தமிழக முன்னாள் முதல்வர், சட்டமன்ற உறுப்பினர், எதிர்க் கட்சித் தலைவர், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் என்று பல இடத்தை தக்க வைத்தவர் முத்துவேலர் கருணாநிதி.
தமிழகத்தில் பெரும் அரசியல் புரட்சி செய்தவர்களில் அண்ணாவிற்கு அடுத்து கருணாநிதி முதன்மை பெறுகின்றார் என்றால் மிகையன்று. கடந்த சில மாதங்களாக அவர் வயது முதுமையின் காரணமாக வீட்டிலேயே ஓய்வெடுத்து வருகின்றார். உடல் நலம் பாதிக்கப்பட்ட அவரால் பேசமுடியாமல் போனது. இந்நிலையில் கருணாநிதிக்கு பேச்சுப் பயிற்சி அளிப்பட்டு படிப்படியாக பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மூத்த அரசியல்வாதியான அவருக்கு 94 வயதாகிறது. முதுமையின் காரணமாகவும், உடல்நலக்குறைவு காரணமாகவும் வீட்டிலேயே ஒய்வெடுத்து வருகிறார். மேலும் அவ்வவ்போது மருத்துவமனைக்கு சென்று சிகிச்சையும் பெற்று வருகிறார். இந்நிலையில் மூச்சு விடுவதில் சிரமத்தை போக்க அவரின் தொண்டை பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கருவியை அகற்ற மருத்துவர்கள் முடிவு செய்துள்ளனர். அதனை அகற்றினால் கருணாநிதி பேசுவதற்கு வாய்ப்பு அமையும் என மருத்துவர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இதனையடுத்து அவர் உடல்நிலை குறித்து சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அடுத்ததாக முழு உடற்பரிசோதனை மேற்கொள்ளவும் , அதன் அறிக்கைக்கு பின்னர் டிரைகோஸ்டோமி கருவியை அகற்ற மருத்துவர்கள் முடிவெடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
கலைஞர் கருணாநிதியின் குரலில் என் அன்பான உடன் பிறப்புக்களே என்ற அந்த வார்த்தையைக் கேட்க லட்சக் கணக்கான தொண்டர்கள் காத்துக் கிடக்கிறார்கள்.
தமிழகத்தின் இன்றைய அரசியல் சூழல் பெரும் இக்கட்டுக்குள் மாட்டிக் கொண்டிருக்கிறது. தலைவன் அற்ற தமிழகம் என்று பலர் விமர்சிக்கிறார்கள்.
இந்நிலையில் திமுக தலைவர் கருணாநிதி உடல் நலம் தேறி மீண்டும் தொண்டர்களையும், கட்சிப் பணியையும் கவனிக்கமாட்டாரா? மீண்டும் அரசியலில் தன்னுடைய பிரவேசத்தை காட்டமாட்டாரா என்று அவரின் தொண்டர்களும், உடன்பிறப்புக்களும் காத்துக் கிடக்கிறார்கள்.
எதிர்வரும் நாட்களில் அவர்களின் ஏக்கங்களுக்கு நல்ல பலன் கிடைக்கும் என்கிறார்கள் திமுக வட்டாரத்தினர்