கடலுக்கு நடுவில் குவிந்துகிடக்கும் பிளாஸ்டிக் குப்பை..!

உலகம் முழுவதும் 500 பில்லியினுக்கும் மேலான மெட்ரிக் டன் பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்தப்படுகிறது. ஒரு நிமிடத்திற்கு உலகமெங்கும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்  பைகள் மட்டும் 1 மில்லியன். மலை போல குவித்து வைக்கப்பட்டிருக்கும் பிளாஸ்டிக் பொருள்களின் மொத்த எடை 12 மில்லியன் மெட்ரிக் டன். பிளாஸ்டிக் மக்காத ஒரு பொருள். அவை மக்கிப் போக சுமார் 500 ஆண்டுகளிலிருந்து 1000 ஆண்டுகள் ஆகும் என்கிறது அறிவியல். கடந்த 40 வருடங்களாகத்தான் பிளாஸ்டிக் பொருள்கள் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அப்படியானால் பயன்படுத்தப்பட்டு தூக்கி வீசப்பட்ட மக்காத பிளாஸ்டிக் குப்பைகள் எங்கே போயிருக்குமென யூகிக்க முடிகிறதா?

அமெரிக்காவில் இருக்கிற தீவு மிட் வே. அங்கு அல்பட்ராஸ் என்கிற கடற்பறவை இனம் வசிக்கிறது. அவை கடலில் நெடுந்தூரம் பறந்து, பறந்து தன் குஞ்சிற்கு உணவை எடுத்து வந்து ஊட்டுகிறது. 90 நாள்களே ஆன, அந்தப் பறவைக் குஞ்சு உணவை உட்கொள்கிறது. சில மணி நேரங்களில் குஞ்சுப் பறவை கரையில் இறந்து விழுகிறது. தன் குழந்தை இறந்ததைக் கண்டு நீண்ட நேரம் அங்கேயே உட்கார்ந்திருந்தது அந்தத் தாய்ப்பறவை. இறந்த பறவையை ஒரு மாணவர் எடுத்து ஆராய்ச்சி செய்கிறார். அதன் வயிற்றில் 276 பிளாஸ்டிக் துண்டுகள் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைகிறார். அத்தனை நாள்களும் பிளாஸ்டிக் துண்டுகளை, உணவு என எண்ணி அந்தத் தாய்ப்பறவை குஞ்சிற்கு கொடுத்து வந்துள்ளது. ஆஸ்திரேலியாவிற்கு அருகில் இருக்கிற தீவு லேண்ட் ஹொவ். அங்கிருந்த பறவை இனத்தின் பெயர் ஷேர்  வாட்டர் கடல் பறவை. இவை கடலில் பல மைல்கல் பயணித்து உணவு தேடுபவை. கடற்கரையில் இறந்து போன ஒரு பறவையை ஜெனிஃபர் லெவெர்ஸ் என்கிற பெண்மணி எடுத்து ஆராய்ச்சி செய்கிறார். அதன் உடலில் சுமார் 185 பிளாஸ்டிக் பொருள்கள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியானார்.

கடல் பிளாஸ்டிக்

பயன்படுத்தப்பட்டுத் தூக்கி எறியப்பட்ட குப்பையில் 79 சதவிகிதக் குப்பைகள் கடலில் கிடக்கின்றன என்கிற உண்மை உலகிற்குத் தெரியும். ஆனால் அவை ஒன்றிணைந்து கடலின் ஐந்து பக்கங்களில் மிகப் பெரிய குப்பைக் கிடங்கை உருவாக்கி வைத்திருக்கின்றன என்பதுதான் தெரியாது. கடலில் கலக்கும் பிளாஸ்டிக்  குப்பைகள் தொடர்ச்சியாகக் கடலில் மிதப்பதால், காற்று மற்றும் அலைகளின் செயல்களால் கலக்கப்பட்டு அவை கடலின் நீரோட்டத்திற்கு ஏற்ப பயணிக்கின்றன. ஆழ்கடலின் கடல் சங்கமிக்கிற இடத்தில் எல்லாக் குப்பைகளும் ஒரே இடத்தை மையமாக வைத்துச் சுழல ஆரம்பிக்கின்றன. அவற்றை விட்டு பிளாஸ்டிக் பொருள்கள் கடந்துபோக முடியாத அளவிற்கு நீரோட்டம் இருக்கிறது. அப்படி வந்து சேருகிற மொத்தக் குப்பைகளும் ஒரே இடத்தில் மலைபோல தேங்க ஆரம்பிக்கிறது. இப்படித்தான் நடுக்கடலில் குப்பைக் கிடங்கு உருவாக்கியிருக்கிறது. அப்படி மொத்தம் ஐந்து ஆழ்கடல் குப்பைக் கிடங்குகள் இருக்கின்றன. அவற்றிற்கு கார்பேஜ் பேட்ச் எனப் பெயரிட்டிருக்கிறார்கள்.

உலகில் மொத்தம் வடக்கு பசிபிக் கடல்,  தெற்கு பசிபிக் கடல், தெற்கு அட்லான்டிக் கடல், வடக்கு அட்லான்டிக் கடல், இந்தியப் பெருங்கடல் ஆகிய ஐந்து கார்பேஜ் பேட்ச் கிடங்குகள் இருக்கின்றன. இவை மேலோட்டமாகத் தெரிவதில்லை. ஆனால் கடலின் மையப் பகுதியில் மையம் கொண்டிருக்கின்றன. பிளாஸ்டிக் பைகள் மட்டுமே கடலில் இருக்கிற உயிரினங்களுக்கு மிக முக்கிய அச்சுறுத்தலாக இருக்கிறது. கடல் வாழ் உயிரினங்களில் உணவுச் சங்கிலி முறை மிக முக்கியமானது. ஒரு சிறிய மீன் ஒரு பிளாஸ்டிக் கவரை விழுங்கிவிட்டால், அந்த மீனை உட்கொள்ளும் இன்னொரு பெரிய மீனுக்கும் அந்த பிளாஸ்டிக் கடத்தப்படுகிறது. இப்படிப் பல உயிரினங்களுக்கு அந்த பிளாஸ்டிக் பயணப்படுகிறது. சில வகை மீன்களில் அந்த பிளாஸ்டிக் செரிக்கப்படுகிறது. அப்போது பிளாஸ்டிக் ரசாயனப் பொருளாக உயிரினத்தின் உடலில் கலந்து விடுகிறது. ஒவ்வொரு கடல் உயிரினமாகப் போகிற பிளாஸ்டிக், உணவுச் சங்கிலி முறையில் கடைசியாக மனிதனிடமே திரும்பிவருவதுதான் மிகப் பெரிய ட்விஸ்ட்.

கரிபியன் கடல்

15 டன் எடை கொண்ட ப்ரைட்  வகை திமிங்கலத்தை, சாதாரண பிளாஸ்டிக் கொலை செய்ததுதான் பிளாஸ்டிக் அபாயம் குறித்து உலகத்திற்குச் சொன்ன மிகப் பெரிய துயரம். ஆகஸ்ட் 2000 – ம் ஆண்டில், எட்டு மீட்டர் பிரைய்டின் திமிங்கிலம் கெய்ன்ஸ் கடற்கரையில் ஒதுங்கியது. உயிருக்குப் போராடிய அந்தத் திமிங்கலத்தை எவ்வளவோ போராடியும் காப்பாற்றமுடியவில்லை. திமிங்கலத்தை பிரேதப் பரிசோதனை செய்ததில் அதன் வயிற்றில் 6 மீ 2 பிளாஸ்டிக் பைகள் சிக்கியிருந்தன. பல பிளாஸ்டிக் பொருள்களும் அதன் வயிற்றில் இருந்தன. ப்ரைடேயின் திமிங்கலங்கள் ஒரு முறை உணவிற்காக வாயைத் திறந்து மூடினால் 75 ஆயிரம் லிட்டர் தண்ணீர் அதன் வாயிற்குள் செல்லும். அந்த அளவிற்கு அதன் முகப்பகுதி அகலமாக இருக்கும். ஒரு வேலை அந்தப் பிரைய்டின் திமிங்கிலம் கடலில் இறந்திருந்தால், அதன் உடலில் இருந்த பிளாஸ்டிக் இன்னும் பல உயிர்களைக் கொல்ல காரணமாக இருந்திருக்கும். பல ஆண்டுகளாகக் கடலில் கிடக்கிற பிளாஸ்டிக் பல துண்டுகளாக உடைகின்றன. பல மைக்ரோ துண்டுகளாக உடைந்து கடலில் கிடக்கிற பிளாஸ்டிக்கை மீன்கள் உணவாக எடுத்துக்கொள்கின்றன. அந்த மீன்களைக் கடல் வாழ் பறவைகள் உணவாக உண்கின்றன. முதல் பத்தியில் இறந்து போன இரண்டு பறவைகளுக்கும் இதுவே காரணம்.

கார்பேஜ் பிளாஸ்டிக் இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு இருக்கும் எனச் சொல்ல முடியாது, இன்னும் எவ்வளவு இனங்களைக் கொல்லும் எனச் சொல்லிவிட முடியாது. ஆனால் பிளாஸ்டிக் இருக்கிற வரை ஒவ்வோர் இனமாகக் கொல்லும். மனிதன் தனக்கு எதிராக இருக்கும் எனத் தெரிந்தும் ஒன்றை உருவாக்குகிறான், பயன்படுத்துகிறான், தூக்கி வீசுகிறான். எல்லா வினைகளுக்கும் ஓர் எதிர் வினை உண்டு, கடல், பறவை, மீன்கள் என அழிவது பிளாஸ்டிக் மனிதனுக்குச் செய்கிற எதிர்வினை…….