டோலிவுட்டில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் அனுசுயா பரத்வாஜ். ஹைதராபாத்தில் வசித்து வரும், இவர் தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் இருந்து வருகிறார். கடந்த செவ்வாய்க்கிழமையன்று அனுசுயா தர்ணகாவில் உள்ள தன்னுடைய தாயாரின் வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கிருந்து வெளியில் வந்தபொழுது, அனுசுயாவை பார்த்த சிறுவன் வேகமாக ஓடி போய் தன்னுடைய அம்மாவின் கைபேசியை வாங்கிக்கொண்டு நடிகையிடம் ஓடி வந்தான்.
அங்கு நான் உங்களுடைய ரசிகன், ஒரு செல்பி எடுத்துக்கலாம் என கேட்டுள்ளான். உடனே அனுசுயா சிறுவனின் கைபேசியை வேகமாக பறித்து கீழே எறிந்துள்ளார். இதில் சிறுவன் கொண்டு வந்த கைபேசி உடைந்தது. இதனையடுத்து சிறுவனின் தாயார் தார்னாகா காவல் நிலையத்தில் அனுசுயாவின் மீது புகார் அளித்தார். இதுகுறித்து தற்போது காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இச்சம்பவம் சமூக வலைத்தளங்களில் பரவியதை அடுத்து நெட்டிசன்கள் பலரும் அனுசுயாவிற்கு எதிராக குரல் கொடுத்தனர். இதனால் மனம் உடைந்த அனுசுயா தன்னுடைய சமூக வலைதள கணக்குகளை டீஆக்டிவேட் செய்துள்ளார்.