`சனியன் சகட’ என்ற ரவுடி கேரக்டரில் கோட்டா சீனிவாசராவ் `திருப்பாச்சி’ படத்தில் நடித்திருப்பார். அந்தப் படத்தின் க்ளைமாக்ஸ் காட்சிகள் சென்னை சிட்டியில் இருக்கிற ரவுடிகள் எல்லாம், சனியன் சகட’வுக்கு பாதுகாப்பாகக் கூடியிருப்பார்கள். அவர்களை ஒரே இடத்தில் போலீஸ் அமுங்கிப் பிடிக்கும். அதே போல ஒரு காட்சிதான் சென்னையில் அரங்கேறியிருக்கிறது.
போலீஸாரால் தேடப்பட்டு வந்த பிரபல குற்றவாளியான பினு-வின் பிறந்தநாள் கொண்டாட்டத்தைச் சுமார் 100-க்கும் மேற்பட்ட ரவுடிகள் 6.2.2018 அன்று இரவு கொண்டாடினர். தகவலறிந்த போலீஸார் கொண்டாட்ட இடத்துக்கு விரைந்து சென்றனர். போலீஸாரைக் கண்டதும் பல ரவுடிகள் ஓட்டம் பிடித்தனர். மீதமிருந்த 73 பேரை போலீஸார் துப்பாக்கி முனையில் கைது செய்தனர். சினிமா காட்சிகளையே விஞ்சும் அளவுக்கு இந்தப் பிறந்தநாள் விழா இடத்தினுள் போலீஸார்கள் நுழைந்து ரவுடிகளைக் கைது செய்யும் வீடியோ வெளியாகியுள்ளது. இந்த வீடியோவில் ரவுடிகள் மற்றும் போலீஸார்களுக்கிடையேயான விசாரணை, பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை லாரியில் ஏற்றும் காட்சி, கொண்டாட்டத்தின்போது தூவப்பட்ட மலர்கள் மற்றும் மாலைகள் போன்ற காட்சிகள் பதிவாகியுள்ளன.