தமிழகத்தில் தாயை அடக்கம் செய்ய பிச்சையெடுத்த சிறுவர்கள் இடையில் நின்ற தங்கள் படிப்பை தொடர விரும்புவதாக கூறியுள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகாவை சேர்ந்த தம்பதி காளியப்பன்- விஜயா.
இவர்களுக்கு மோகன்ராஜ் (15), வேல்முருகன் (14), காளீஸ்வரி (9) என மூன்று பிள்ளைகள் உள்ளனர்.
இந்நிலையில் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்னர் காளியப்பன் இறந்த நிலையில், விஜயாவும் சமீபகாலமாக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தார்.
மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த அவர், இரண்டு தினங்களுக்கு முன்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அவரது இறுதிச் சடங்குக்குக்கூட பணமின்றி, பரிதவித்து நின்ற அவரின் பிள்ளைகள் மருத்துவமனையில் இருந்த நோயாளிகள் மற்றும் மருத்துவர்களிடம் பிச்சை எடுத்தனர்.
மருத்துவமனை நிர்வாகமும் உதவி செய்தது, அதன் பின் அவர் சித்தப்பா வந்து தேவையான உதவிகளை செய்ததால், மின்மயானத்தில் விஜயாவின் உடல் தகனம் செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து தாய் மற்றும் தந்தையை இழந்த சிறுவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியதால், தமிழக சமூக பாதுகாப்பு துறையின் குழந்தைகள் நலக்குழு அவர்களை அழைத்து விசாரித்துள்ளது.
அவர்களை தனித்தனியாக அழைத்து விசாரித்துள்ளனர்.
இதுகுறித்து சிறுவன் மோகன் ராஜ், குடும்பத்தில் சாப்பாட்டுக்கே வழியில்லாததால், பேக்கரி கடையில் வேலைக்கு சென்றேன். எனக்கு மீண்டும் படிக்க ஆசையாக உள்ளது.
அதுகுறித்து அதிகாரிகளிடம் கூறினேன். என் தம்பி மற்றும் தங்கையிடமும் அவர்கள் விசாரித்தார்கள்.
3 பேரும் ஒரே பள்ளிக்கூடத்தில் படிக்க ஆசைப்படுவதாக தெரிவித்தோம். அதிகாரிகளும் அதற்கு ஏற்பாடு செய்து தருவதாக உறுதியளித்துள்ளனர் என தெரிவித்துள்ளார்.