‘’இலவச வைஃபை  கிடைக்கும் இடத்தில் எதை வேண்டுமானாலும் பாருங்கள். நெட் பேங்க்கிங் மட்டும் செய்யாதீர்கள்’’

‘’இலவச வைஃபை  கிடைக்கும் இடத்தில் எதை வேண்டுமானாலும் பாருங்கள். நெட் பேங்க்கிங் மட்டும் செய்யாதீர்கள்’’ என்று விழிப்பு உணர்வுக் கருத்தரங்கில் வங்கி அதிகாரிகள் அறிவுறுத்தினார்கள்.

மத்திய அரசின் பல்வேறு  நடவடிக்கையால்  டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட் பேங்க்கிங், மொபைல் பேங்க்கிங்  பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. அதே அளவுக்கு ஆன்லைன் திருட்டும் அதிகரித்துவருகிறது. டெக்னாலஜி வளரவளர சீட்டிங் செய்பவர்களும் அதற்குத் தகுந்தாற்போல ஏமாற்றிவருகிறார்கள். ஆன்லைன் திருட்டில் படித்தவர், படிக்காதவர், கிராமம், நகரத்தினர் அனைவரும் ஏமாறுகிறார்கள். இதைத் தடுக்க முடியாதா, இழந்த பணத்தை பெற முடியாதா என்று கேட்கலாம். முடியும். வங்கி நிர்வாகம் சொல்வதைக் கவனமாகக் கேட்டால், பாதுகாத்துக்கொள்ளலாம் என்கிறார்கள்.

இலவச

ஆன்லைன் கொள்ளையர்களிடமிருந்து காத்துக்கொள்ள, வாடிக்கையாளர்களுக்கு விழிப்பு உணர்வை உண்டாக்க எச்.டி.எப்.சி. வங்கி, மதுரை மண்டலத்தில், அனைத்து கிளைகளிலும் விழிப்பு உணர்வு நிகழ்ச்சியைத் தொடங்கியுள்ளது. ஒருவாரம் நடக்கும் இந்த நிகழ்ச்சி பற்றி நம்மிடம் பேசிய வங்கியின் அதிகாரிகள் தேவராஜ்தாஸ் குப்தா, லியோனல் பெர்னாண்டஸ், வீரப்பன் ஆகியோர், ‘சமீபகாலமாக ஆன்லைன் திருட்டு தொடர்ந்துவருகிறது. ஆரம்பத்தில், ஏடிஎம்-களில் திருட்டுத்தனம் செய்தார்கள். தற்போது, நெட்பேங்க்கிங் பலரும் பயன்டுத்துவதால், அதிலும் திருடர்கள் அதிகமாகிவிட்டார்கள். ஜார்க்கண்டில் இதை ஒரு கும்பல் தொழில்போல செய்துவருகிறது. இவர்களைக் கண்டுபிடித்து நடவடிக்கை எடுப்பது பெரிய புராசஸாக உள்ளது.

அதற்கு முன்பு நாம் விழிப்புடன் இருந்தால், இந்தத் திருட்டை முறியடிக்கலாம். அலைபேசியில் வங்கியிலிருந்து பேசுகிறோம் என்று யார் பேசினாலும் உங்களுடைய கஸ்டமர் ஐடி, பாஸ்வேர்ட், சிவிவி, பின் நம்பர்களை வழங்காதீர்கள், ஆன்லைனில் பொருள்கள் வாங்குபோது கார்டு விவரங்களை சேவ் பண்ணாதீர்கள். எவ்வளவு நெருங்கிப் பழகினாலும், உங்கள் கார்டு விவரங்கள், நெட் பேங்க்கிங் விவரங்களை யாரிடமும் பகிர்ந்துகொள்ளாதீர்கள். முக்கியமாக, இலவச வைஃபை கிடைக்கும் இடத்தில், நெட் பேங்க்கிங் பயன்படுத்தாதீர்கள். உங்கள் கணக்கிலிருந்து உங்களுக்குத் தெரியாமல் பணம் எடுக்கப்பட்டதாக மெசேஜ் வந்தால், உடனே போன் மூலமோ, வங்கிக்கிளைக்கோ தகவல் தெரிவித்தால், உங்கள் பணத்தைக் காத்துக்கொள்ளலாம்’ என்று பல்வேறு விவரங்களைத் தெரிவித்தார்கள்.