ரயில்வே தொழிற்சங்க நிர்வாகி புதியவன் கொலைசெய்யப்பட்ட வழக்கில், முக்கியத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை பெரம்பூரில் உள்ள ரயில்பெட்டிகள் தயாரிக்கும் ஐ.சி.எஃப் நிறுவனத்தில் ஜே.கே.புதியவன், மெக்கானிக்கல் பிரிவில் ஊழியராகப் பணியில் சேர்ந்தார். வில்லிவாக்கத்தில் குடும்பத்துடன் வசித்து வந்தார். அதன்பிறகு, தெற்கு ரயில்வே-க்கு இடம் மாறினார். அங்கு இளநிலை அதிகாரியாக பணியாற்றினார். அடுத்து, அனைத்திந்திய பிற பிற்படுத்தப்பட்ட பிரிவு ரயில்வே (ஏஐஓபிசி) தொழிற்சங்கத்தின் பொதுச் செயலாளராக நீண்ட காலம் பதவி வகித்து வந்தார்.
இன்று காலை, வீட்டிலிருந்த புதியவனைச் சந்திக்க இரண்டு நபர்கள் வந்துள்ளனர். அவர்களுடன் புதியவன் பேசியதாகச் சொல்லப்படுகிறது. அப்போது நடந்த தகராறில், புதியவன் கொலைசெய்யப்பட்டார். அவரைச் சந்தித்த இரண்டு நபர்களும் தப்பிச் சென்றுவிட்டனர். புதியவன் கொலை செய்யப்பட்ட தகவல், ஐ.சி.எஃப் போலீஸ் நிலையத்துக்குக் கிடைத்ததும், போலீஸ் டீம் அங்கு சென்று புதியவனின் உடலைக் கைப்பற்றியது. ‘எதற்காக புதியவன் கொலை செய்யப்பட்டார்’ என்று போலீஸார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
” நீண்ட காலமாக ரயில்வே ஏ.ஐ.ஓ.பி.சி.தொழிற்சங்கத்தில் பதவியிலிருந்தவர் புதியவன். அவரைச் சந்திக்க தினமும் அவரது வீடு,அலுவலகத்துக்கு ரயில்வே தொழிலாளர்கள் வருவதுண்டு. அதுபோலத்தான் இன்றும் புதியவனுக்குத் தெரிந்த இரண்டு நபர்கள் அவரது வீட்டுக்கு வந்துள்ளனர். அதன்பிறகுதான் கத்தியால் குத்திக் கொலைசெய்யப்பட்டுள்ளார். அவரது முகம், உடலில் கத்திக்குத்துக் காயங்கள் இருக்கின்றன. புதியவனைச் சந்தித்தவர்களில் ஒருவர், அவரது முன்னாள் கார் டிரைவர் என்று எங்களுக்குத் தகவல் கிடைத்துள்ளது. டிரைவருடன் வந்த இன்னொரு நபர் குறித்த தகவல் தெரியவில்லை.
அதுதொடர்பான விசாரணை நடந்துவருகிறது. புதியவன் கொலைசெய்யப்பட்டுள்ளதால், தெற்கு ரயில்வே மற்றும் ஐ.சி.எஃப்பில் பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனால், அந்தப் பகுதியில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. புதியவனின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. அங்கேயும் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். கொலைக்கான காரணம் இதுவரை தெரியவில்லை” என்கின்றனர் போலீஸார்.
ரயில்வே வட்டாரத்தில் விசாரித்தோம். ” புதியவனுக்கு இரண்டு குழந்தைகள். அவரது முதல் மனைவி இறந்த பிறகு, இரண்டாவதாக இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார். அந்தப் பெண்ணும் ஐ.சி.எஃப்பில்தான் பணியாற்றுகிறார். ஐ.சி.எஃப்பிலிருந்து தெற்கு ரயில்வே-க்கு இடம் மாறிய புதியவன், ஏ.ஐ.ஓ.பி.சி சங்கத்தின் அப்போதைய தலைவராக இருந்த நடராஜனுடன் நெருக்கமாக இருந்தார். இதன் காரணமாக தொழிற்சங்கத்தின் பொதுச் செயலாளர் ஆனார். இதற்கிடையில் நடராஜன் மரணமடைந்தார். அவரது மரணத்தில் மர்மங்கள் இருப்பதாகவும் சந்தேகம் எழுந்தது. அதேபோல புதியவனின் முதல் மனைவி மரணத்திலும் சிலர் சந்தேகங்களைக் கிளப்பினர். ஆனால், அவர் தற்கொலை செய்துகொண்டதாகப் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்தச் சமயத்தில்தான், சில ஆண்டுகளுக்கு முன், நெல்லை மாவட்டம் ராதாபுரம் போலீஸ் நிலையத்திலிருந்து வந்த ஒரு டீம், நெல்லையில் நடந்த ஒரு கொலை வழக்குத் தொடர்பாக, ரயில்வே தொழிற்சங்கத்தினரிடம் ரகசிய விசாரணையை மேற்கொண்டது. அந்த வழக்கிலும் புதியவன் மீது போலீஸாருக்கு சந்தேகப்பார்வை இருந்தது. ஆனால், அந்த சந்தேகம் நிரூபணமாகவில்லை. இதனால், புதியவனை விட்டுவிட்டு சென்னையிலிருந்து நெல்லைக்கு திரும்பிச்சென்றது போலீஸ்.
நெல்லையில் நடந்த கொலையில், புதியவனுக்கும் பிரபல சினிமா இயக்குநர் ஒருவருக்கும் கார் டிரைவராக இருந்த ஒருவரின் பெயர் அடிபட்டது. அதன்பேரில்தான், புதியவனிடம் விசாரிக்க போலீஸ் டீம் வந்தது. ஆனால், ஆதாரங்கள் எதுவுமில்லாததால் அந்தக் கொலை வழக்கு இன்றுவரை கிடப்பில் உள்ளது. மேலும், புதியவனின் தொடர்பு வட்டம் மிகப் பெரியது. ரயில்வே மட்டுமல்லாமல், அரசியல்வாதிகளுடனும் நெருக்கமாக இருந்தார். புதியவனால்தான் மணல் மாஃபியா தலைவன் என்ற உச்சத்துக்குச் சென்றார் ஆந்திர தொழிலதிபர் ஒருவர். அந்த மணல் மாஃபியா தலைவன், ஆரம்ப காலகட்டத்தில் ஐ.சி.எஃப்பில் சிறிய அளவில் ஒப்பந்தப் பணிகளை எடுத்துச் செய்து வந்தார். அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் கோலோச்சிய மணல், வருமானவரித்துறையின் பிடியில் சிக்கியது தனிக்கதை. அவரைப் போல, புதியவனால் வளர்ச்சியடைந்தவர்களின் பட்டியல் அதிகம். புதியவனின் வளர்ச்சியைப் பிடிக்காதவர்கள்தான் அவரைக் கொலைசெய்திருக்க வேண்டும்” என்கின்றனர்.
நெல்லையைச் சேர்ந்த போலீஸ் உயரதிகாரி ஒருவரிடம் பேசினோம். ” கள்ளத்துப்பாக்கி வழக்கில் தூத்துக்குடியைச் சேர்ந்த பிரபல ரவுடி ஒருவரைப் பிடித்து விசாரித்தபோதுதான் புதியவனின் கார் டிரைவர் பெயரைத் தெரிவித்தார். அந்த நபரை விசாரிப்பதில் சிக்கல்கள் இருந்தன. அதோடு, எங்களாலும் புதியவனை நெருங்க முடியவில்லை. ரவுடியின் வாக்குமூலம் இருந்தும் அந்தக் கொலை வழக்கில் யார் மீதும் நடவடிக்கை எடுக்கப்படாமல் அந்த வழக்கும் கிடப்பில் உள்ளது” என்கிறார்.
புதியவன் வழக்கை விசாரித்துவரும் போலீஸார் கூறுகையில், ” பா.ம.கவிலும் புதியவன் இருந்தார். அவருக்கு ரஞ்சிதா என்ற மனைவியும் நித்யா, அனுசியா என்ற இரண்டு மகள்களும் உள்ளனர். குழந்தைகள் இருவரும் இன்று காலை பள்ளிக்குச் சென்றுவிட்டனர். மனைவியும் வேலைக்குக் கிளம்பிக்கொண்டிருந்தார். அப்போதுதான், புதியவனிடம் கார் டிரைவராகப் பணியாற்றிய பாஸ்கரன் மற்றும் இன்னொருவர் அங்கு வந்துள்ளனர். அப்போதுதான் கொலை நடந்துள்ளது.
மனைவி வீட்டில் இருக்கும்போதே புதியவனை கொலை செய்துவிட்டு கொலையாளிகள் தப்பிச் சென்றுள்ளனர். அவர்கள் சென்றபிறகுதான் புதியவன் கொலை செய்யப்பட்ட தகவல் ரஞ்சிதாவுக்கு தெரிந்துள்ளது. எங்களுடைய முதல்கட்ட விசாரணையில் பாஸ்கரன், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வேலையிலிருந்து நின்றுவிட்டார். பாஸ்கரனின் தம்பிக்கு ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாக புதியவன் உறுதி கொடுத்துள்ளார். அதில் ஏற்பட்ட தகராறில்தான் புதியவன் கொலை செய்யப்பட்டுள்ளார். தப்பி ஓடிய பாஸ்கரன் மற்றும் இன்னொருவரை தேடி வருகிறோம்” என்கின்றனர்.
இதற்கிடையில், புதியவனின் குடும்பத்தினருக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் உள்பட ரயில்வே தொழிற்சங்கத்தினர் ஆறுதல் கூறினர். ‘ புதியவன் கொலைக்கான காரணம் கண்டறியப்பட்டால், பல மர்மமுடிச்சுகள் வெளியாகும்’ என்று போலீஸார் எதிர்பார்க்கின்றனர்.