பாலஸ்தீனத்திற்கு சென்று சாதனை படைத்த இந்தியப் பிரதமர்!

இந்திய பிரதமர் மோடி, அரசுமுறை பயணமாக பாலஸ்தீனம், ஐக்கிய அரபு நாடுகள் மற்றும் ஓமன் உள்ளிட்ட அரபு நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

இதில் முதல் கட்டமாக இன்று பிரதமர் மோடி பாலஸ்தீனத்துக்கு சென்றுள்ளார். இந்தப் பயணத்தின் மூலம் பாலஸ்தீனத்திற்கு சென்ற முதல் இந்தியப் பிரதமர் என்ற பெருமையை மோடி பெற்றுள்ளார்.

பாலஸ்தீன பயணத்தை பற்றி தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள மோடி, பாலஸ்தீனத்திற்கு செல்லும் முதல் இந்திய பிரதமர் என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

பாலஸ்தீனத்தின் அதிபர் முகமது அப்பாஸ் உடன் நடைபெறும் பேச்சுவார்த்தையில் பாலஸ்தீன மக்கள் முன்னேற்றத்திற்கும் அந்நாட்டின் வளர்ச்சிக்கும் எனது முழு ஆதரவை தெரிவிப்பதாக கூறியுள்ளார்.

அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு வழங்கப்பட்டது, பின்னர் பிரதமர் மோடி, மறைந்த பாலஸ்தீனத்தின் முன்னாள் அதிபர் யாசர் அரபாட்டின் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

இதனைத் தொடர்ந்து, பாலஸ்தீனத்தின் அதிபர் முகமது அப்பாஸை பிரதமர் மோடி சந்திக்க உள்ளார்.

இந்தச் சந்திப்பில் இரு நாடுகளுக்கும் இடையேயான பாதுகாப்பு மற்றும் வர்த்தகம் தொடர்பாக ஆவணங்கள் கையெழுத்திடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாலஸ்தீன பயணத்தை முடித்துவிட்டு அடுத்ததாக இந்திய பிரதமர் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் -க்கு செல்ல உள்ளார்.

இந்திய பிரதமரின் வருகைக்கு ஐக்கிய அரபு ஊடகங்கள் பெரும் முக்கியத்துவம் அளித்து செய்திகளை வெளியிட்டுள்ளன.

இதுதவிர அரபு நாடுகளில் உள்ள பெரு தொழில் நிறுவனங்கள் பிரதமர் மோடியை வரவேற்று முழுப்பக்க விளம்பரங்கள் கொடுத்துள்ளன. புர்ஜ் கலிஃபா போன்ற முக்கிய கட்டிடங்களையும் இந்திய கொடியை பிரதிபலிக்கும் வகையில் மூவர்ணத்தில் அலங்கரித்து இருந்தனர்.