சமகால அரசாங்கத்தின் செயற்பாடும், அமைச்சுக்களின் நிலைப்பாடுகள் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கண்ணாடி வீடுகளில் இருந்து கல் ஏறிய வேண்டாம் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,
கடந்த அரசாங்கத்தின் பொருளாதார முகாமைத்துவம் போன்று இன்றைய பொருளாதார முகாமைத்துவத்திலும் பலவீனங்கள் மற்றும் தவறுகள் உள்ளது. குறித்த இரண்டு தரப்பினருக்கும் மன்னிப்பு வழங்க முடியாத பல காரணங்கள் உள்ளது.
ஏற்படுத்தி கொள்ளப்பட்ட இணக்கப்பட்டிற்கமைய கடந்த மூன்று வருடங்களுக்கும் பொருளாதார முகாமைத்துவத்தை நாங்கள் ஐக்கிய தேசிய கட்சிக்கே வழங்கியிருந்தோம்.
கடந்த அரசாங்கத்தின் பொருளாதார முகாமைத்துவத்தின் திறமை எந்தளவில் இருந்ததென்றால், 10 ட்ரில்லியனுக்கும் அதிகமான சொத்துக்கள் இருப்பதாக காட்டிய நிதி அமைச்சில், ஒரு ட்ரில்லியன் மாத்திரமே காணப்பட்டுள்ளது.
ஒரு ட்ரில்லியன் என்பது 10 கோடி. அப்படி என்றால் ஏனைய 9 ட்ரில்லியன் தொடர்பில் ஆவணங்களில் தகவல் இல்லை. இவ்வாறே கடந்த அரசாங்கத்தினர் பொருளாதார முகாமைத்துவத்தை மேற்கொண்டனர். அப்படி என்றால் ஆடை அணிந்து கொண்டு அந்த தரப்பினர் பொருளாதார முகாமைத்துவம் தொடர்பில் பேச முடியாது.
சில அமைச்சுக்கள் தற்போதும் ஒழுங்கான முறையில் செயற்படுவதில்லை. சில விடயங்களை நான் கடுமையாக எதிர்க்கின்றேன். ஒற்றுமையை காத்துக் கொள்ள வேண்டும் என்பதனாலும், அரசாங்கத்தை உடைக்க முடியாதென்பதனாலும் நான் மிகவும் பொறுமையாக இருக்கின்றேன்.
நான் சில மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும். அந்த மாற்றங்களை விரும்பவில்லை என்றால் உண்மைகளை நாட்டிற்கு கூற நேரிடும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேலும் தெரிவித்துள்ளார்.