தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச் சாவடிகளில் கடந்த 2017-ம் ஆண்டு மட்டும் ரூ.16,365.20 கோடி வசூலிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் அரசு மற்றும் தனியார் சார்பில் மொத்தம் 400-க்கும் அதிகமான சுங்கச் சாவடிகள் செயல்பட்டு வருகின்றன. இந்தச் சுங்கச் சாவடிகளைக் கடக்கும் வாகனங்களிடம், அதன் தரவரிசைப் படி கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. அந்தப் பகுதியில் உள்ள சாலைகளைப் பராமரிக்க இந்தத் தொகை பயன்படுத்தப்படுவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், நாடு முழுவதும் 20 மாநிலங்களில் உள்ள சுங்கச் சாவடிகளில் கடந்த 2017-ம் ஆண்டு மட்டும் ரூ.16,365.20 கோடி வசூலிக்கப்பட்டதாக மத்தியச் சாலை மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக, ராஜஸ்தானில் ரூ.2,39139 கோடியும், தமிழகத்தில் ரூ.1,756.57 கோடியும் வசூலிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த வரிசையில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் ரூ.1,728.82 கோடியும், குஜராத்தில் ரூ.1,658.56 கோடியும், மகாராஷ்டிராவில் ரூ.1,551.58 கோடியும் வசூல் செய்யப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரையில், அரசு சார்பில் 15 மற்றும் தனியார் பராமரிப்பில் 37 சுங்கச்சாவடிகளும் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.