தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் தலைமைக்கு எதிராக கருத்துக்களை வெளிப்படுத்திவரும் முதலமைச்சர் முதலமைச்சர் விக்னேஸ்வரன், தாம் அடிக்கடி குறிப்பிடும் மாற்றுத் தலைமை எது என்பதுபற்றியோ, அவர்கள் கொள்கை, இலக்கு வழிமுறை என்ன என்பதுபற்றியோ? அவ்விலக்கை அடைந்திட வழிமுறையென்ன என்பதுபற்றியோ தவறி வருகிறார். இந் நிலைப்பாட்டினால் தமிழ் மக்களை ஓர் அனாதரவான அவலநிலைக்குத் தள்ளுகின்றார் என தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது
உள்ளூர் ஆட்சி மன்றங்களின் தேர்தல் எதிர்வரும் பத்தாம் திகதி (10-02-2018) வாக்களிப்பு இடம்பெறவுள்ளது. இச் சந்தர்ப்பத்தில் பரப்புரைகள் நிறைவடையும் தறுவாயில் வடக்கு முதலமைச்சர் பத்திரிகைகளுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில் “பலவீனமான தலைமைகளினால் தமிழர் உரிமைகளுக்கு ஆபத்து” எனும் தலைப்பில் வெளிவந்திருக்கிறது.
தமிழ் மக்கள் தொடர்ச்சியாக தேர்தல்கள் வருகின்ற ஒவ்வொரு சந்தர்ப்பத்தில் வருகின்ற ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் மிகத் தெளிவாக, திட சங்கற்பமாக தங்கள் ஒற்றுமையையும், பலத்தையும் நிரூபித்து வந்துள்ளனர்.
2015 பொதுத் தேர்தலிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் முன்வைக்கப்பட்டிருந்த தேர்தல் அறிக்கைக்கு தமிழ் மக்கள் மிகப் பெருமளவில் ஒற்றுமையாக வாக்களித்து தங்களை தாங்களே ஆளுவதற்கான அரசியல் தீர்வுக்கும், போரினால் அழிந்துபோன எம் தமிழ்த் தேசத்தையும், சிதைந்து போன தமிழ் மக்களையும் மீளக் கட்டியெழுப்புவதற்கும் அதற்குப் பொருத்தமான பிரதிநிதிகளையும், தலைமையையும் தெரிவு செய்துள்ளனர்.
அத் தேர்தலில் முன்வைத்த கொள்கை, கோட்பாடு அதன் அடிப்படையில் தமிழ் மக்கள் பிரதேசமும் மக்களும் விடுதலையும், விடிவும் பெற தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு, தலைமைக்கு ஆணை தந்திருக்கிறார்கள். 2015 பொதுத் தேர்தலின் போதும் இதே வடக்கு முதலமைச்சர் ” வீட்டுக்குள் முடங்கிக் கிடக்காமல் மக்கள் வெளியே வந்து வாக்களிக்க வேண்டும்” என அறிக்கை வெளியிட்டார். அதன் அர்த்தம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் சின்னமான “வீடு” அதற்குள்ளிருந்து மக்களை வெளியேறி வேறு கட்சிச் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு சொல்கிறார். இது உண்ட வீட்டிற்கு இரண்டகம் ” செய்கிறார் என்றே மக்கள் அவ நம்பிக்கையை வெளியிட்டனர். மக்கள் தெளிவாக பலமாகப் அத் தேர்தலில் வாக்களித்தனர்.
இப்பொழுதும் அதே போன்று ஒற்றுமையாக, பலமாக இருக்கும் மக்களையும், தலைமையையும் பிளவுபடுத்தி, குழப்பி, பலவீனப்படுத்தி தமிழ்த் தலைமையை பலவீனப்படுத்துவது அல்லது தோற்கடிப்பது என்ற நோக்கிலேயே வடக்கு முதலமைச்சர் திட்டமிட்டுச் செயல்படுகிறார் என்றே மக்கள் எண்ணுகின்றனர்.
நேற்று வரை அமைதியாக இருப்பதைப் போல பாசாங்கு பண்ணி விட்டு, அறிக்கையின் ஆரம்பத்தில் அரசியல் கருத்துக்களை தேர்தல் காலத்தில் சொல்லவில்லை என்று சொல்லி விட்டு, முற்று முழுதாக கபடத்தனமாக, எதிர்வரும் தேர்தலையே இலக்கு வைத்து விடுத்த அறிக்கையை தமிழ் மக்கள் முற்றாக நிராகரிக்க வேண்டும்.
வடக்கு முதலமைச்சர் இடைக்கால அறிக்கையை நிராகரிக்க வேண்டும் என்கிறார். அதே வேளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத் தோற்கடித்து தலைமையை மாற்ற வேண்டும் என்போருக்கும் பலம் சேர்க்கின்றார். முதலமைச்சர் மாற்றுத் தலைமை எது, அவர்கள் கொள்கை, இலக்கு வழிமுறை என்ன?அவ்விலக்கை அடைந்திட வழிமுறையென்ன என்பதை அறிவிக்கத் தவறி வருகிறார். இந் நிலைப்பாட்டினால் தமிழ் மக்களை ஓர் அனாதரவான அவலநிலைக்குத் தள்ளுகின்றார்.
தெற்கில் முதலமைச்சர்கள், “புதிய அரசியலமைப்பு வரவேண்டும், (அ) சட்டம் ஒழுங்கு (ஆ) காணி அதிகாரம் (இ) நிதி அதிகாரங்கள் மாகாணங்களுக்கு முழுமையாகப் பகிரப்பட வேண்டும், பகிரப்பட்ட அதிகாரங்களை மத்தி மீளப் பெறமுடியாத பாதுகாப்பு அரசியலமைப்பில் இடம்பெறவேண்டுமென பாராளுமன்ற வழிகாட்டும் குழு (steering committee) முன் வாதாடி ஏற்க வைத்துள்ளனர். ஆளுனரே வேண்டாம் என்றார்கள்.
தமிழ் மக்கள் பேரவையில் முதலமைச்சரின் வழிகாட்டலில் தயாரிக்கப்பட்ட தீர்வுத் திட்டத்தில் அரசின் தன்மை (Nature of State) ஒன்றித்த நாட்டுக்குள் அரசியல் தீர்வு என்றால் இடைக்கால அறிக்கையில் “ஒருமித்த நாட்டுக்குள்” என்று வருவது மேலானது.
இடைக்கால அறிக்கை என்பது இதுவரை பாராளுமன்றத்தில் பல கட்சிகளின் தலைவர்களால் இடம்பெறும் வழிகாட்டல் குழுவில் ஏற்கப்பட்டதும், இணக்கம் காணப்பட்டதும் இணக்கம் காணப்பட வேண்டியதுமானதே. அது ஓர் இறுதித் தீர்வுத் திட்டமல்ல என்றும், ஒற்றையாட்சியமைப்பில் “unitary state” என்றால் அது இனப்பிரச்சினைக்குத் தீர்வாக அமையாது அதனை ஒருபொழுதும் ஏற்கமாட்டோம் என்று த.தே.கூட்டமைப்புத் தலைமை தெளிவாகவும் உறுதிபடவும் அறிவித்திருப்பதை ஏன் முதலமைச்சர் மறுதலித்து நிற்க வேண்டும்?
“தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வொன்றை உருவாக்குவது என்பது 2002 ஒஸ்லோ உடன்பாட்டின் படி சமஷ்டிக் கட்டமைப்பு (Federal Structure) ஒன்றினுள்ளே தான் நாம் அரசியல் தீர்வை உருவாக்குவோம் என்று அறுதியிட்டுக் கூறுகின்றோம். அதை நிறைவேற்றுவதற்கு மீண்டும் த.தே.கூட்டமைப்பின் மீது நம்பிக்கை வைத்து வீட்டுச் சின்னத்துக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.