சென்னையில் குடிபோதையில் மாடியிலிருந்து விழுந்த ஒருவரால் படுகாயமடைந்து தீவிர சிகிச்சைபெற்று வந்த 4 வயது சிறுமி தன்யஸ்ரீ தற்போது குணமடைந்து வருகிறார்.
தண்டையார்பேட்டையில் தன் தாத்தா அருணகிரியோடு சாலையில் நடந்துகொண்டிருந்த சிறுமி தன்யஸ்ரீ மீது 2 வது மாடியிலிருந்து குடிபோதையில் இருந்த ஒரு நபர் விழுந்தார். இதில் படுகாயமடைந்த சிறுமி சென்னை கிரீம்ஸ் ரோட்டில் உள்ள அப்போலோ மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மூளையில் சிறிதான வீக்கமும் தண்டுவடம் மற்றும் காலில் எலும்பு முறிவும் ஏற்பட்டதாக மருத்துவமனை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. தன் குழந்தையின் சிகிச்சைக்கு உரிய பணமில்லாமல் தவித்த ஸ்ரீதர் – ஸ்ரீதேவி தம்பதிக்குப் பல்வேறு தரப்பிலிருந்தும் உதவிகள் குவிந்தன.
இந்தநிலையில், சிறுமி தன்யஸ்ரீயின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அவரின் தந்தை ஸ்ரீதர் தெரிவித்துள்ளார். அவசர சிகிச்சைப் பிரிவில் இருந்து சாதாரண வார்டுக்குத் தற்போது மாற்றப்பட்டிருப்பதாகவும் அவருக்கு மேலும் ஓர் அறுவைசிகிச்சை மேற்கொள்ள வேண்டி இருப்பதாகவும் ஸ்ரீதர் தெரிவித்தார். “சிகிச்சைக்கு உதவிய அரசு, ஊடகங்கள் மற்றும் நல்லுள்ளங்கள் அனைவருக்கும் நன்றி என்பதைத் தவிர என்ன சொல்வதென்றே தெரியவில்லை. தன்யஸ்ரீ விரைவில் குணமடைய உங்கள் அனைவரின் பிரார்த்தனைகளும் தேவை’’ என்றும் ஸ்ரீதர் நெகிழ்ந்துள்ளார்.