இலங்கையின் புகழ்பெற்ற மூத்த ஊடகவியலாளர் செல்வி. கமலா தம்பிராஜா கனடாவில் காலமானார்.
கனடா – ரொறன்ரோ வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வந்த நிலையில் தனது 73வது வயதில் நேற்று அவர் காலமானார்.
பேராதனை பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற கமலா தம்பிராஜா வீரகேசரி ஆசிரியபீடம், தகவல் திணைக்களம், ஈரானிய தூதரகம், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம், இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம் ஆகியவற்றில் பணியாற்றியுள்ளார்.
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன தமிழ்ச் சேவையில் 1975ம் ஆண்டு முதல் அவர் தயாரித்து வழங்கிய மகளிர் நிகழ்ச்சியும், 1982 ம் ஆண்டு முதல் ரூபவாஹினியில் அவர் தொகுத்து வழங்கிய ‘மலரும் அரும்புகள்’ சிறுவர் நிகழ்ச்சியும் பிரபலம் பெற்று விளங்கின.
இவர், பொன்மணி என்ற தமிழ் திரைப்படத்திலும் நடித்துள்ளார். அச்சு ஊடகத்திலிருந்து இலத்திரனியல் ஊடகங்களுக்கு செய்திவாசிக்க வந்த முதலாவது பெண்மணி இவராவர்.
1980 ஆண்டின் பிற்பகுதியில் கனடாவிற்கு குடிபெயர்ந்த அவர், 1991ஆம் ஆண்டு ரொறன்ரோவில் ஆரம்பிக்கப்பட்ட தேமதுரம் வானொலியில் பிரதான அறிவிப்பாளராகவும் 2001ஆம் ஆண்டு ரொறன்ரோவில் ஆரம்பிக்கப்பட்ட TVI தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராகவும், செய்தி ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.
ரொறன்ரோவில் தமிழோசை, CTBC வானொலி, கீதவாணி முதலிய வானொலிகளில் செய்திகளைத் தொகுத்து அவ்வப்போது வாசித்திருக்கிறார். ரொறன்ரோவிலும் வானொலி, தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளராகவும் இருந்துள்ளார்.
கமலா தம்பிராஜாவின் பூதவுடலுக்கான இறுதிக் கிரிகைகள் ரொறன்ரோவில் நடைபெறவுள்ளது. அவரின் இழப்பு ஊடகத்துறைக்கு மட்டுமல்லாது, இலங்கை மற்றும் கனடாவிற்கும் பேரிழப்பாகும்.
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் பிரதிப் பணிப்பாளர் நாயகம், இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபன தமிழ்பிரிவின் முன்னாள் தலைவர் உள்ளிட்டவர்கள் தமது அஞ்சலியை தெரிவித்துள்ளனர்.