இந்தியாவில் கணவன் உயிரோடு இருக்கும் போதே அவர் இறந்துவிட்டதாக கூறி, மனைவி இன்சூரன்ஸ் நிறுவனங்களிடம் இருந்து காப்பீட்டுத் தொகை பெற்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியைச் சேர்ந்தவர் ஜிதேந்திர சிங், ஆட்டோ டிரைவரான இவர் நோயின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
ஜிதேந்திர சிங் சில நிறுவனங்களிடம் காப்பீட்டுத் தொகை கட்டி வந்துள்ளார்.
இதனால் மருத்துவமனையில் இருக்கும் கணவன் இறந்துவிட்டார் என்று கூறினால், அந்த பணம் எல்லாம் நமக்கு வந்துவிடும் என்று எண்ணிய மனைவி மற்றும் அவரின் குடும்பத்தார் சட்ட விரோதமாக இறப்புச்சான்றிதழ் மற்றும் பிரேத பரிசோதனை அறிக்கை பெற்று, அதனை இன்சூரன்ஸ் நிறுவனங்களிடம் சமர்பித்து, 16 லட்ச ரூபாய் மோசடி செய்துள்ளனர்.
இதில் ஒரு நிறுவனம் இவர்களின் இறப்புச் சான்றிதழை பார்த்து சந்தேகமடைந்ததால், காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
அதன் பின் பொலிசார் நடத்திய விசாரணையில், அவர்கள் போலி இறப்புச் சான்றிதழை காண்பித்து இன்சுரன்ஸ் தொகையை பெற்றுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, இந்த மோசடிக்கு உதவியாக இருந்த மருத்துவர் உள்ளிட்ட ஆறு பேரை பொலிசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும், மேலும் இரண்டு பேரை தேடி வருவதாகவும் பொலிசார் கூறியுள்ளனர்.