கிரிக்கெட் போட்டிகளை பிரபலப்படுத்தும் நோக்கில் சேவாக், அப்ரிடி உள்ளிட்ட முன்னாள் வீரர்கள் பங்கேற்ற டி20 போட்டி சுவிட்சர்லாந்தின் ஆல்ப்ஸ் மலைத்தொடரில் நேற்று நடைபெற்றது.
இதில் சேவாக் தலைமையிலான டைமண்ட்ஸ் அணியை ஷாகித் அப்ரிடி தலைமையிலான ராயல்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றிபெற்றது. பிரபல வீரர்கள் விளையாடுவதால் போட்டியைக் காண ஏராளமான கிரிக்கெட் ரசிகர்கள் வந்திருந்தனர். போட்டி முடிந்ததும், அப்ரிடி அருகிலிருந்த ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்தார். அப்போது, இந்திய ரசிகை ஒருவர் அவருடன் செல்ஃபி எடுத்துக்கொள்ள விரும்பினார். உடனே கையில் வைத்திருந்த இந்திய தேசியக்கொடியை மடக்கிவைத்து செல்ஃபி எடுக்கத் தொடங்கினார்.
இதைக்கண்ட அவர் தேசியக்கொடியை நன்றாகப் பிடியுங்கள் என்று கூறி புகைப்படம் எடுத்துக்கொண்டார். அங்கிருந்த இந்தியர்கள் அனைவரும் அப்ரிடியின் இந்த நடவடிக்கையைக் கண்டு வியந்தனர். இந்தக் காட்சிகள் அனைத்தும் சமூகவலைதளங்களில் வெளியாகி தற்போது வைரலாகப் பரவி வருகிறது. இந்திய தேசியக்கொடிக்கு மரியாதை கொடுத்ததற்காக அப்ரிடிக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. கிரிக்கெட் உலகில் பரமவைரிகளாக இந்தியா, பாகிஸ்தான் நாடுகள் கருதப்பட்டாலும், இருநாட்டு வீரர்களும் தங்களுக்குள் பரஸ்பரம் நன்றி தெரிவித்துக் கொள்வதும், மரியாதை செய்துகொள்ளும் நிகழ்வும் அவ்வப்போது நடப்பதுண்டு.