நாடாளுமன்றத் தேர்தல் பரபரபிற்கு இணையானதாக தற்போது உள்ளூராட்சி மன்றத்தேர்தல்கள் சூடுபிடித்துள்ளன. இந்த நிலையில் அடுத்த கட்ட அரசியல் நகர்வு எவ்வாறு அமையப் போகின்றது என்ற எதிர்பார்ப்புகள் நாட்டு மக்களிடையே அதிகரித்துள்ளன.
காரணம் 2015 ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் வீழ்ச்சியடைந்ததன் பின்னர் மஹிந்த இழந்த தன் அதிகாரத்தினை மீண்டும் கைப்பற்றும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றார்.
குறிப்பாக நல்லாட்சி அரசாங்கத்தினை மாற்றியமைப்பதன் பிரதான ஆயுதமாக உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை பயன்படுத்திக் கொள்ள மஹிந்த தரப்பு திட்டமிட்டு அதற்கான காய்நகர்தல்களை படிப்படியாக செய்து வந்தது.
தற்போதைய நிலையில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களின் உத்தியோகபூர்வ முடிவுகள் வெளிவர ஆரம்பித்துள்ளன. எனினும் உத்தியோக பூர்வமற்ற முடிவுகளின் மூலம் மஹிந்த ராஜபக்ஷவின் பொதுஜன பெரமுன முன்னணியில் உள்ளதாக செய்திகள் வெளிவருகின்றன.
நாட்டின் சில பகுதிகளில் பொதுஜன பெரமுன தற்போது வெற்றிக்கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருவதாக குறிப்பிடப்படுவதோடு, “தமது வெற்றிக்கு பங்களிப்பு செய்த மக்களுக்கு நன்றிகள்” என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகள் மஹிந்த ராஜபக்ஷவினருக்கு சாதகமாக அமையும் எனின் அடுத்தகட்ட தென்னிலங்கை அரசியலில் பல்வேறுபட்ட மாற்றங்கள் ஏற்படக்கூடும் என அரசியல் அவதானிகள் தெரிவித்து வருகின்றனர்.
இன்று இரவு 9 மணிக்குள் உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் இறுதி முடிவுகள் வெளியிடப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட பின்னர் தேர்தல் வெளியீடுகளில் திடீர் தாமதநிலை ஏற்பட்டிருந்தமை சுட்டிக்காட்டப்படத்தக்க விடயமாகும்.
கணக்கிடப்பட்ட சில பிரதேச சபைத் தேர்தல் வாக்கு கணக்கெடுப்பு மீண்டும் நடத்தப்படவேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியினர் கோரிக்கை விடுத்த காரணத்தினாலேயே தேர்தல் முடிவுகளில் தாமங்கள் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
எவ்வாறெனினும் இந்தத் தேர்தல் பாரிய அரசியல் மாற்றத்தினை ஏற்படுத்தாவிடினும், கட்சி உட்பூசல்களை அதிகரிக்கும் என்றே தெரிவிக்கப்படுகின்றது.
தேர்தல் முடிவுகளின்படி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த தரப்பின் பொதுஜன பெரமுன நாடு முழுவதிலும் ஆதிக்கம் செலுத்தும் எனின் மக்கள் மத்தியில் இன்றும் மஹிந்த ஆட்சியின் தாக்கம் உள்ளது என்ற தோற்றமே ஏற்படக்கூடும். அதனைத் தொடர்ந்து நல்லாட்சி அரசுக்கு மஹிந்த தரப்பு பாரிய நெருக்கடிகளைக் கொடுக்கும் சாத்தியக்கூறுகள் ஏற்படும் என்பதே உண்மை.
குறிப்பாக இந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலை மஹிந்த தரப்பு ஆட்சிக்கு எதிராக பிரதான கருவியாக நோக்கினாலும், விமர்சனங்களை முன்வைத்தாலும்கூட உள்ளூராட்சி சபை அதிகாரத்தினைக் கொண்டு ஆளும் கட்சியை எதிர்ப்பது அல்லது ஆட்சியை மாற்றியமைத்துவிட முடியும் என்று கூறப்படுவதில் உண்மைத் தன்மை இல்லை என்றே கூறப்படுகின்றது.
ஆனாலும் மஹிந்த அணியினர் இந்தத் தேர்தல் மூலம் மக்கள் மத்தியில் தனக்கு உள்ள ஆதரவினை எடுத்துக்காட்டவே ஆயத்தமாகின்றனர் எனலாம். காரணம் எதிர்கால தேர்தல் முடிவுகளை தீர்மானித்து, இழந்த அதிகாரத்தினை மஹிந்த அணி மீண்டும் கைப்பற்றும் அடுத்த கட்ட அரசியல் நகர்வுக்கான பாதையாகவே இந்தத் தேர்தல் அமையுமே தவிர அதிகாரத்தினை மாற்றியமைக்கும் தேர்தல் இதுவல்ல என்பதும் சுட்டிக்காட்டப்பட வேண்டியதாகும்.
இதேவேளை, உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் பின்னர் சுதந்திரக்கட்சி மற்றும் ஐக்கிய தேசிய கட்சி ஆகியவற்றிக்கு இடையிலான பனிப்போர் வலுப்பெரும் என தென்னிலங்கை அரசியல் அவதானிகள் குறிப்பிடுகின்றனர்.
எவ்வாறாயிலும் அடுத்த நாடாளுமன்றத் தேர்தல், ஜனாதிபதித் தேர்தலை குறிவைத்தே இப்போதைக்கு இந்த உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் நகர்வடைந்து செல்கின்றது எனவும், முன்னரை விடவும் இனிவரும் காலங்களில் மஹிந்த ஆட்சிக்கு எதிரான செயற்பாடுகளை அதிகரிக்கக்கூடும் எனவும் அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.