கூகுள் பக்கத்திற்கு நாம் செல்லாத நாட்களே இல்லை எனலாம். ஓர் இணையதளத்தின் முகவரி முழுமையாகத் தெரிந்திருந்தாலும், நேரடியாக அதற்குச் செல்லாமல், கூகுள் சர்ச் வழியாகச் செல்வதையே நாம் வாடிக்கையாகக் கொண்டுள்ளோம். அந்த அளவிற்கு, இன்டர்நெட் சர்ச்சில் கூகுள் ஒரு முடி சூடிய அரசன்! கூகுள் சர்ச் தரும் ‘results’ பக்கங்களில், முதல் நான்கு இடங்களைப் பிடிக்க பல நிறுவனங்கள் நீ, நான் எனப் போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றன. காரணம், ஒரு ‘keyword’ கொடுக்கப்பட்டு அதற்கு விடையாக வரும் ‘results’ பக்கங்களில், மேலே இருக்கும் லிங்குகளுக்குதான் மதிப்பு அதிகம். மக்களும் அதையே தங்கள் ‘keyword’ கேள்விகளுக்குத் தகுந்த விடையாகக் கருதுகிறார்கள். இந்த இடங்களில் ஒரு நிறுவனத்தின் இணையதள முகவரி காட்டப்படுவதற்கு, கூகுளே பல்வேறு வழிமுறைகள் மற்றும் கோட்பாடுகளை நிர்ணயித்துள்ளது. இந்த வரையறைக்குள் வரும் நிறுவனங்களின் பக்கங்களுக்கு மட்டுமே ‘search results’ பக்கத்தில் முன்னுரிமை.
இப்படி உலகமே கூகுளையும், அதன் கோட்பாடுகளையும், அது வடிகட்டித் தரும் ‘search results’ பக்கங்களையும் மட்டுமே நம்பியிருக்க, அந்த ‘results’ பக்கங்களில் தன்னுடைய அதிகாரத்தை வைத்து கூகுள் தன்னுடைய மற்றும் தன்னை சார்ந்த அல்லது தனக்கு வேண்டப்பட்ட நிறுவனங்களின் முகவரியை உள்ளே நுழைத்தால்? அதாவது, இது எப்படியென்றால், கூகுள் விதித்த விதிமுறைகள், வழிமுறைகள் மற்றும் கோட்பாடுகள் அனைத்தையும் அதுவே ஓரங்கட்டிவிட்டு, ஏமாற்று வேலை ஒன்றைச் செய்வது போலத்தான். இதைத்தான் கூகுள் இந்தியாவில் செய்து வசமாக மாட்டிக்கொண்டது. இந்தியாவில் நம்பகத்தன்மையை பரிசோதிக்கும் கண்காணிப்பு நிறுவனங்களில் ஒன்றான போட்டி கண்காணிப்பு ஆணையம் எனப்படும் Competition Commission of India (CCI), கூகுளின் இந்த ஏமாற்று வேலையை உறுதி செய்து 136 கோடி அபராதம் விதித்துள்ளது. இது 2013, 2014 மற்றும் 2015 என்ற மூன்று நிதி ஆண்டுகளில், கூகுள், இந்தியாவில் ஈட்டிய மொத்த வருவாயில் 5 சதவீதம்.
கூகுள் செய்த அரசியல்
கடந்த 2012ம் ஆண்டு பிரபல திருமண சேவை இணையதளம் மற்றும் நுகர்வோர் ஒற்றுமை & அறக்கட்டளை சங்கம் (Consumer Unity & Trust Society – CUTS) இணைந்து கூகுள் நிறுவனம் இந்தியாவில் காட்டப்படும் சர்ச் ரிசல்ட்களில் பாரபட்சம் காட்டுவதாகப் போட்டி கண்காணிப்பு ஆணையத்திடம் புகார் அளித்தது. தங்களைப் போன்ற நிறுவனங்கள், கூகுள் வகுத்துள்ள வரைமுறைகளுக்கு ஏற்ப செயல்பட்டபோதும், தங்களின் இணையதளங்கள் ரிசல்ட்களில் காட்டப்படாமல், கூகுள் மற்றும் அதைச் சார்ந்த நிறுவனங்களுக்கு மட்டும் முன்னுரிமை அளிக்கப்பட்டதாகப் புகாரில் குறிப்பிட்டிருந்தது. இப்படி நிகழ்வதால், கூகுளின் ‘search results’ பக்கங்களை மட்டுமே, தங்களின் வியாபாரத்திற்காக நம்பியிருக்கும் நிறுவனங்கள் பெரும் பாதிப்பையும், பின்னடைவையும் சந்திக்கும். இதை ஒரு நம்பகத்தன்மையற்ற செயலாகவே பார்க்க முடியும். இந்தப் புகார் குறித்த விசாரணையில் ஈடுபட்ட போட்டி கண்காணிப்பு ஆணையம், கூகுள் விமானங்கள் தேட அறிமுகப்படுத்தப்பட்ட புதிய சாளரத்தில் (‘Search Flights’) பாரபட்சம் காட்டி நடப்பதாகக் கண்டறிந்துள்ளது.
முன்னரெல்லாம், நீங்கள் ஒரு விமான டிக்கெட் புக் செய்ய, அல்லது ஒரு தகவலை பெறக் கூகுளை பயன்படுத்தும் போது, நீங்கள் கேட்கும் கேள்விக்குப் பொருந்திப்போகும் விடைகளை அளித்து வந்தது. உதாரணமாக, கோவையிலிருந்து சென்னை செல்ல நீங்கள் விமானத்தையோ, டிக்கெட்டின் விலையையோ தேடினால், அந்தச் சேவையை அளிக்கும் சிறந்த இணையதளங்களைக் கூகுள் வழங்கியது. ஆனால், கூகுளின் விமானங்கள் தேடும் அந்தப் புதிய சாளரம் (‘Search Flights’) அறிமுகம் செய்யப்பட்டவுடன், அதற்குக் கூகுளின் ‘search results’ பக்கங்களில் முன்னுரிமை அளிக்கப்பட்டது.
சரி, இது சுலபமான வழிதானே என்று நீங்கள் நினைக்கும் முன், இதிலுள்ள சூட்சமத்தை புரிந்து கொள்ள வேண்டும். கூகுளின் இந்தச் சாளரத்தை பயன்படுத்த நினைத்து, ‘search flights’ என்ற பட்டனை நீங்கள் அழுத்தினால், உள்ளே வரிசைகட்டி காட்டப்படும் விமானச் சேவைகள் அனைத்தும் கூகுளில் காசு கொடுத்து விளம்பரங்கள் போடும் பெருநிறுவனங்களின் விமானங்கள். கூகுளின் இந்தப் பிரத்தியேகப் பட்டியலில் ஒரு நிறுவனத்தின் விமானம் இடம்பெற பணம் செலுத்த வேண்டும். அதிகமான தொகை அளிப்பவருக்கு முதல் இடம், குறைவாக அளிப்பவருக்குக் கடைசி இடம் என வரிசையாக இடங்கள் மற்றும் முன்னுரிமை வழங்கப்படும். இது கூகுள் சர்ச்சின் மீதிருக்கும் நம்பகத்தன்மையை பெரிதும் பாதிக்கும் செயல்.
இந்தக் கோணத்தில் பார்த்தால், இந்த ‘Search Flights’ சாளரம் என்பது கூகுள் ‘Search Engine’ போல ஒரு நம்பகத்தன்மை வாய்ந்ததல்ல என்பது தெளிவாக புரியும். இது மக்களைச் சிறந்த சேவையைத் தேர்ந்தெடுக்க விடாமல், கூகுளுக்கு அதிக பணம் செலுத்தும் நிறுவனங்களின் விமானச் சேவையை பயன்படுத்த வைக்கும் ஏமாற்று வேலை. இதைக் கண்டறிந்துள்ள போட்டி கண்காணிப்பு ஆணையம், கூகுளுக்கு மேலே கூறியபடி அபராதம் விதித்துள்ளது. இந்த அபராதத் தொகையை 60 நாட்களுக்குள் கூகுள் செலுத்த வேண்டுமென்றும் குறிப்பிட்டுள்ளது. அது மட்டுமின்றி, இந்த ‘Search Flights’ சாளரம், கூகுள் விளம்பரதாரர்களை மட்டும் கருத்தில் கொண்டு அளிக்கப்படும் பட்டியல் என்றும், இது சிறந்த சேவைகளுக்கான பட்டியல் இல்லை என்றும் தெளிவாக விளக்கும் ‘disclaimer’ ஒன்றைக் கூகுள் உடனே சேர்க்க வேண்டுமென்றும் உத்தரவு பிறப்பித்துள்ளது. இது போல, பொறுப்பின்றி செயல்பட கூடாது என்றும் எச்சரிக்கை செய்துள்ளது.
இது குறித்து கூகுள் தரப்பில் இருந்து வந்த பதிலில், “எங்கள் நிறுவனம் மக்களுக்கு திடீரென முளைக்கும் பிரச்னைகளுக்கு, நவீன முறையில், மிகச் சுலபமாக சேவையை அளிக்கவே விரும்புகிறோம். போட்டி கண்காணிப்பு ஆணையம் நடத்திய பரிசோதனையில், எங்கள் பெரும்பாலான சேவைகள் நம்பகத்தன்மை உடையதாகவும், சட்ட விதிகளின் படியே இருப்பதாகவும் உறுதி செய்துள்ளது. இந்த ‘Search Flights’ சேவையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள பிரச்னைகளை நாங்கள் கருத்தில் எடுத்துக் கொண்டு அதைச் சரி செய்ய நடவடிக்கை எடுப்போம்!” என்று உறுதி அளித்துள்ளனர்.