நாடு தழுவிய ரீதியில் எதிர்வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகளை அன்றைய தினம் இரவு ஒன்பது மணிக்கு வெளியிடுவதற்கு எதிர்பார்த்துள்ளதாக சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர் பேராசிரியர் இரத்தினஜீவன் எச்.ஹூல் தெரிவித்தார்.உள்ளூராட்சிமன்றத் தேர்தல் தொடர்பில் சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர் இரத்தினஜீவன் எச்.ஹூலிடம் வினவியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.அவர் மேலும் குறிப்பிடும் போது; உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான பணிகள் இறுதிக் கட்டத்தை அண்மித்துள்ளன. எஞ்சியுள்ள பணிகளையும் இன்னும் சில தினங்களில் நிறைவுசெய்வதற்கு எதிர்பார்த்துள்ளோம். வாக்காளர்களுக்கான வாக்காளர் அட்டைகளும் அனுப்பப்பட்டுள்ளன. எனினும், சிலருக்கு தாம் வசிக்கும் தொகுதிகளுக்குரிய வாக்காளர் அட்டையல்லாது ஏனைய தொகுதிகளுக்குரிய வாக்காளர் அட்டைகள் அனுப்பப்பட்டுள்ளன.
கிராம சேவகர் மட்டத்தில் தொகுதிகளுக்குரிய வாக்காளர் பிரிப்பில் ஏற்பட்ட தவறினாலேயே குறித்த நிலை ஏற்பட்டுள்ளது. எனவே அவ்வாறு தாம் வசிக்கும் தொகுதிகளுக்குரிய வாக்காளர் அட்டையல்லாது வேறு தொகுதிகளின் அட்டைகள் கிடைத்திருப்பின் அதனை சம்பந்தப்பட்டவர்களுடன் தொடர்புகொண்டு மாற்றிக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எனவே, எதிர்வரும் சனிக்கிழமை காலை ஏழு மணிக்கு உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு ஆரம்பமாவதுடன் அன்று மாலை நான்கு மணிக்கு நிறைவடையவுள்ளது. இதேவேளை நான்கு முப்பது மணிக்கு வாக்கெண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. இம்முறை தொகுதி மட்டத்தில் வாக்கெண்ணும் பணி நடைபெறவுள்ளதனால் இரவு 8.30 மணிக்குள் வாக்கெண்ணும் நடவடிக்கைகளைப் பூர்த்தி செய்வதற்குத் திட்டமிட்டுள்ளோம். ஆகவே, அன்றிரவு ஒன்பது மணியளவில் தேர்தல் முடிவுகளை வெளியிடுவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார் .