`பரமசிவத்தைக் கொன்றது யார்’ – திண்டுக்கல் முத்துக்குமார் ஆணவக் கொலை வழக்கு திசைமாறுகிறதா?

முத்துக்குமார் ஆணவக் கொலை வழக்கு விசாரணை தொடங்கப்பட உள்ள நிலையில் முத்துக்குமாரின் தந்தையும், இவ்வழக்கின் முக்கிய சாட்சியுமான பரமசிவம் நேற்று மர்மமான முறையில் இறந்துபோயிருப்பது அதிர்ச்சியளிப்பதாக எவிடன்ஸ் அமைப்பின் செயல் இயக்குநர் கதிர் தெரிவித்துள்ளார்.

முத்துக்குமார்

திண்டுக்கல் மாவட்டம், பழனியைச் சேர்ந்தவர் பரமசிவம் (53). பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த இவரது மகன் முத்துக்குமார் எம்.எஸ்.சி முடித்துவிட்டு தாராபுரத்தில் பி.எட் படித்து வந்தார். முத்துக்குமாரும் வேறு சமூகத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவரும் 3 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இந்நிலையில் கடந்த 13.11.2014 அன்று அந்தப் பெண்ணைச் சந்திக்க ஒட்டன்சத்திரம் பகுதியில் உள்ள அவரது வீட்டிற்கு சென்ற முத்துக்குமார் சடலமாக கிணற்றில் இறந்துகிடந்தார்.

கோழி திருட முத்துக்குமார் சென்றதாகவும் மக்கள் விரட்டிப் பிடிக்கின்ற போது பயந்துபோய் கிணற்றில் விழுந்து இறந்து போனதாகவும் அந்தப் பெண்ணின் குடும்பத்தினர் வாக்குமூலம் கொடுத்தனர். ஆனால் போலீஸ் விசாரணையில், ’முத்துக்குமார் கோழி திருட வரவில்லை. தன்னுடைய காதலியைச் சந்திக்க வந்திருக்கிறார்’ என்கிற உண்மை தெரியவந்தது. குற்றப்பத்திரிகையும் அந்தப் பெண்ணின் குடும்பத்தினருக்கு எதிராக இருந்தது. கண்டிப்பாக இந்த வழக்கில் முத்துக்குமாரை கொலை செய்த குற்றவாளிகளுக்குத் தண்டனை கிடைக்கின்ற நிலை இருந்தது.

இந்த வழக்கு ஒட்டன்சத்திரம் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ளது. இன்னும் சாட்சிகளை விசாரிக்காத நிலையில் முத்துக்குமாரின் தந்தையும் இவ்வழக்கின் புகார்தாரருமான பரமசிவம் நேற்று 08.02.2018 அன்று கோவை அரசு மருத்துவமனையில் இறந்து போனார்.

எவிடன்ஸ் கதிரிடம் பேசினோம். ”முத்துக்குமாரின் வழக்கு  நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. சாட்சிகள் வலுவாக இருக்கின்றன. இந்த நிலையில் முக்கிய சாட்சியான பரமசிவம் இறந்துபோனது அதிர்ச்சியளிக்கிறது.

முத்துக்குமாரின் தந்தை பரமசிவம் தொழில் ரீதியான ஓவியர். கொடைக்கானலில் தங்கி ஓவியத் தொழிலில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் 01.02.2018 அன்று விடியற்காலை 2.30 மணியளவில் பரமசிவம் அவர்களுக்குக் கை, கால்கள் செயலற்றுப் போயுள்ளன. உடனடியாக கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக பரமசிவம் அனுமதிக்கப்பட்டார். மேல்சிகிச்சைக்காக பழனி அரசு மருத்துவமனையில் அன்றைய தினமே அனுமதிக்கப்பட்டார். பழனி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் இங்கு சிகிச்சை கொடுப்பதற்கு வசதியில்லை கோவை போன்ற பெரிய அரசு மருத்துவமனையில் சிகிச்சை கொடுக்க வேண்டுமென்று பரிந்துரை செய்தனர். அதனடிப்படையில் 02.02.2018 அன்று இரவு 9.30 மணியளவில் கோவை அரசு மருத்துவமனையில் பரமசிவம் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

பரமசிவத்தின் மகள் கவிதாவும் மனைவி மாரியம்மாளும் எங்களது எவிடன்ஸ் அமைப்பை தொடர்பு கொண்டு மருத்துவர்கள் உரிய சிகிச்சை அளிக்க மறுக்கின்றனர். ’பரிசோதனை செய்து என்ன பிரச்னை?’ என்று தெரிவிக்கவும் மறுக்கின்றனர் என்று கூறினார். இதனடிப்படையில் எமது எவிடன்ஸ் அமைப்பின் குழுவினர் மருத்துவ அதிகாரிகளை தொடர்பு கொண்டு நிலைமையை எடுத்துக் கூறினோம். அதனடிப்படையில் பரமசிவத்திற்கு ஸ்கேன் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து மருத்துவமனை மருத்துவர்கள் கவிதாவையும் மாரியம்மாளையும் அழைத்து இந்த வழக்கை போலீஸ் வழக்காக மாற்றப்போகிறோம். பரமசிவத்தை பரிசோதனை செய்து பார்த்தபோது தாக்கப்பட்டிருக்கலாம் என்று தெரிய வருகிறது என்று கூறியிருக்கின்றனர். இதனால் 05.02.2018 அன்று எம்எல்சி வழக்காக மருத்துவமனையில் பதிவு செய்யப்பட்டது.

’எம்எல்சி’ வழக்குப் பதிவு செய்தால் உடனடியாக போலீஸாருக்குத் தகவல் தெரிவித்து வழக்கு குறித்து விசாரிக்க வேண்டும். ஆனால் மருத்துவர்கள் போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்காமல் இருந்துள்ளனர். இந்நிலையில் நேற்று 08.02.2018 இரவு உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டு பரமசிவம் இறந்துபோயிருக்கிறார்.

திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்திவேலை தொடர்புகொண்டு இவ்வழக்கு குறித்து விசாரித்தபோது, ’கோவை மருத்துவர்கள் எம்எல்சி வழக்காகப் பதிவு செய்தது எங்களுக்குத் தெரியாது. இன்றுதான் தகவல் கூறினார்கள். அவர் உயிரோடு இருக்கும்போது தகவல் கிடைத்திருந்தால் விசாரணை மேற்கொண்டிருப்போம்’ என்று கூறினார்.

கோவை மருத்துவமனையின் டீன் அசோகனிடம் கேட்டபோது,’இது ஒரு சாதாரண மேட்டர் இதை ஏன் பெரிதுபடுத்துகிறீர்கள்?’ என்றார்.

கதிர்

வரும் 19ம் தேதி முத்துக்குமாரின் வழக்கு விசாரணை தொடங்கப்படுகிற நிலையில் நேற்று பரமசிவம் இறந்துபோயிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இந்த வழக்கினை எம்எல்சி வழக்காக முன்வந்து பதிவு செய்தவர்கள் காவல்துறை கவனத்திற்கு கொண்டு செல்லாமல் இருப்பது பலத்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இதற்கிடையில் பரமசிவத்தின் சடலம் 3 மருத்துவர்கள் கொண்ட குழு பிணக்கூராய்வு செய்ய இருப்பதாகவும் அவற்றை வீடியோ எடுப்பதாகவும் மருத்துவர்கள் பரமசிவம் குடும்பத்தாரிடம் உறுதியளித்துள்ளனர். பரமசிவனின் மரணத்தின் உண்மை கண்டறியப்பட வேண்டும். இது இயற்கையான மரணமாகத் தெரியவில்லை. பரமசிவம் அவர்கள் கடுமையாகத் தாக்கப்பட்டிருக்கிறார் என்று அவரது குடும்பத்தினர்கள் உறுதியாகக் கூறுகின்றனர். இதில் சதி இருக்கிறபட்சத்தில் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்’ என்றார் வேதனையுடன்.