புனித ஹஜ் பயணத்திலும் பாலியல் தொல்லை…

ஹாலிவுட் நடிகைகள் தாங்கள் பாலியல் துன்புறுத்தல்களுக்குள்ளானதை பகிரங்கமாக வெளிப்படுத்தியதைத் தொடர்ந்து அதே போன்ற பல சம்பவங்கள் வெளிவரத் தொடங்கியுள்ளன.

உடலையும் உள்ளாடைகளையும் வெளியே காட்டுவதில் பெரிதும் அலட்டிக்கொள்ளாத ஹாலிவுட் முதல் தலை முதல் கால் வரை பர்தா அணிந்து புனிதப்பயணமாக செல்லும் ஹஜ் யாத்திரை வரைக்கும் பெண் எப்படி பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்படுகிறாள் என்னும் கதைகள், இல்லையில்லை உண்மைச்சம்பவங்கள் ஒன்றன் பின் ஒன்றாக வெளி வந்து கொண்டே இருக்கின்றன.

கடந்த வாரம் Sabica Khan ஹஜ் யாத்திரைக்கு சென்றிருந்தபோது தான் எவ்வாறு பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாக்கப்பட்டார் என்பதைக் குறித்த செய்தி ஒன்றைப் பதிவிட்டிருந்தார்.

அந்தச் செய்தி படிப்போர் மனதை வேதனைப்படுத்தியது, அதிர்ச்சிக்குள்ளாக்கியது ஏன் அருவருப்படையக்கூடச் செய்தது.

தான் இந்த செய்தியை வெளியிடுவதால் பிறரது மதம் சார்ந்த உணர்வுகள் பாதிக்கப்படுமோ என அஞ்சுவதாகக் கூறி தனது செய்தியைத் தொடங்கிய அவர்,

மதச்சடங்குகளை நிறைவேற்றிக்கொண்டிருக்கும்போது தன்னை பின்னாலிருந்து யாரோ தொடுவதை உணர்ந்தார். கூட்டத்தில் தெரியாமல் நிகழ்ந்திருக்கலாம் என்று எண்ணிய அவர் தனது சடங்குகளைத் தொடர்ந்தார்.

மீண்டும் தன்னை யாரோ தொடுவதை உணர்ந்த அவருக்கு சந்தேகம் ஏற்பட்டது. பின்னர் மூன்றாவது முறை தன் பின் பக்கங்களை யாரோ தொட்டபோதுதான் வேண்டுமேன்றே யாரோ தன்னிடம் தவறான நோக்கத்துடன் நடந்துகொள்ள முயற்சிப்பது உறுதியாயிற்று.

”நின்று திரும்பி அவன் கையைப் பிடித்துத் தள்ளிவிட வேண்டும் என்று எண்ணி திரும்ப முயற்சித்தேன். ஆனால் கூட்டத்தில் என்னால் எதுவும் செய்ய முடியவில்லை”.

”என் சுயத்தை யாரோ என் அனுமதியின்றி தொட்டது போன்ற உணர்வு எனக்கு ஏற்பட்டது. என் நாவு செயலிழந்தது போல் உணர்ந்தேன். யாரும் நான் சொல்வதை நம்பப் போவதில்லை. யாரும் அதை பெரிய விஷயமாக எடுத்துக் கொள்ளப் போவதுமில்லை, என் அம்மாவைத் தவிர” என்று கூறும் அவர் தன் தாயிடம் விடயத்தைக் கூறியிருக்கிறார்.

அவர் பெரிதும் குழப்பமடைந்திருக்கிறார். ஆனால், அவர் ஒரு தாயல்லவா, அதற்குப்பின் தனது மகளை அங்கு செல்ல அவர் அனுமதிக்கவே இல்லை.

புனிதத் தலங்கள் கூட பாதுகாப்பாக இல்லை என்று வருந்தும் அவர், தன் ஒரு முறை இரு முறை அல்ல மூன்று முறை பாலியல் துன்புறுத்தல்களுக்குட்படுத்தப்பட்டது, புனிதப் பயணம் சென்ற மகிழ்ச்சியான நிகழ்வையே மறக்கடித்து விட்டது என்கிறார்.

”இதைப்பற்றி வெளியே சொல்வதில் எந்தத் தவறும் இல்லை என்று நான் நினைக்கிறேன், உங்களில் எத்தனை பேருக்கு இதே போன்று நிகழ்ந்ததோ எனக்குத் தெரியவில்லை, இந்த நிகழ்ச்சி என்னைப் பெரிதும் பாதித்திருக்கிறது” என்று அவர் பதிவிட்டிருந்தார்.

அவரது பதிவு வெளியானதும் Headscarves and Hymens: Why the Middle East Needs a Sexual Revolution என்னும் நூலின் ஆசிரியரான Mona Eltahawy, தான் எவ்வாறு பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாக்கப்பட்டேன் என்னும் ட்விட்டர் செய்தியை வெளியிட்டு மற்ற பெண்கள் தங்கள் அனுபவத்தை பகிர்ந்து கொள்வதற்கு ஒரு இடத்தையும் அனுமதித்திருந்தார்.

அதில் பல பெண்கள் ஹஜ் பயணத்தின்போது தாங்களும் பாலியல் சீண்டல்களுக்கும் துன்புறுத்தல்களுக்கும் உள்ளான செய்திகளை வெளியிட்டனர்.

ஹஜ் பயணத்தின்போது மட்டும் என்றில்லாது பிற மதத்தைச் சேர்ந்தவர்களும் சாமியார்களாலும் பாதிரியார்களாலும் இதே போன்ற பாலியல் சீண்டல்களுக்குள்ளான செய்திகளை வெளியிட்டனர்.