் ஹிஸ்டரிகளை ஆராய்ந்தனர். போலீஸார் வலைவிரித்த பினு மற்றும் அவரது கூட்டாளிகளான கனகு, விக்கி என சிலர் மாயமாகியிருந்தனர். அவர்களைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக போலீஸ் உயரதிகாரிகள் தெரிவித்தனர். சம்பவ இடத்திலிருந்து பட்டாக்கத்திகள், அரிவாள், செல்போன்கள், 38 பைக்குகள், 6 கார்கள் ஆகியவற்றை போலீஸார் கைப்பற்றியுள்ளனர்.
பிறந்தநாள் கொண்டாடிய பினுதான் இந்த ரவுடிகூட்டத்தின் தலைவன் என்கின்றனர் போலீஸார். கடந்த 2000 ம் ஆண்டில் பினு, தனி சாம்ராஜ்ஜியத்தை சென்னையில் நடத்திவந்துள்ளார். 2012 ம் ஆண்டு வரை போலீஸாருக்கு சிம்மசொப்பனமாகவே பினு இருந்துள்ளார். இதனால், பினுவுக்கு சென்னை சூளைமேட்டில் கேஸ் கிஸ்டரி தொடங்கப்பட்டது. ஆனால், ஒருகாலத்தில் சூளைமேடு பகுதியைக் காலிசெய்த பினு, மாங்காடு பகுதிக்குக் குடிபெயர்ந்தார். பல வழக்குகளில் கைதாகிய பினு, பல ஆண்டுகள் சிறைவாசத்தை அனுபவித்தார். குறிப்பாக சென்னை சூளைமேடு, வடபழனி, கோடம்பாக்கம், பூந்தமல்லி ஆகிய காவல்நிலையங்களில் கொலை, கொலை முயற்சி. ஆள் கடத்தல், திருட்டு என பினுவின் வழக்குப்பட்டியல் நீள்கிறது.
இதுகுறித்து போலீஸ் வட்டாரங்கள் கூறுகையில், “பிரபல ரவுடி பினு, தன்னுடைய பிறந்தநாளை மாங்காடு அருகே உள்ள மலையம்பாக்கம் கிராமத்தில் கொண்டாடுவதாக எங்களுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன்பேரில் மூன்று உதவி கமிஷனர்கள், எட்டு இன்ஸ்பெக்டர்கள், 16 சப்-இன்ஸ்பெக்டர்கள், 30 போலீஸார் கொண்ட டீமை உடனடியாக அமைத்தோம். போலீஸ் வாகனத்தில் சென்றால் ரவுடிகள் தப்பி ஓடிவிடுவார்கள் என்று கருதி, தனியார் வாகனத்தில் சம்பவ இடத்துக்குச் சென்றோம். ஒரே நேரத்தில் வாகனங்கள் அணிவகுத்துச் சென்றதால் மலையம்பாக்கம் கிராம மக்கள் பதற்றமாகினர்.
அவர்களிடம் விவரத்தை நாங்கள் தெரிவித்ததும் மக்களும் எங்களுக்கு உதவினர். ரவுடிக் கும்பலை நாலாப்புறமும் பொது மக்களுடன் இணைந்து நாங்களும் சுற்றிவளைத்தோம். எங்களைப்பார்த்ததும் ரவுடிகள் தப்பி ஓட முயன்றனர். அவர்களை துப்பாக்கி முனையில் மடக்கினோம். அதையும் மீறி சிலர் தப்பினர். பினு பிறந்தநாள் கொண்டாடிய இடம், லாரி செட். அந்தப் பகுதியைச் சுற்றி முட்புதர்கள் இருந்தன. இருட்டில் ரவுடிகளைப் பிடிக்க முயன்றபோது, முட்கள் போலீஸாரின் ஷுக்களை குத்தித் துளைத்தன. ரத்தம் வடிந்த போதிலும் ரவுடிகளைப் பிடிப்பதிலேயே ஒட்டுமொத்த போலீஸாரின் கவனமும் இருந்தது. இதனால்தான் 75 ரவுடிகளைப் பிடிக்க முடிந்தது. தேடப்படும் குற்றவாளிகளை சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையங்களில் ஒப்படைத்துள்ளோம். இரவு 9 மணியளவில் தொடங்கிய இந்த ஆபரேசன் 12 மணியளவில் முடிந்தது” என்றனர்.
யார் இந்த பினு?
கேரளாவைச் சேர்ந்த பினு, சென்னை சூளைமேட்டில் செட்டிலாகினார். அப்போதுதான் அவரது ரவுடி சாம்ராஜ்ஜியம் தொடங்கியது. அவருடைய நெருங்கிய கூட்டாளிகளான கனகு என்ற கனகராஜ், விக்கி என்ற விக்னேஷ், ராதா ஆகியோர் உள்ளனர். தனக்கென்று தனி ரவுடி சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கிய பினுவை போலீஸார் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லவும் திட்டமிட்டனர். ஆனால், சிலரது தயவால் என்கவுன்டர் தள்ளிப்போனது. பினுவுக்கு மூன்று மனைவிகள் என்ற தகவல் உள்ளது. முதல் மனைவி, பினுவை பிரிந்துச் சென்றுவிட்டதாகவும் இரண்டாவது மனைவி இறந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் மாங்காட்டில் மூன்றாவது மனைவியுடன் பினு வாழ்ந்துவருவதாகச் சொல்கின்றனர்.
நேற்றிரவு பினு, தன்னுடைய பிறந்தநாளை ஜிகர்தண்டா படப்பாணியில் கூட்டாளிகளுடன் கொண்டாட திட்டமிட்டிருந்தார். மலையம்பாக்கம் கிராமத்தில் அதற்கான ஏற்பாடுகள் நடந்தன. பட்டாசு வெடிச்சத்தம் காதைப் பிளக்க மலையம்பாக்கம் கிராமத்தினர் அதிர்ச்சியடைந்தனர். அந்தச் சமயத்தில்தான் போலீஸ் டீம் உள்ளே நுழைந்து ரவுடிக் கும்பலை கூண்டோடு அள்ளிச் சென்றுள்ளது. பினுவின் பிறந்தநாள் கொண்டாட்டத்துக்குக் கல்லூரி மாணவர்களும் வந்துள்ளனர். தற்போது அவர்களும் போலீஸாரிடம் சிக்கியுள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
ரவுடிகளைக் கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள போலீஸார் கோட்டை விட்டதே ரவுடி பினு பிறந்தநாள் கொண்டாடும் அளவுக்குச் சென்றுள்ளார். போலீஸாரால் தேடப்படும் ரவுடி பினு மற்றும் அவரது கூட்டாளிகள் மீதும் கொலை, கொள்ளை வழக்குகள் சென்னை போலீஸ் நிலையங்களில் உள்ளன. ஒரே இடத்தில் ரவுடிகள் கூடும் தகவலைக்கூட முன்கூட்டியே உளவுப் பிரிவு, நுண்ணறிவுப் பிரிவு மற்றும் ரவுடிகளைக் கண்காணிக்கும் போலீஸ் ஆகியோர் சென்னை மாநகர போலீஸாருக்குத் தெரிவிக்கவில்லை. இது போலீஸாரின் மெத்தனப் போக்கை காட்டுவதாகத் தெரிகிறது. ரவுடிகள் ஒன்றுகூடும் தகவல் கிடைத்தும் சென்னை போலீஸ் கமிஷனரின் வாக்கிடாக்கி அலறியுள்ளது. இதில் சில போலீஸ் அதிகாரிகளுக்குக் கடும் டோஸ் விழுந்துள்ளது.