இசைப்பிரியா – பாலச்சந்திரன் தொடர்ச்சியே பிரிகேடியர் அச்சுறுத்தல்! – கலம் மக்ரே

இறுதி யுத்தத்தின் போது ஊடகப் போராளி இசைப்பிரியா மற்றும் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் உள்ளிட்டோரின் விடயத்தில் என்ன நடந்ததோடு, அதுபோன்றே பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவின் அச்சுறுத்தலும் உண்மையானதென சனல் 4 தொலைக்காட்சியின் சிரேஷ்ட ஊடகவியலாளரும் பிரபல ஆவணப்பட தயாரிப்பாளருமான கலம் மக்ரே சாடியுள்ளார்.

‘நடைபெற்றதாகக் கூறப்படும் குற்றம்’ என்றல்லாமல், என்ன நடந்ததோ அதனையே காணொளிகள் வெளிச்சம் போட்டு காட்டியுள்ளதென கலம் மக்ரே மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் சுதந்திரத் தினத்தன்று, அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் பிரித்தானியாவில் புலம்பெயர் தமிழர்கள் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர். இதன்போது கழுத்தை அறுப்பதைப் போன்ற சைகையை, அங்குள்ள இலங்கை தூதுரகத்தில் பாதுகாப்பு ஆலோசகராக பணியாற்றும் பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ காண்பித்தமை சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியுள்ளது.

இதனைத் தொடர்ந்து எழுந்த எதிர்ப்புக்களையடுத்து அவரை பதவி இடைநிறுத்தம் செய்வதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு நேற்று அறிக்கையொன்றின் மூலம் அறிவித்திருந்தது.

எனினும், அவரை மீளவும் பதவியில் அமர்த்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று பணிப்புரை விடுத்துள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவிலேயே கலம் மக்ரே மேற்குறித்தவாறு கூறியுள்ளார்.

இதன்மூலம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாணியில் தற்போதைய ஆட்சியாளர்களும் செயற்படுகின்றமை மறுக்க முடியாத உண்மையென சுட்டிக்காட்டியுள்ள கலம் மக்ரே, இது மிகவும் வெட்கக் கேடான செயலென தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்களே எஞ்சியுள்ள நிலையில் இவ்விடயத்தை மையமாகக் கொண்டு பிரதான கட்சிகள் காய்நகர்த்துவதாக அரசியல் அவதானிகள் கருத்து வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.