ஹார்மோன் மாத்திரைகளைக் கொடுத்து 5 ஆண்டுகளாகச் சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்து வந்த பிரான்ஸ் நாட்டு முதியவர் தப்பிச் செல்ல முயன்றபோது அதிரடியாகக் கைது செய்துள்ளது புதுச்சேரி போலீஸ்.
புதுச்சேரியில் துணை நிலை ஆளுநர் கிரண்பேடிக்கும், குழந்தைகள் நலப் பாதுகாப்பு அமைப்புக்கும் ஒரு தனியார் தொண்டு நிறுவனம் சில தினங்களுக்கு முன்பு புகார் ஒன்றை அனுப்பியது. அதில், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த தியாரி கக்னர் என்ற 60 வயது முதியவர் ஒருவர் கிருஷ்ணா நகரில் வசித்து வருகிறார். இவர் கடந்த சில ஆண்டுகளாக சட்ட ரீதியான எந்த ஆவணங்களும் இல்லாமல் ஒடிசாவைச் சேர்ந்த சிறுமி ஒருவரை தனது இல்லத்தில் வைத்து வளர்த்து வருகிறார். இரவிலும் தன்னுடனேயே படுக்க வைத்துக் கொண்டு பாலியல் ரீதியில் துன்புறுத்தி வருகிறார். அவரது தாயும் அதே வீட்டில் இருந்தாலும் மொழி பிரச்னையாலும், பயத்தாலும், யாரிடம் சொல்வது என்ற விவரம் புரியாததால் தவித்துக் கொண்டிருக்கிறார். 12 வயதே கொண்ட அந்த சிறுமிக்கு தொடர்ச்சியாக ஹார்மோன் மாத்திரைகளைக் கொடுத்து வருகிறார் அந்த முதியவர். அதன் மூலம் அந்த சிறுமியை 20 வயதைக் கொண்ட பெரிய பெண்ணைப் போல மாற்றியிருக்கிறார். எனவே இது தொடர்பாக உடனே விசாரணை நடத்தி அந்த சிறுமியை மீட்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
அதையடுத்து உடனடியாகக் களமிறங்கிய குழந்தைகள் நல பாதுகாப்பு குழுவின் தலைவி வித்யா ராம்குமார் அந்த வீட்டில் அதிரடி சோதனையை மேற்கொண்டதோடு சம்மந்தப்பட்ட சிறுமியிடமும் விசாரணை நடத்தியிருக்கிறார். அப்போது அந்தச் சிறுமி நடந்தவைகள் அனைத்தையும் தெரிவித்திருக்கிறாள். அப்போது அந்தச் சிறுமியை தான் பாலியல் வன்கொடுமை செய்யவில்லை என்றும், அவளைத் தான் தத்தெடுத்திருப்பதாகவும் கூறியிருக்கிறார் அந்த முதியவர். மேலும் கண்ணங்கள் உள்ளிட்ட பகுதிகளில் முத்தமிடுவது பிரான்ஸ் கலாசாரத்தின்படி தவறு கிடையாது என்றும் கூறியிருக்கிறார். ஆனால், தன் பெண்ணை இவர் தத்து எடுக்கவில்லை என்றும் மருத்து உதவிகளை செய்வதாகச் சொல்லியே தங்களைத் தங்க வைத்திருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார் சிறுமியின் தாய். அதோடு தனது மகளைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகவும் குழந்தைகள் நல அமைப்பினரிடம் தெரிவித்திருக்கிறார்.
அப்போது நடத்தப்பட்ட முதல் கட்ட விசரணையில் அந்தப் புகார் உண்மை எனத் தெரிய வந்தது. அதையடுத்து குழந்தைகள் நல அமைப்பினர் போலீஸுக்கு அளித்த தகவலின் பேரில் அந்த முதியவர் போக்சோ சட்டத்தின்படி அதிரடியாக கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக ஏற்கெனவே போலீஸில் புகார் அளித்திருக்கிறது அந்தத் தொண்டு நிறுவனம். ஆனால் வழக்கம்போல புகாரைப் பெறாமல் அமைதி காத்திருக்கிறது போலீஸ். இந்த விவகாரம் வெளியே ஏற்கெனவே கசிந்தது தெரிந்துவிட்டதால் பிரான்ஸ் நாட்டுக்கு தப்பிச் செல்ல தயாராகியிருந்தார் அந்த முதியவர். அதற்குள் குழந்தைகள் நல பாதுகாப்புக் குழுவின் அதிரடியால் தற்போது கைது செய்யப்பட்டிருக்கிறார்.