தாயின் உடலை அடக்கம்செய்யக்கூட பணமில்லாமல், சிறுவர்கள் இரண்டு பேர் பிச்சை எடுத்த சம்பவம் திண்டுக்கல் மாவட்டத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகேயுள்ள சித்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயா. ஏழு ஆண்டுகளுக்கு முன்பே கணவர் இறந்துவிட்ட நிலையில், மூன்று குழந்தைகளை வளர்க்க மிகவும் சிரமப்பட்டுள்ளார். சோதனை மேல் சோதனையாக அவருக்கு மார்பக புற்றுநோய் ஏற்பட்டிருக்கிறது. இதனால், அவரால் வேலைக்குச் செல்ல முடியவில்லை. குடும்பத்தைக் காப்பாற்றும் பொறுப்பை ஏற்றுக்கொண்டான் மூத்த மகன் மோகன்ராஜ். 15 வயதான இந்தச் சிறுவன், பேக்கரியில் வேலைசெய்து, கொண்டுவரும் சம்பளத்தில் குடும்பம் ஓடிக்கொண்டிருந்தது. இந்நிலையில், புற்றுநோயின் வீரியம் அதிகமானதால், திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனையில் சரோஜாவை சிகிச்சைக்காகச் சேர்த்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி நேற்று மாலை சரோஜா இறந்துவிட்டார்.
செய்வதறியாது திகைத்து நின்ற சிறுவர்கள், தாயின் உடலை ஊருக்கு எடுத்துச்செல்லக்கூட வழியில்லாமல் அழுதுகொண்டிருந்தனர். உறவினர்கள் யாரும் இல்லாத நிலையில், தாயின் உடலைக் கொண்டுசெல்வதற்காக, மருத்துவமனையில் இருந்தவர்களிடம் உதவி கேட்டிருக்கிறார்கள். அங்கு சிகிச்சைபெற்றுவந்த நோயாளிகளின் உறவினர்களிடம் கையேந்தி பணம் கேட்டனர். தாயின் உடலை எடுத்துச் செல்ல சிறுவர்கள் பிச்சை எடுத்த சம்பவம், காண்போரைக் கலங்கவைத்தது. அங்கிருந்தவர்கள் பணம் கொடுத்து உதவிசெய்தனர்.