சென்னை தி.நகரில் உள்ள ஜெ.தீபா வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருவதாக இன்று காலை ஒரு தகவல் பரவியது. சிறிது நேரத்தில் அங்கு போலீஸார் சென்றனர். பத்திரிகையாளர்களும் சென்றனர். தீபா வீட்டுக்குள் போலீஸார் சென்றதும் வருமான வரித்துறை அதிகாரி என்று வீட்டில் நுழைந்த அந்த நபர் தலைத்தெறிக்க ஓடினார். போலீஸார் அந்த நபரைத் துரத்திக்கொண்டு ஓடினர். பத்திரிகையாளர்களும் அந்த நபரை பின் தொடர்ந்தனர். அந்த நபர் யார்? எதற்காக வந்தார் என்பது பற்றிய தகவல்கள் அவரைப் பிடித்து விசாரித்தால்தான் தெரியவரும்.
இதுகுறித்து தீபாவின் வழக்கறிஞர் கூறுகையில் ‘இன்று காலை வருமான வரித்துறை அதிகாரி என்று தீபா வீட்டுக்குள் ஒரு நபர் நுழைந்தார். அவர் மீது சந்தேகம் ஏற்பட்டதால் போலீஸில் தகவல் கொடுத்தோம்’ என்றார்.
தீபா கணவர் மாதவன் பேசுகையில் ‘இன்று காலை 7 மணியளவில் வருமான வரித்துறை அதிகாரி என்று சொல்லி ஒருவர் உள்ளே நுழைந்தார். எங்களை வெளியேப் போகக் கூடாது என்று சொன்னார். சுமார் மூன்று மணிநேரம் சோதனை செய்தார். பின்புதான் எங்களுக்கு அவர்மீது சந்தேகம் ஏற்பட்டது’ என்றார்.