புறாவுக்காக 2 வயது சிறுவன் கொலை!

இந்திய மாநிலம் கர்நாடகாவில் கூண்டிலிருந்து புறாவை வெளியே விட்டதால், 2 வயது குழந்தையைக் பக்கத்து வீட்டு சிறுவனே கொலை செய்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் சோழதேவன்லாளியைச் சேர்ந்தவர்கள் பசவராஜ் வெங்கம்மா தம்பதியினரின் 2 வயது மகன் வெங்கடேஷ். இவர்களுடைய பக்கத்து வீட்டில் டீ வியாபாரம் செய்துவருபவருடைய மகன் ரமேஷ்.

கடந்த வாரம் ரமேஷ், 300 ரூபாய் கொடுத்து மூன்று புறாக்களை வாங்கி வந்து தனது கூட்டில் அடைத்து வளர்த்து வந்துள்ளான். இந்த நிலையில் வெங்கடேஷ், புறாவை பார்க்க அடிக்கடி வந்தாதகவும், புறாவை தொடக்கூடாது என்று ரமேஷ் கண்டித்தாகவும் கூறப்படுகிறது.

இதனிடையே புதனன்று ரமேஷ் இல்லாத போது வெங்கடேஷ் மற்றும் அவனுடைய மூத்த சகோதரரும், கூண்டை திறந்து புறாவை பறக்க விட்டுள்ளனர்.

வீடு திரும்பிய ரமேஷ், கூண்டில் புறா இல்லாததைக் கண்டு அதிர்ச்சியடைந்து வெங்கடேசிடம் விசாரிக்க, தவறை ஒப்புக் கொண்டுள்ளான்.

பின்னர் இருவரும் புறாவை தேடி சென்றுள்ளனர். ஒரு இடத்தில் புறாவை கண்டுபிடிக்க, அதை கையில் பிடித்த ரமேஷ் மகிழ்ச்சியடைந்தான். இதைக் கண்டு பொறாமை கொண்ட வெங்கடேஷ் மீண்டும், ரமேஷ் கையை தட்டி விட்டு, புறாவை பறக்க விட்டுள்ளான்.

இதனால், ஆத்திரமடைந்த ரமேஷ், வெங்கடேஷின் கழுத்தை நெரித்து கொன்றுள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே வெகு நேரம் ஆகியும் வெங்கடேஷ் வீடு திரும்பாததால், அவனது பெற்றோர்கள் அவனை தேடிச் சென்றுள்ளனர். அங்கு சுய நினைவை இழந்த நிலையில் தரையில் கிடந்த சிறுவனை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர்.

வெங்கடேசை பரிசோதித்த மருத்துவர்கள், அவன் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதனால், அதிர்ச்சியடைந்த வெங்கடேஷின் பெற்றோர்கள், ரமேஷின் தந்தை மீது பொலிசாரிடம் புகார் அளித்தனர்.

விசாரணையில், ரமேஷின் பெற்றோர்களுக்கு இந்த சம்பவத்தில் தொடர்பு இல்லை என்பதும், கொலைக்கு காரணம் ரமேஷ் தான் என்பதையும் கண்டுபிடித்தனர்.

புறாவுக்காக 2 வயது சிறுவன் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெங்களூரு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.