சாதனைத் தமிழரைச் சந்தித்த கமல்! – கிராமங்களுக்கான மின்சார ஆற்றல் குறித்து ஆலோசனை’’

தனது அரசியல் பிரவேசத்தை அறிவித்த பிறகு, முதன்முறையாக அமெரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார் நடிகர் கமல்ஹாசன். அங்கிருக்கும் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் வரும் பிப்ரவரி 10-ம் தேதி சிறப்புரையாற்ற இருக்கிறார். உலகத் தமிழகர்களால் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைப்பதற்கான முன்னெடுப்பு நடந்து வரும்வேளையில் கமல், அங்கு சிறப்புரை வழங்க சென்றிருப்பது சிறப்பு. இந்தச் சுற்றுப் பயணத்தின்போது பல்வேறு துறைகளில் வளர்ந்துள்ள அமெரிக்க வாழ் தமிழர்களையும் சந்திக்க கமல்ஹாசன் திட்டமிட்டுள்ளார்.

கமல் ஹாசன்

அதன்படி, கலிஃபோர்னியா மாகாணத்தின் சன்னிவேலிலுள்ள ‘ப்ளூம் எனெர்ஜி’ நிறுவனத் தலைவர் டாக்டர். கே.ஆர்.ஶ்ரீதரை அவர் நேற்று (7.2.2018) சந்தித்துப் பேசினார். ‘ப்ளூம் பாக்ஸ்’ என்னும் தன்னாற்றல் தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்த தமிழரான ஸ்ரீதரிடம், தமிழகத்தின் எதிர்கால மின்ஆற்றல் தேவைகள் மற்றும் அதற்கு இந்தத் தொழில்நுட்பத்தை எப்படிப் பயன்படுத்தலாம் என்று கமல்ஹாசன் கலந்தாலோசித்துள்ளார்.

இதுகுறித்து கே.ஆர் ஶ்ரீதர் கூறுகையில், “உலக நாடுகளில் மின்சாரம் உருவாக்கும் எங்கள் குறிக்கோளை கமலிடம் பகிர்ந்துகொண்டதில் மகிழ்ச்சியடைகிறோம். இந்தத் திட்டம் மூலம் தமிழகத்தின் கடைக்கோடி கிராமங்களுக்கும் மின்சாரத்தைக் கொண்டு சேர்ப்பதற்கு ஆலோசிக்குமாறு கமல் பரிந்துரைத்தார்” என்றார்.