வேலையை உதறித் தள்ளிய நபர்: என்ன செய்கிறார் தெரியுமா?

வாழ்க்கையையே பிறருக்கு சேவை செய்வதற்காக அர்ப்பணிப்பது எளிதல்ல, ஆனால் Amitabh Soniயைப் பார்த்தால் அப்படித் தெரியவில்லை.

பிரித்தானியாவில் சமூக நலத்துறையில் பத்தாண்டுகள் பணிபுரிந்து வந்த Amitabh Soni, 2014ஆம் ஆண்டு ஜூலை மாதம் தனது அரசுப் பணியை விட்டு விட்டு இந்தியாவுக்கு வந்து Abhedya என்னும் NGOவைத் தொடங்கினார்.

தான் பிரித்தானியாவுக்குச் சென்றதே அங்குள்ள குடியரசு முறை, அரசாங்கம் எப்படி செயல்படுகிறது, மக்களும் அரசாங்கமும் எப்படி இணைந்து செயல்படுகிறார்கள் என்று கற்றுக்கொள்வதற்காகத்தான் என்று கூறும் அவர் ‘எப்போதுமே எனக்கு இந்தியாவுக்குத் திரும்பி என் நாட்டிற்காக எதையாவது செய்யவேண்டும் என்ற விருப்பம் இருந்துகொண்டே இருந்தது, ஆனால் அதற்காக நான் கற்க வேண்டியது நிறைய இருந்தது. அதனால்தான் இந்தியா திரும்ப இவ்வளவு காலமாயிற்று” என்கிறார்.

நம் நாட்டின் கிராமங்களில் பயன்படுத்தப்படாமல் உள்ள அறிவும் மக்கள் இயற்கையோடு இயைந்து வாழும் அமைதியான வாழ்வும் Soniயை மிகவும் கவர்ந்தன.

ஏற்கனவே அவர்கள் கொண்டிருக்கும் அறிவையும் திறமையையும் கொண்டு கிராம மக்களின் கல்வி, நீர் மேலாண்மை, தொழில்நுட்பம் மற்றும் நிர்வாகம் ஆகியவற்றில் அவர்கள் மேம்பட உதவ வேண்டும் என்ற எண்ணமே Abhedya தோன்றுவதற்கு காரணமாக அமைந்தது.

தனது நண்பர்களிடமிருந்து நன்கொடைகளைப் பெற்று மத்தியப்பிரதேசத்தின் போபாலிலிருந்து 25 கிலோமீட்டர் தொலைவிலுள்ள Kekadiya என்னும் ஆதிவாசிக் கிராமத்தில் Amitabh Soni தனது பணியைத் தொடங்கினார்.

வேலை தேடி இளைஞர்கள் நகரங்களுக்குச் செல்லும் கால கட்டத்தில் அதையே ஒரு வாய்ப்பாக எடுத்துக்கொண்டு இளைஞர்களுக்கு அடிப்படை கணினிப் பயிற்சி கொடுத்து ஆதிவாசிகளால் நடத்தப்படும் இந்தியாவின் முதல் IT companyயை நிறுவியுள்ளார்.

அடிக்கடி மின் வெட்டு ஏற்படுவது ஒரு பிரச்சினையாக இருக்க அதை மேற்கொள்வதற்காக சோலார் பேனல்களை நிறுவுவதற்கு பணம் சேகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

அவரது சேவைகளில் முக்கியமான ஒன்று கிராமங்களில் இயற்கை முறை விவசாயத்தை அறிமுகப்படுத்தியதாகும்.

ஒரு காலத்தில் சொற்ப வருவாயைக் கண்ட விவசாயிகள் இன்று இயற்கை முறை விவசாயத்தால் நல்ல வருவாயை பெறுகின்றனர்.

ஒரு காலத்தில் மரங்கள் நிறைந்திருந்த ஊர் மரங்கள் வெட்டப்பட்டதால் வறண்டு போனது, மரங்களின் முக்கியத்துவத்தை மக்களுக்கு உணர்த்தியதால் இப்போது மரங்கள் வளர்க்கப்படுகின்றன.

ஒன்றரை ஆண்டுகளில் தண்ணீரை சேகரித்து வைப்பதற்காக சிற்றணைகள் கட்டப்படுவதற்கான திட்டங்கள் தீட்டப்பட்டு வருகின்றன.

கல்விப் பணிக்காக, பிள்ளைகள் அமர்ந்து படிப்பதற்கான டெஸ்குகள், பல பள்ளிகளில் மதிய உணவு போன்ற பல உதவிகள் செய்யப்படுகின்றன. பிள்ளைகள் அடிப்படைக் கல்வி மட்டுமின்றி உயர் கல்வியும் கற்கிறார்கள்.

பெண்கள் வெளியூர்களுக்கு சென்று வேலை செய்வதை அனுமதிக்காத கிராமத்தினர் இப்போது தங்கள் கிராமத்திலேயே வேலை வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளதால் அவர்களை வேலைக்கு அனுப்புகிறார்கள்.

இவ்வளவுக்கும் காரணமான Amitabh Soniயோ பணம் மட்டுமே வாழ்க்கையில்லை, பணத்தால் வாங்க முடியாத பல விடயங்கள் இருக்கின்றன.

மகிழ்ச்சியும், மன அமைதியும் பிறருக்கு உதவுவதிலும், பிறரை முன்னேற்றுவதிலும்தான் இருக்கின்றன என்கிறார்.

இன்று இந்தியாவின் கிராமம் ஒன்றில் தன்னலம் கருதாமல் சேவை செய்துவரும் Amitabh Soni சர்வதேச வர்த்தகத்தில் பட்ட மேற்படிப்பு படித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.